32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

Dinesh R சேலம் Published: 07/06/2023 5 நிமிட வாசிப்பு Updated: 19/06/2023 Trailer
எழுத்து அளவு:

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.

கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தப் படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார்.

இந்தப் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், “இது உண்மையிலேயே சந்தோஷமான ஒரு விழா. இயக்குநர் ராம் சங்கையா கதை சொன்ன உடனே இந்தப் படம் பண்ணவேண்டும் என முடிவெடுத்து விட்டேன். மண்வாசனை கலந்த கதை. அதில் உள்ள உண்மைத்தன்மையுடன் அவர் பார்த்து வளர்ந்த நிகழ்வுகளைக் கொஞ்சம் கற்பனையில் சேர்த்து புனைவு கதையாக உருவாக்கி உள்ளார். இந்தக் கதைக்கு நாங்கள் முதலில் நினைத்த நடிகர் பசுபதியே இந்தப் படத்தில் எங்களுடன் இணைந்தார். அதே போல் தான் ரோகிணியும். வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேனியில் ஒரே கட்ட படப்பிடிப்பாக இதை நடத்தி முடித்துள்ளோம். இந்தப் படத்தில் நடித்துள்ள ‘தண்டட்டி’ அப்பத்தாக்களால் படப்பிடிப்பே கலகலப்பாக இருந்தது. அத்தனை பேரும் இயக்குனருக்கு டஃப் கொடுத்தார்கள். அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இன்றைய சூழலில் மெதுவாக சில விஷயங்களில் இருந்து விலகி வருகிறோம். அப்படி ஒரு விஷயமான தண்டட்டி பற்றி இந்தப் படம் உருவாக்க வேண்டும் என நினைத்தோம். பாட்டிகளை, அப்பத்தாக்களை கட்டிப் புடிக்கும் பேத்திகள் தருகின்ற அன்பு முத்தம் தான் இந்தப் படம்” என்றார்.

கலை இயக்குனர் வீரமணி, “தண்டட்டி இன்னும் எவ்வளவு நாள் இருக்குமோ தெரியாது. நாங்கள் பல வருடங்களாகப் பார்த்துப் பழகிய பொருள். அதற்குத் திரை வடிவம் கொடுத்துள்ளார் இயக்குநர் ராம் சங்கையா. அவரது வாழ்க்கை தான் இந்தப் படம். இந்தப் படத்தில் ஒரு வீடு தான் அதிக காட்சிகளில் இடம்பெற்றுள்ளது. அதற்காக இயக்குனர் ஒரு பொருத்தமான வீட்டைத் தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் படப்பிடிப்புக்குச் செல்லும்போது அங்கே புதிய வீடு கட்டி விட்டனர். ஆனால் இயக்குநர் விரும்பிய அதே மாதிரி வீடு செட் அமைத்துக் கொடுத்தோம். செட் என யாருமே அதை நம்பவில்லை. அதில் எனக்கு சந்தோசம்” என்றார்.

பாடலாசிரியர் ஏகாதசி பேசும்போது, “18 வருடமாக பாடலாசிரியராக இருக்கிறேன். நான் சினிமாவில் பாடலாசிரியராக நுழைவதற்கு நடிகர் பசுபதி தான் காரணம். அது அவருக்கே கூடத் தெரியுமா இல்லை மறந்து இருப்பாரா என்று தெரியவில்லை. விருமாண்டி படப்பிடிப்பு சமயத்தில் நான் எழுதிய பாடலை என் நண்பன் பாடிக் காண்பித்தபோது, அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பசுபதி, அவர் புதிதாக ஹீரோவாக நடிக்கும் படத்தில் இந்தப் பாடலை பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். ஆனால் சில சூழ்நிலையால் அந்தப் படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. இந்தப் படத்தில் நகைச்சுவை, எதார்த்தம், மண்வாசனை என எல்லா அம்சங்களும் நிறைந்துள்ளது. இயக்குநர் சங்கையா சொன்ன ஒரு காதல் என்னை நடுங்க வைத்து விட்டது. இதில் மூன்று பாடல் எழுதிக் கொடுத்துள்ளேன். பட்டினத்தார் பாடலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இசையமைப்பாளர் K.S. சுந்தரமூர்த்தி, “இயக்குநர் ராம் சங்கையாவுடன் 2019இல் இருந்து பயணித்து வருகிறேன். இந்தப் படத்தின் கதை சொல்லும்போது அந்தக் கிராமத்து மொழியில் அழகாகச் சொல்லுவார். தண்டட்டி பாடலுக்காக டியூன் எதுவும் போடவில்லை. பாடலாசிரியர் ஏகாதசி எழுதிய சந்தத்திற்கு இரண்டு விதமாக வெர்சனில் அந்தப் பாடலை உருவாக்கினோம். அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ‘காக்கி பையன்’ பாடலுக்கு நிறைய பேரைப் பாட வைத்து அதில் அந்தக் கிராமத்து மண்ணுக்கு ஏற்ற பாடகர் மீனாட்சி ராஜா என்பவரைத் தேர்வு செய்து பாட வைத்தோம்” என்று கூறினார்.

