சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K. குமார் தயாரித்திருக்கிறார்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் துரை செந்தில்குமார், “இயக்குநர் பாலு மகேந்திராவிடம் பணியாற்றும்போது இயக்குநர் வெற்றிமாறன் எனக்கு சீனியர். நான் கடைசி உதவியாளர். அன்று முதல் இன்று வரை என்னை ஒரு சகோதரராகவே பாவித்து, அனைத்து வித ஆதரவுகளையும் வழங்கி, என் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டி என்னுடன் தொடர்ந்து பயணிப்பவர். அவருக்கு முதலில் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரைத் தொடர்ந்து, கலை இயக்குநர் துரைராஜ் அவர் மூலமாகத்தான் இந்தப் படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்திற்காக 73 நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். அனைத்து நாட்களிலும் என்னுடன் இருந்து படப்பிடிப்புக்கு உதவிய துரைராஜுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தயாரிப்பாளர் குமார், தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றி அனுபவம் பெற்ற பிறகு படத்திற்கு தயாரிப்பாளராகியிருக்கிறார். அவரிடம் கதையைச் சொல்லி முடித்த பிறகு, 55 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நிறைவு செய்துவிடலாம் எனச் சொன்னேன். அதற்காக ஒரு பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன். படத்தில் நடிக்க வேண்டிய நடிகர்கள் குறித்து ஒரு பட்டியலை அவர் என்னிடம் சொன்னார். அதைக் கேட்கும் போது 55 நாட்கள் பட்ஜெட் என்ற விசயத்தை நினைவுப்படுத்தினேன். அப்போது அவர் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்குவோம் என்றார். ‘படத்திற்கு இசை யார்?’ என்று கேட்டபோது, யுவன் சங்கர் ராஜா என்று சொன்னார். நான் மீண்டும் அவரிடம் 55 நாட்கள் + பட்ஜெட் என்று நினைவுப்படுத்தினேன். மீண்டும் அவர் படைப்பை பிரம்மாண்டமாக உருவாக்குவோம் என்றார். படத்தை விளம்பரப் படுத்துவதற்காக தனியாகப் படப்பிடிப்பு நடத்துவோம் என்றார். அப்போது, ‘சார் ! பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு தானே அதை செய்வார்கள்’ என்று சொன்னபோது, நம்முடைய படமும் பிரம்மாண்டமான படம் தான் என்றார். இப்படி படம் முழுவதும் நான் சொன்ன பட்ஜெட்டை விட அவர் ஒரு பட்ஜெட்டைச் சொன்னார். குறிப்பாக இடைவேளை காட்சியில் நடிப்பதற்காக ஆயிரம் நபர் தேவை. குறைந்தபட்சம் எழுநூறு நபராவது வேண்டும் என்றேன். அவர் ஆயிரம் நபர்களை அழைத்து வந்து நடிக்க வைத்தார். அதேபோல் படத்தில் இரண்டாம் பகுதியில் ஒரு ஐட்டம் சாங் வைக்கலாம் என்று திட்டமிட்டு, அதற்காக ஒரு பாடலையும் உருவாக்கினோம். ஆனால் அதனைப் படமாக்கவில்லை. ஒருமுறை படப்பிடிப்புத் தளத்திற்கு தயாரிப்பு நிர்வாகி வந்த போது அவரிடம் இது குறித்து விவரித்தேன். அப்போது அவர் அந்த ஐட்டம் சாங் பாடலுக்கு மூன்று நடிகைகளை முதன்மையாக நடனமாட வைத்து பிரம்மாண்டமாகப் படமாக்கலாம் என தயாரிப்பாளர் சொல்கிறார் என்ற விவரத்தை என்னிடம் சொன்னார்.
இப்படி படம் நெடுகிலும் தயாரிப்பாளர் படத்தின் பட்ஜெட்டை உயர்த்திக் கொண்டே சென்றார். அவருடைய சூட்சமம் எனக்குப் பிடித்திருந்தது. படத்தின் பணிகள் தொடங்கும் போது இயக்குநரான என்னிடம் ஒரு பட்ஜெட்டைச் சொல்லிவிட்டு, ஆனால் அவர் மனதில் அதைவிட பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறார். அதை நோக்கி என்னையும், பட குழுவினரையும் சிறிது சிறிதாக அழைத்துச் சென்றார். இப்போது கூட, ‘இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஆன்லைனில் நடத்துகிறோமா?’ எனக் கேட்ட போது, ‘இல்லை சத்யம் தியேட்டரில் பிரம்மாண்டமாக நடத்துகிறோம்’ என்றார். இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீடு இருக்கிறது. அதையும் பிரம்மாண்டமாகவே செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
படத்திற்காகச் சண்டைக் காட்சிகளைப் படமாக்கும் போது நாயகனின் கதாபாத்திரத்தைத் தவறவிட்டு விடுவோம். அவர்கள் காட்சிகளில் வேறு மாதிரியாக நடித்திருப்பார்கள். சண்டைக் காட்சிகளின் போது வேறு மாதிரியாக நடிப்பார்கள். அதுபோல் இல்லாமல் இந்தப் படத்தில் சொக்கன் கதாபாத்திரம் எப்படியோ, அதே போல் அவனுக்கேற்ற வகையில் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறோம். அந்தக் கதாபாத்திரத்தின் நீட்சியாகவே அனைத்து சண்டைக் காட்சிகளையும் உருவாக்கி இருக்கிறோம். இதற்காக சண்டைப் பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிமாறன் சார் படத்தின் பணிகள் தொடங்கும்போதே சண்டைக் காட்சிகளை நன்றாக படமாக்குங்கள் என அறிவுறுத்தினார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து அவர் படம் பார்க்கும் போது சொன்ன ஒரே விசயம் படத்தில் சண்டை காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறாய் எனப் பாராட்டினார்.
