சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K. குமார் தயாரித்திருக்கிறார்.
நடிகை வடிவுக்கரசி, ”இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதைத் தவறவிட்டிருந்தால், என்னுடைய செல்லப்பிள்ளைகளை மேடையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. சூரி போன்ற திறமையான நடிகரைக் கண்டறிந்து வழங்கியதற்காக இயக்குநர் வெற்றி மாறனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் தாமதமாகத்தான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாளை படப்பிடிப்பு என்றால் அதற்கு முதல் நாள் இரவு தான் நான் நடிப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டேன். பிரபஞ்சம் கொடுக்கும் அதிர்ஷ்டத்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக சென்னையிலிருந்து காரில் கிளம்பி இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றேன்.
ஆலயத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற போது முதலில் இயக்குநரைச் சந்தித்து, இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக என்னைத் தேர்வு செய்தமைக்கு நன்றி என்றேன். இந்தத் திரைப்படத்தில் உன்னி முகுந்தனின் அப்பத்தாவாக நடித்திருக்கிறேன். அவருக்கு நண்பர் சூரி. இவர்கள் இருவருக்கும் நண்பர் சசிகுமார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகுதான் இந்தத் திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் நடிக்கிறார்கள் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன்.
இந்தத் திரைப்படத்தில் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவாளர் என்றவுடன் எனக்கு நிம்மதி பிறந்தது. ஏனெனில் அவர் ஒப்பனை செய்து கொள்ள விட மாட்டார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிடைத்த ஓய்வு நேரத்தில் தான் சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவருடைய நடிப்பைக் கண்டு வியந்து போனேன். சில நாட்கள் கழித்து படப்பிடிப்புத் தளத்தில் சூரியைச் சந்தித்தவுடன் அவரைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினேன்.
படப்பிடிப்பின் போது சூரி நடித்துக் கொண்டிருப்பார். அப்போது இயக்குநர், ‘சூரி தெரிய வேண்டாம். சொக்கன் தான் தெரிய வேண்டும்’ என்பார். அந்த அளவிற்கு இயக்குநர் நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வேலை வாங்கினார். சமீப காலங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய திரைப்படம் இது. இதே சந்தோஷத்துடன் விரைவில் சிவகார்த்திகேயன் உடனும் ஒரு படத்தில் நடிப்பேன் என எதிர்பார்க்கிறேன்.
‘இடம் பொருள் ஏவல்’ எனும் படத்தில் பதினைந்து நாட்கள் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி உடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் இனிமையானவர். ஒரு திரைப்படத்தில் அனைவரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியாகவும் பணியாற்றும்போது எங்களை அறியாமல் எங்களுடைய ஆசிகள் இந்த படத்திற்கு உண்டு. இவை ரசிகர்களிடமும் பரவி படம் வெற்றி அடையும். இதனை மேலும் வெற்றி பெற ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து, இந்தத் திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, “இந்த நிகழ்வில் வடிவுக்கரசி அவர்களின் பேச்சு பிரமாதமாக இருந்தது. அவருடைய பேச்சில் ஒரு இயக்குநர் படப்பிடிப்புத் தளத்தை எவ்வளவு உற்சாகமாக சௌகரியமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது.
வெற்றிமாறன் செந்தில்குமாரைப் பற்றிச் சொல்லும் போது சக மனிதர்களை நேசிக்கும் மிக இனிமையான மனிதர், நல்லவர், வல்லவர் எனக் குறிப்பிட்டார். இதனால் விரைவில் செந்தில்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
யாராவது ஒருவர் வெற்றி பெற்று விட்டால் அவரது தொடக்க காலகட்டத்தில் தான் முன்னேறுவதற்கு ஊக்கமளிப்பார்கள். அதன் பிறகு மறந்து விடுவார்கள். ஆனால் சூரி நடிகராக அறிமுகமாகி இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பெரிய சாதனை தான்.
காமெடியனாக இருக்கும்போது ஒரு காட்சியைக் கொடுத்தால், அதை அவருடைய கோணத்தில் உள்வாங்கி எப்படி திரையில் தோன்றி சிரிக்க வைப்பது என யோசித்து, அந்தக் காட்சியின் ஏற்ற இறக்கங்களைக் கணித்து அதன் பிறகு இயக்குநருடன் பேசி நடிப்பது என்பது ஒவ்வொருவரும் பயன்படுத்தும் ஒரு உத்தி. நானும், சூரியும் ஒரு சில படங்களில் மட்டும் தான் இணைந்து நடித்திருக்கிறோம்.
ஒரு படத்தில் காமெடிக்காக மட்டுமே யோசித்து நடித்த நடிகர், அதில் பெற்ற பயிற்சியை மனதில் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என விரும்புகிறார். இதற்காக சூரியைப் பாராட்டுகிறேன். விடுதலை படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படம் நடித்திருக்கிறார். தொடர்ந்து அவர் பல உயரங்களைத் தொடுவார். இதற்கு இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்த, ‘இயற்கையும் கடவுளும் அவருக்குத் துணையாக இருக்கும்’ என்ற வசனங்களே சான்று. அவருடைய அடுத்தடுத்த படங்களும் அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சூரியைப் பார்த்து மிகவும் நான் ரசிக்கிறேன். நம் மண்ணுக்கேற்ற முகம். கருப்பான அழகன். மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.