

கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் மெஷின் கிடைப்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படம், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பரபரப்புடன் சொல்கிறது. இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய நடிகை அன்னா பென், “இது எனது இரண்டாவது தமிழ்த் திரைப்படம். கொட்டுக்காளி படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது நீங்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த மீனா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் எதிர்மாறான ஒரு வேடத்தில் தான் ‘கான் சிட்டி’ படத்தில் நடித்திருக்கிறேன்.
இயக்குநர் ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதாபாத்திரத்தை என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில் இருக்கும் கதாபாத்திரம் அது. நடிப்புப் பாணியும், வெளிப்பாடும், கதாபாத்திரத்தின் அளவும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அதனால் அது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.
பல கமர்ஷியல் கதைகளை நான் இதற்கு முன் கேட்டிருந்தாலும், அந்த உலகத்தில் நான் எப்படி பொருந்துவேன் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஹரிஷ் என் மீது முழு நம்பிக்கை வைத்தார். ‘நீங்கள் இதைச் செய்ய முடியும். இது வித்தியாசமாகவும், யாரும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கும்’ என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அந்த நம்பிக்கையே இந்தக் கதாபாத்திரத்தை செய்ய எனக்கு தைரியம் கொடுத்தது.
அர்ஜூன் தாஸுடன் பலமுறை இணைந்து பணியாற்ற முயற்சி செய்திருந்தேன். இந்தப் படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது. வடிவுக்கரசி மேம் ஒரு லெஜெண்ட். அவருடன் பணியாற்றியது எனக்கு ஒரு கனவு நிறைவேறிய அனுபவம். மூத்த கலைஞர்களுடன் பணியாற்றும்போது அவர்கள் பகிரும் அனுபவங்கள் எனக்கு எப்போதும் மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்தப் படப்பிடிப்பின் போது அவர் என்னுடன் நிறைய நேரம் செலவிட்டு, தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழ் வசனங்களைப் பேசுவதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்த பயத்தைப் போக்கவும் உதவினார்.
யோகி பாபு சார் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவர் என்னுடைய ஆயுளை பத்து வருடம் அதிகரித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் எப்போதும் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். காட்சிக்கு நடுவிலும், கேமரா பின்னாலும் அவர் சொல்வதெல்லாம் நம்மைச் சிரிக்க வைக்கும். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.
நடிகர் அர்ஜூன் தாஸ், “ ‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படம். இதில் உணர்ச்சிகளும் இருக்கின்றன, நகைச்சுவையும் இருக்கிறது, அதே நேரத்தில் மனதைத் தொடும் ஒரு அழகான கதையும் இருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அன்னா பென், வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு, அருள்தாஸ் மற்றும் மற்ற அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அற்புதமான இசையை வழங்கியுள்ளார். தொழில்நுட்பக் குழுவின் உழைப்பும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது” என்றார்.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், “வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் அவரை தேர்வு செய்தது எனது வாழ்க்கையின் மிகச் சரியான முடிவுகளில் ஒன்று என்று சொல்லலாம்.
அன்னா பென் இந்தப் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். அதேபோல் யோகி பாபு அண்ணா எனக்கு மிகவும் தனிப்பட்ட ஆதரவாக இருந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் படம் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர் அவர்தான். இந்தப் படத்திற்காக அவர் அளித்த ஒத்துழைப்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
அதேபோல் அர்ஜுன் தாஸ் சார் இந்தப் படத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் ‘கான் சிட்டி’ உருவாகியிருக்காது. மிகுந்த அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தொழில்நுட்பக் குழு:-
இயக்கம் – ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு – Power House Pictures
ஒளிப்பதிவு – அரவிந்த் விஸ்வநாதன்
படத்தொகுப்பு – அருள் மோசஸ்
இசை – ஷான் ரோல்டன்
கலை – ராஜ் கமல்
உடை வடிவமைப்பு – நவா ராம்போ ராஜ்குமார்
சண்டை – ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

