![]()
அழகான பிரகலாதன். அவரை மிக அழகாக வடிவமைத்து, பார்வையாளர்களைக் கொள்ளை கொள்ளுமளவு சிறப்பாக அனிமேட் செய்துள்ளனர். தமிழ் டப்பிங்கையும் மெனக்கெட்டு நேர்த்தியாகச் செய்துள்ளனர். பிரகலாதனது உறுதியான பக்தியும், கருணை பொழியும் வதனமும் காண்போரைக் வசீகரித்து விடுகிறது. விஷ்ணுவின் அவதாரம் பின்தங்கி, பக்த பிரகலாதன் வானளவு உயர்ந்து நிற்கிறார். ‘அடியாரைப் போற்றுதல்’ என்பதே வைணவத்தின் முக்கியமான அம்சம். அதைப் படம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளது.
காஷ்யபரும் திதியும் கூடும் நேரத்தில் இருந்து படம் தொடங்குகிறது. ஹிந்துத் தொன்மத்தின் தொடக்கமே, ரிஷி காஷியபர் மற்றும் அவர் மணந்த தக்ஷனின் பதிமூன்று மகள்களிலிருந்தே விஸ்தாரனப்படுக்கிறது. திதியின் மகனான ஹிரண்யாக்ஷன், பூமாதேவியைக் கார்போதகக் கடலில் ஒளித்து வைத்துவிடுகிறார். விஷ்ணு, வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமாதேவியை மீட்கிறார். தன் தம்பியைக் கொன்ற விஷ்ணு மீது தீராப்பகையை வளர்த்துக் கொள்கிறார் ஹிரண்யகசிபு. பிரம்மனிடம் பெற்ற வரத்தின் பலனாக மூவுலகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றிற்குத் தானே கடவுளென பிரஸ்தாபித்துக் கொள்கிறார். ஆனால் அவரது மைந்தன் பிரகலாதனோ, அதி தீவிர விஷ்ணு பக்தனாகப் பிறக்கிறார். எவ்வளவு மிரட்டப்பட்டாலும், தன் விஷ்ணு பக்தியினின்று வழுவாத திடசித்தமுள்ளவனாய் இருக்கிறார் பிரகலாதன். பிரகலாதனைக் கொல்ல ஹிரண்யகசிபு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகிறது. கடுப்பாகும் ஹிரண்யகசிபு, “எங்கே இருக்கிறான் நீ வணங்கும் மாயாவியான விஷ்ணு?” எனக் கேட்டு அரசவையிலுள்ள ஒரு தூணைப் பிளக்கிறான். செங்கண் சீயம் தோன்ற, ஹிரண்யகசிபுவின் மோட்சப்படலத்துடன் சுபமாய்ப் படம் முடிகிறது.
இப்படம், ‘மஹா அவதார் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’-இல் வரவுள்ள ஏழு படங்களில் முதற்படமாகும். மகாவதார் பரசுராம் (2027), மகாவதார் ரகுநந்தன் (2029), மகாவதார் துவராகாதிஷ் (2031), மகாவதார் கோகுலநந்தா (2033), மகாவதார் கல்கி – பாகம் 1 (2035), மகாவதார் கல்கி – பாகல் 2 (2037) ஆகியவை வரவுள்ள மற்ற படங்கள். இதில், மகாவதரமான ரகுநந்தனின் பிரதான எதிரிகளான இராவணனுன் கும்பகர்ணனும், ஜெயன் – விஜயன் எனும் வைகுந்தத்திதின் வாயிற்காப்பாளர்களான துவார பாலகர்களாவர். அவர்களே தான் சத்ய யுகத்தில், ஹிரண்யகசிபுவாகவும் ஹிரண்யாக்ஷனாகவும் பிறந்திருப்பர். திரேதா யுகத்தில், ராவணனாகவும் கும்பகர்ணனாகவும், துவபார யுகத்தில் மகாவதார் கோகுலநந்தனை எதிர்க்கும் சிசுபாலனாகவும் தந்தவக்ரனாகவும் பிறப்பர். இந்த யுனிவர்ஸின் ஏழு படங்களில் மூன்று படங்களின் வில்லனாக வரும் ஜெயன் – விஜயன் கதையைச் சொல்லாமல் தவிர்த்துள்ளார் ஜெயபூர்ண தாஸ். இனி வரும் படங்களில் சொல்லக்கூடும். ஆனால் இப்படத்தில் அடித்தளம் அமைக்கத் தவறியுள்ளனர். பிரகலாதனைப் போலவே பரம பக்தர்கள்தான் ஜெயனும் விஜயனும். விஷ்ணுவைப் பிரிந்து வாழ சனகாதி ரிஷிகள் சாபமிட, அச்சாபத்திலிருந்து மீள அவர்கள் தேர்ந்தெடுக்கும் விமோசனம்தான் சிறப்பான ஒன்று. ஏழு பிறவிகள் விஷ்ணு பக்தர்களாகப் பிறக்கவேண்டும், அல்லது விஷ்ணுவிற்கு எதிரியாக மூன்று பிறிவிகள் எடுக்கவேண்டும் என இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஏழு பிறவிகள் விஷ்ணுவைப் பிரிந்திருக்க தங்களால் ஆகாதென மூன்று பிறவிகளுக்குள் சாபத்தை முடித்துக் கொள்கின்றனர் ஜெயனும் விஜயனும்.
