Search

சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை – சாமானியன் Vs சாமியார்

இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய கோர்ட் டிராமாவான “சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை (Sirf Ek Bandaa Kaafi Hai)” திரைப்படத்தை, ஜூன் 7 முதல் உள்ளூர் மொழிகளில் காணலாம்.

இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, அதன் சமீபத்திய நேரடி-டிஜிட்டல் ஒரிஜினல் படைப்பான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ படத்தை சமீபத்தில் வெளியிட்டது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், P.C. சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வை எண்ணிக்கையில் சாதனை படைத்தது. ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்காக இப்படத்தை வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறது.

வினோத் பானுஷாலியின் பானுஷாலி ஸ்டுடியோஸ் லிமிடெட், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் சுபர்ன் S. வர்மா ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அட்டகாசமான கோர்ட் டிராமாவான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ படம் 23 மே 2023 அன்று ZEE5 இல் வெளியானது. மிகப்பெரிய வரவேற்புடன் வெளியான இப்படம் வெளியான முதல் வாரம் முழுதும், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் மிகப் பெரும் சாதனையைப் படைத்தது. இந்த வருடத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் எனும் சாதனையும் படைத்துள்ளது. இப்போது இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களையும் கவரும் வகையில் பிராந்திய மொழிகளில் வெளியாகிறது.

P.C. சோலங்கி, அவரது வாழ்க்கையின் மிகப் பெரிய வழக்கில் போராடுகிறார். அதுவும் ஒரு மைனர் பெண்ணின் பாலியல் பலாத்கார வழக்கில் நாட்டில் சக்தி வாய்ந்த, கடவுளாகப் போற்றப்படும் மனிதனுக்கு எதிராகப் போராடுகிறார். அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய சாட்சிகளுக்கு எதிராகக் கொலை மிரட்டல்கள் இருந்த போதிலும், P.C. சோலங்கி உண்மைக்கான தனது போராட்டத்தில் விடாப்பிடியாக இருக்கிறார். ஒரு சாதாரண மனிதனின் மன உறுதிக்கும் மிகப் பெரிய ஆளுமை சக்தி கொண்ட மனிதனுக்கு இடையேயான இந்தப் போர் 5 ஆண்டுகள் நீடித்தது. P.C. சோலங்கி நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் பலருக்கு எதிராகப் போராடி, எந்தக் கடவுளும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல, உண்மை எப்போதும் வெல்லும் என்பதை நிரூபிக்கிறார்.

ஜீ5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா, “சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை ( Sirf Ek Bandaa Kaafi Hai) ஓடிடி தளத்தில் வெளியான முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களிடம் மகத்தான பாராட்டுகளைப் பெற்றது. இப்படம் சமூக நோக்குடன் சிந்தனையைத் தூண்டும் ஒரு அற்புதமான படைப்பு. எங்களது நோக்கம் மொழி எல்லைகளைக் கடந்து, அனைவரையும் கவரும் வகையிலான படைப்புகளைத் தருவதே ஆகும். ரசிகர்கள் அவரவர் தாய்மொழியில் ஒரு படைப்பைப் பார்க்கும் போது உணர்வு ரீதியாக அப்படைப்பு அவர்களை மிக நெருக்கமாகச் சென்றடையும். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்களிடம் கண்டிப்பாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்” என்றார்.

பானுஷாலி சார்பில் தயாரிப்பாளர் வினோத் பானுஷாலி, “ஒரு தயாரிப்பாளராக, இந்தப் படத்தைத் தயாரிக்கலாம் என நான் எடுத்த துணிச்சலான முடிவு, இறுதியாகப் பலனளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்திற்குக் கிடைத்து வரும் ஆதரவையும், வரவேற்பையும் பார்க்கும்போது வியப்பாக உள்ளது. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர்களாக, மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், சமூக நோக்கில் தரமான திரைப்படங்களை உருவாக்குவது என்பதை, எனது பொறுப்பாகக் கருதுகிறேன். பானுஷாலி ஸ்டுடியோஸ் சார்பில், எங்கள் மண்ணின் மாவீரர்களை அவர்கள் சமூகம் சார்ந்து நடத்திய போர்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பெரிய திரையில் முன்னிலைப்படுத்துவதே எங்களது நோக்கமாகும். இப்படைப்பைத் தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடும் ஜீ5 -இன் நடவடிக்கை மிகச் சிறந்த முன்னெடுப்பாகும். தற்போது இப்படைப்பு அனைத்துத் தரப்பினரிடமும் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்” என்றார்.

ஜீ ஸ்டுடியோஸின் ஷாரிக் படேல், “பிராந்திய மொழிப் பார்வையாளர்களுக்கு உலகளாவிய ஈர்ப்பைக் கொண்ட கதைகளைக் கொண்டு வந்து தருவதே எங்கள் நோக்கமாகும். ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை,’ ஒரு விழிப்புணர்வு கருத்துடன் அனைவரையும் கவரும் வகையிலான படைப்பாகும். இப்போது படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ்ப் பதிப்புகள் மூலம், இது பெரிய அளவிலான பார்வையாளர்களைச் சென்றடையும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

நடிகர் மனோஜ் பாஜ்பாய், “இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறையில் உள்ள எனது நண்பர்கள் என அனைவரிடமும் மிகப் பெரிய பாராட்டுக்களைப் பெற்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். சமூக அக்கறையுடன் மிக முக்கியமான விஷயத்தைக் கையாளும் படத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம். இது அனைத்து மொழிகளிலும் உள்ள ரசிகர்களை இணைக்கும் படைப்பு. தென்னிந்தியப் பார்வையாளர்கள் இப்படத்திற்கு எத்தகைய வரவேற்பைத் தருவார்கள் என்பதைக் காண நான் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்” என்றார்.