32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“மாயாஜாலத்தை ஏற்படுத்தியுள்ளார் சமுத்திரக்கனி” – வெற்றிமாறன் | கருடன்

Dinesh R சேலம் Published: 21/05/2024 3 நிமிட வாசிப்பு Updated: 22/05/2024 சினிமா
எழுத்து அளவு:

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K. குமார் தயாரித்திருக்கிறார்.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ”இயக்குநர் துரை செந்தில்குமார், நடிகர் சூரி இணைந்து பணியாற்றும்போது ‘கருடன்’ படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருந்தது.

‘அது ஒரு கனாக்காலம்’ படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு உடல் நலமில்லை. சிக்கலான காலகட்டத்தில் பாலு மகேந்திராவுடன் 60 நாள், அவருடனே தங்கி அவருடைய உடல் நலத்தைப் பராமரித்து மீட்டெடுத்தார். அவரிடம் அப்போது, ‘இது எப்படி உன்னால் முடிந்தது?’ என ஆச்சரியத்துடன் கேட்டேன். ‘நம் வீட்டில் நம் தந்தைக்கு இப்படி ஏற்பட்டால் என்ன செய்வோமோ, அதைத்தான் நான் இங்கு செய்தேன்’ என்றார்.‌ இதுதான் செந்தில். படப்பிடிப்புத் தளத்தில் எந்தவித சிக்கலையும் உருவாக்காமல் இயல்பாகவும் அன்பாகவும் பழகக்கூடியவர்.

விடுதலை படத்திற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை தான் சூரியைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன். விடுதலை படத்தின் பணிகள் தொடங்கும் போது தான் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்னிடம் தயாரிப்பாளர் குமாரை அறிமுகப்படுத்தி ‘கருடன்’ என்று ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.‌ செந்தில் தான் இயக்கவிருக்கிறார் என என்னிடம் சொன்ன போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

செந்தில் என்னைச் சந்தித்து, இப்படி ஒரு கதாபாத்திரம், இப்படி ஒரு நடிகர் என இந்தப் படத்தைப் பற்றி நிறைய விசயங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்போது கதை விவாதத்தின் போது ஆலோசனை சொல்வது போல் இதனை இப்படிச் செய்து கொள்ளலாம், அதனை அப்படிச் செய்து கொள்ளலாம் என்று நான் சொன்னேன்.‌

அதன் பிறகு ஆதி கதாபாத்திரத்திற்கு சசிகுமாரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறோம் என்று சொன்னபோது, முதலில் வியந்தேன்.‌ ‘அவர் ஒப்புக் கொள்வாரா?’ என்ற தயக்கமும் இருந்தது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அப்போதும் அவர் சூரிக்காகத்தான் இந்தக் கதையை நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்வதற்கும், அதைச் செய்வதற்கும் ஒரு மனசு வேண்டும். இதற்காக நான் சசிக்குமாரை மனதார பாராட்டுகிறேன்.

படம் பார்த்துவிட்டேன். படத்தில் சசிகுமாருக்கு அழுத்தமான வேடம். அது அவருக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல அனைவரும் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் மூலம் கதைக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்திருக்கிறது. இந்த மாயாஜாலத்தை ஏற்படுத்திய சமுத்திரக்கனிக்கும் என்னுடைய பாராட்டுக்கள். படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். படத்தின் தயாரிப்பாளர்.. இயக்குநர் செந்தில் விவரித்ததை போல் சிறந்த தயாரிப்பாளரா எனத் தெரியவில்லை. ஆனால் படைப்பின் மீது அக்கறை கொண்ட தயாரிப்பாளர் என்று மட்டும் தெரிய வருகிறது. அவருக்கும் இந்தப் படத்தின் மூலம் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.