நான் இதுவரை ஐந்து திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன் யாருடனும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. இந்தப் படத்திற்கு பிறகு ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்கான காரணத்தை வரும் மேடைகளில் விரிவாகச் சொல்கிறேன்.
இந்தத் திரைப்படத்தில் வடிவுக்கரசியையும் சேர்த்து ஐந்து நாயகிகள். அனைவரும் இந்தத் திரைப்படத்தில் அழுத்தமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஏனெனில் கதை அப்படித்தான் அமைந்திருக்கிறது. சமுத்திரகனிக்குத் தொலைபேசி மூலமாக கதையைச் சொன்னேன். கதையைக் கேட்டதும் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அப்போதே எனக்குள் அவரிடம் உள்ள எனர்ஜி கிடைத்து விட்டது. அவர் தண்ணீர் போன்றவர். எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதில் இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைத் துல்லியமாக உணர்ந்து நடிப்பவர்.
இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது முதல் பாசிட்டிவிட்டி உன்னி முகுந்தன் தான். படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு இந்தக் கதாபாத்திரத்திற்கு உன்னி முகுந்தனிடம் கேட்கலாம் என தயாரிப்பாளர் ஆலோசனை சொன்னார். அப்போது ‘மாளிகாபுரம்’ எனும் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. அவர் பல கதைகளைக் கேட்டு எதிலும் நடிக்காமல் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் நாங்கள் அவரைச் சந்தித்தோம். இந்தக் கதையை கேட்டு முடித்தவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். அவரும் தனுஷின் ‘சீடன்’ படத்திற்கு பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கிறார். அவருக்குள்ளும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. படப்பிடிப்புத் தளத்தில் அவர் வேட்டைக்குச் செல்லும் புலியின் தாகத்துடன் இருந்தார்.
இந்தப் படத்தின் கதைக்கு இரு தூண்கள். அதில் ஒருவர் சசிகுமார். அவர் ஏற்று நடித்திருக்கும் ஆதி எனும் கதாபாத்திரம் தான் இப்படத்தின் மையப் புள்ளி. இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பாரா, மாட்டாரா என்ற தயக்கம் எங்களிடமிருந்தது. ஆனால் சூரியின் நட்புக்காக ஒப்புக்கொண்டார். படப்பிடிப்புத் தளத்தில் உன்னி முகுந்தன் புலி என்றால் சசிகுமாரை வேட்டைக்குச் செல்லும் சிங்கம் என்று சொல்லலாம்.
சிங்கத்திற்கும் புலிக்கும் இடையே சிக்காமல் தப்ப வேண்டிய வேட்டைக்காரர் சூரி. படத்தைத் தொடங்கும் போது வெற்றிமாறன், ‘சூரிக்காக நான் ஒரு அளவுகோலை உருவாக்கி இருக்கிறேன். அதனை நீயும் மீறி விடாதே, சூரியையும் மீற விடாதே!’ என எச்சரித்தார். அதனால் படப்பிடிப்புத் தளம் முழுவதும் சூரி முழுமையான அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்தார். மேலும் சூரியின் நிலைமை எனக்கு நன்றாகப் புரிந்தது. கையில் ஒரு கண்ணாடி கூண்டுடன் அதில் தங்க மீனை வைத்துக் கொண்டு வேகமாக ஓட வேண்டும் என்ற நிலையில் அவர் இருந்தார். அதனால் படத்தைப் பார்த்துப் பார்த்து நேர்த்தியாகச் செதுக்கி இருக்கிறோம்.
நானும் ஒரு இன்ட்ரோவெட். யுவன் சங்கர் ராஜாவும் ஒரு இன்ட்ரோவெட். அதனால் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. இருந்தாலும் படத்தில் அவருடைய உழைப்பு பெரிதாகப் பேசப்படும்.
சில படங்களில் எல்லாக் கதாபாத்திரங்களின் கோணத்திலிருந்தும் கதை அமையும் என எதிர்பார்ப்போம். அதற்கான வாய்ப்பு கிடைக்காது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களின் கோணங்களில் இருந்தும் கதை பயணிக்கும். அது போன்று கதை அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களில் ஒவ்வொருவருடைய கோணங்களிலிருந்தும் இந்தக் கதையைப் பார்க்கலாம். இதனை அந்த வகையில் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம் என நினைக்கிறேன். மூன்றாண்டு இடைவெளிகளில் நான் கற்றுக்கொண்ட சில நல்ல விசயங்களையும் இதில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.