திரைக்கதையையும் வசனத்தையும் ருத்ர பிரதாப் கோஷுடன் இணைந்து, இயக்குநர் அஷ்வின் குமார் எழுதியுள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு எல்லாம் VFX செய்யும் இந்திய அனிமஷன் நிறுவனங்களிடமிருந்து தரமான அனிமேஷன் படம் வராத குறையைப் போக்கும் விதமாக இம்முயற்சியைக் கையிலெடுத்துள்ளார். அதில் அசத்தலான வெற்றியும் கண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்.
நரசிம்மருக்கும் ஹிரண்யகசிபுவுக்குமான சண்டைக் காட்சிகளுக்கு, ஹல்க், கிங் காங் என்ற ஹாலிவுட் படங்களின் ரெஃபரன்ஸை எடுத்துள்ளனர் போலும். சண்டைக் காட்சிகள் மட்டும் தனித்து ஆர்ப்பாட்டமாகத் தெரிகிறது. நரசிம்மர் யாவருக்குமே தந்தை என்ற கருத்தை ஜெயன், விஜயன் அத்தியாயத்தைச் சொல்லியிருந்தால் வலுவாகப் பதிந்திருக்கும். ஹிந்துத் தொன்மவியலில், சாத்தான் என்ற கருத்தாக்கம் இல்லை. இந்தச் சண்டை எல்லாம் கடவுளின் லீலை, பக்தியின் மகிமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் நாடகம், இங்குக் கொல்பவனும் ஒருவனே, கொல்லப்படுபவனும் ஒருவனே என்ற கருத்தாக்கத்தை இழையாகக் கொண்டிருக்கும். அது புலப்படும் வண்ணம் திரைக்கதை அமைந்திருக்கலாம் என்ற சின்ன குறை எட்டிப் பார்க்கிறது. ஏனெனில், கொரியா, ஜப்பான், ஸ்பெயின், ரஷ்யா ஆகிய நாட்டின் மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
“உலகின் சிறந்த அனிமேஷன் படமில்லை இது. ஆனால் அதற்கான முதற்படியாக இது அமையும். இனி வரும் படங்களில் நாங்கள் அதை சாத்தியப்படுத்துவோம். அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது” என்று சொல்லியுள்ளார் அஷ்வின் குமார். 2008 இல் சிறு கனவாகவும் உரையாடலாகவும் தொடங்கிய ஒன்றைச் சுமந்து, அதைத் திரையில் பிரம்மாண்டமாகச் சாத்தியப்படுத்தியுள்ளார். இந்திய அனிமேஷன் படங்களுக்கான மிகப் பெரிய திறப்பாக இப்படம் அமையும். KGF, காந்தாரா வரிசையில் இப்படமும் ஹோம்பாலே ஃபிலிமிஸின் புகழ்க்குச் சாட்சியாக அமையப்போகிறது. தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் அசத்தியுள்ளனர், கலையும் கருத்தாக்கமும் (Art & Concept) செய்துள்ள க்லீம் ப்ரொடக்ஷன்ஸ். சாம் சி.எஸ்.-இன் பின்னணி இசை படத்தை மேலும் ரசிக்கும்படி மாயம் செய்துள்ளது. கடலில் தூக்கிப் போட்டு, விஷ்ணுவால் காப்பாற்றப்படும் பிரகலாதன், பக்திப் பரவசத்தோடு பாடிக் கொண்டே வரும் காட்சி சகல அற்புதமாக அமைந்துள்ளது. கண்ணைக் கவரும் விஷுவல்கள் படத்தின் மிகப் பெரிய பிளஸ்.


