கூழாங்கல் படத்தினை இயக்கிய P.S.வினோத்ராஜின் இரண்டாவது படம். முதற்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவா தயாரித்திருந்தனர்; இரண்டாவது படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடகக்ஷன்ஸில் இயக்கியுள்ளார். வழக்கமான வணிக, மசாலா படங்களைத் தவிர்த்து பார்வையாளர்களின் சிந்தனையைக் கோரும் படங்களை எடுப்பதற்காகவே இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
கொட்டுக்காளி என்றால் அழுத்தமான பிடிவாதக்காரி எனப் பொருள் கொள்ளலாம். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் மீனாவை சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர் மீனாவின் பெற்றோரும், பாண்டியின் குடும்பத்தினரும். மீனாவின் முறைமாமன் பாண்டி ஆவார். வீட்டிலிருந்து கிளம்பி சாமியாரின் இருப்பிடம் வரையிலான அவர்களது பயணமே இப்படம்.
ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், வினோத்ராஜின் படத்தில் ஒருநாள் நிகழும் சம்பவங்கள்தான் திரைக்கதையாக்கப்படுகிறது. அவரது முதற்படத்தைப் போலவே, இப்படமும் ஒரு பயணத்தை மையப்படுத்தியது. அப்படத்தினைப் போலவே, மலை இவர்களது பயணத்திற்கான சாட்சியாகப் பின்னணியில் வருகிறது. ஒரே வித்தியாசம், அப்படத்தில் இரண்டு பேர் நடக்கிறார்கள், இப்படத்தில் எட்டு ஆண்களும், நான்கு பெண்களும், ஒரு சிறுவனும், ஒரு சேவலும், 3 இருசக்கர வாகனத்திலும் ஒரு ஷேர் ஆட்டோவிலும் செல்கின்றனர்.
கூழாங்கல், கொட்டுக்காளி என இரண்டு படமும் முன்வைப்பது அன்றாட வாழ்வில் நிகழும் டொமஸ்டிக் வயலன்ஸை மையப்படுத்தியதே! கதைச்சொல்லல் முறையில் கூழாங்கல்லைப் போல் தெரிந்தாலும், இம்முறை குடும்பம் என்ற சமூகக் கட்டமைப்பிற்குள் நிகழும் வன்முறையை மிக அழுத்தமாகவும் நேரடியாகவும் பதிந்துள்ளார் வினோத்ராஜ். பாண்டியாக நடித்துள்ள சூரிக்குப் படத்தில் இரண்டு தங்கைகள் உள்ளனர். ‘அந்தக் கொட்டுக்காளியை ஏன் கட்டுவேன்னு பிடிவாதம் பிடிக்கிற?’ எனக் கேட்கும் கல்யாணமாகிவிட்ட தங்கையை அடிக்கிறார் சூரி. அண்ணன் திட்டினாலும் சரி, அடித்தாலும் சரி, அண்ணன் மீது மிகவும் பாசமுள்ள தங்கைகளாகவே இருக்கிறார்கள். பொதுப்பார்வைக்கு அமைதியானவனாக இருந்தாலும் அவன் அப்படியில்லை என்பதை அறிமுகத்திலேயே சொல்லிவிடுகின்றனர்.
ஆனாலும், ஆட்டோவில் போகும்பொழுது அவர் திடீரென்று மீனாவாக நடித்திருக்கும் அன்னா பென்னை இழுத்துப் போட்டு சாத்தும்போது மனம் துணுக்குறச் செய்கிறது. மீனா வேறொருவரைக் காதலித்து, அவர் ஞாபகமாகவே இருப்பதால் அடிப்பதாகவும், ஏன் கொன்றே போட்டிருப்பேன் என மீனாவின் தந்தையிடமே சொல்கிறார் சூரி. ஒரு ஆணின் இத்தகைய கோபமும், கைநீட்டும் குணமும் நார்மலைஸ் செய்யப்பட்டு, அவை சாதாரணம் என ஏற்றுக் கொள்கின்றனர் சுற்றியுள்ள பெண்கள். கொட்டுக்காளியான மீனா தன்னைத் தனக்குள் ஒடுக்கிக் கொள்வதன் மூலம், ஒரு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். பேய் பிடித்துள்ளது என அக்குடும்பத்திலுள்ள பெண்கள் உட்பட அனைவரும் நம்புகின்றனர். அடக்குமுறைக்கு உள்ளாவதே நார்மல் என்றாகிவிட்டது குடும்பத்தில் பெண்களின் நிலை. எதற்கும் அசைந்து கொடுக்காத பெண்ணாக இறுக்கமான முகத்துடன் அன்னா பெண் நடித்துள்ளார். கதையின் நாயகனாக சூரி யதார்த்தமான பாத்திரத்தில் வருகிறார்.
பலியிட வளர்க்கப்படும் சேவலையும், தலைவாரி ஒப்பனை செய்யப்படும் மீனாவையும் ஒரே சட்டகத்திற்குள் கொண்டு வந்து குறியீடாகக் காட்டியுள்ளார் இயக்குநர். “அவன் அடிக்க மட்டும்தான் செஞ்சானா?” என இப்படத்தில், அன்னா பென்னுக்கு ஒரே ஒரு வசனம்தான். ஒட்டுமொத்த படத்தின் சாராம்சத்தையும் அது உள்ளடக்கியதாக உள்ளது. அவன் என்ன செய்தான் என்பது படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கோ, சுற்றியிருந்த உறவினர்களுக்கோ தெரியாது. அதே போல், சாமியார், ஒரு பெண்ணுக்கு வைக்கப்படும் மருந்தை எடுக்கும்பொழுது செய்பவை எதுவும் அப்பெண்ணின் உடன் வந்தவர்களுக்குப் புரிவதில்லை. பயபக்தியுடன் எதற்குச் சாட்சியாக இருக்கோம் என்றே தெரியாமல் நிற்கிறார்கள். ஆனால், மீனாவை அடித்த பாண்டிக்கு மட்டும் புரிகிறது. பொதுவெளியிலேயே சுற்றியிருப்பவர்களின் கண்களைக் கட்டிவிட்டு, ஒரு பெண்ணின் மீது ஆண் நிகழ்த்தும் வன்முறையை இத்தனை நுணுக்கமாக வேறு எந்தப் படைப்புமே சொன்னதில்லை.
கலகலப்பிற்கும் பஞ்சமில்லாமல் பயணிக்கிறது படம். பின்னணி இசையில்லாவிட்டாலும் படத்தை முழுமையாக ரசிக்கமுடிகிறது. முடிவு மட்டும், திடீரென மின்சாரம் போனது போல் எதிர்பாராத் தருணத்தில் சட்டென கருப்புத்திரை தோன்றித் திகைக்க வைக்கிறது. பேசிக் கொண்டிருக்கும்போதே ஒருவர் வாசற்கதவைப் படாரெனச் சாத்திவிடுவது போல் நம்மைக் கத்திரித்து விட்டுவிடுகிறது படம். முடிவில்லாத படமாகக் கருதத் தோன்றுகிறது. படம் இன்னதுதான் சொல்ல வருகிறதோ என பார்வையாளர்கள் அவரவர்களுக்கே உரித்தான புரிதலின்படி இட்டு நிரப்பிக் கொள்ளுமாறு ஓப்பன் எண்டிங்காக இயக்குநர் P.S.வினோத்ராஜ் முடித்துள்ளார்.