நடிகை அம்மு அபிராமி, “இந்தக் கதையை இயக்குநர் சொன்னாதும், ‘நான் தான் இந்தப் படத்தில் நடிப்பேன். வேறு யாரையும் தேர்வு செய்யக் கூடாது’ எனச் சொல்லி விட்டேன். இந்தப் படத்தில் கிராமத்தில் இவ்வளவு அப்பத்தாக்களுடன் நடித்தது மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. பசுபதி சாரின் மிகப் பெரிய ரசிகை நான். அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி” என்று கூறினார் .

நடிகர் விவேக் பிரசன்னா, “தங்கமான மனிதர்கள் சேர்ந்து தங்கத்தைப் பற்றிச் சொல்லி இருக்கும் படம் இது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இது எனக்கு இரண்டாவது படம். பசுபதியும் ரோகினியும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் என்றதுமே உடனே இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்து விட்டேன். இதுவரை நான் பண்ணாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு மோசமான குடிகாரன் கதாபாத்திரம் எனக்கு. இதற்காக தாடி வளர்க்க வேண்டும் என என்னிடம் கூறினார் இயக்குநர் ராம் சங்கையா. ஆனால் நான் அப்போது கிளீன் ஷேவ் செய்திருந்தேன். ஆனாலும் இயக்குநரிடம் குடிகாரன் என்றால் தாடி வைத்து தான் இருக்க வேண்டுமா, எங்கள் ஊரில் கிளீன் ஷேவ் செய்த ஒரு நபர் தினசரி காலையிலேயே குடிக்க வந்து விடுவார் என்று கூறி அவரைக் கன்வின்ஸ் செய்து இந்தக் கதாபாத்திரத்தை அவரிடம் இருந்து பிடுங்கி நடித்தேன்” என்று கூறியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி, “படத்தின் டைட்டிலில் இருக்கும் பலம் படத்திலும் இருக்கும். ஒரே கட்ட படப்பிடிப்பாக நடத்தி முடிக்க வேண்டி இருந்ததால ஒரு ஷாட் கூட வீணாக்காமல் படமாக்கினோம். இயக்குநர் ராம் சங்கையா இது போன்று இன்னும் நிறைய கதைகளை வைத்துள்ளார்” என்று கூறினார்.

இந்த நிகழ்விற்குப் படத்தில் நடித்த அனைத்து தண்டட்டி அப்பத்தாக்களும் வருகை தந்திருந்தனர். விழா நிகழ்வின் இறுதியில் இந்தப் படத்தின் ட்ரைலரை பசுபதி வெளியிட பாட்டிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெற்றுக் கொண்டனர். குலுக்கல் முறையில் பாட்டிகளின் பெயர் எழுதப்பட்டு அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ஒன்றரை பவுன் தண்டட்டி பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல அனைத்து பாட்டிகளுக்குமே விலை உயர்ந்த பரிசுகளும் தயாரிப்பாளரால் வழங்கப்பட்டது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.