Shadow

தண்டட்டி – பாட்டிகளின் அட்டகாசம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.

கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது.

இயக்குநர் ராம் சங்கையா, “தண்டட்டி படத்தின் ஆரம்பப் புள்ளி எங்கே ஆரம்பித்தது என்று தெரியாது. ஆனால் இது ஒரு மிகப் பெரிய பயணம். பொதுவாக விநாயகரை வணங்கி வேலையைத் துவங்குவார்கள். ஆனால் எனக்கு விநாயகருக்குப் பதிலாக வெங்கடாசலபதியே கிடைத்தார் என்பது போல பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முழுக் காரணமாக இருந்தவர் இணை தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷ் தான். இந்தக் கதையைக் கேட்டதுமே தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் உடனே ஓகே செய்தார். எந்தப் பிரச்சினை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் கொடுத்தார். எனக்கு இது ஒரே ஒரு படம் தான்.ஆனாலும் அந்த சமயத்தில் அவர் பல படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்தாலும் கூட, ஒவ்வொரு படத்திற்கும் என தனித்தனி கவனம் ஒதுக்கி அனைத்தையும் நினைவில் வைத்து அதுகுறித்து பேசும்போது ஆச்சரியமாக இருக்கும். நான் நேசிக்கும் நடிகர்களில் பசுபதியும் ஒருவர். இந்தப் படத்திற்கு நான் மம்முட்டி அல்லது பசுபதி என இரண்டு பேரை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். மம்முட்டியைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு பசுபதி கிடைத்து விட்டார். ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விஷயத்திற்காக நடிக்க கூடியவர்கள். ஆனால் பசுபதி திரைக்கதைக்காக நடிப்பவர். கலைத்துப் போடப்பட்ட இந்தப் படத்தின் திரைக்கதையில் நேர்கோடான நடிப்பை அவர் வழங்கியுள்ளார். அவர் நடித்த படங்களில் மிகச் சிறந்ததாக இந்த தண்டட்டி இருக்கும்.

ஒரு படத்தில் வடிவேலு சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என காமெடி செய்திருப்பார். அது போல இந்தப் படத்தில் நடிகை ரோகிணி பிணமாக அமர்ந்தபடி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரைச் சுற்றி இருப்பவர்கள் வெவ்வேறு விதமான நடிப்பு, கூச்சல் என்று இருந்தாலும் சில இடங்களில் நான் கட் சொல்ல மறந்து விட்டாலும் கூட அவர் மூச்சைப் பிடித்துக் கொண்டு அந்தக் கதாபாத்திரமாகவே கவனம் கொண்டிருந்தார்.

அம்மு அபிராமி இந்தப் படத்திற்கு ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் இரவு பகலாக நடித்து இரண்டே நாட்களில் அவரது வேலையை முடித்து விட்டார். இந்தப் படத்தில் நடித்துள்ள தண்டட்டி அப்பத்தாக்கள் படப்பிடிப்பிலும் சரி டப்பிங்கிலும் சரி, என்னை வச்சு செஞ்சுட்டாங்க. நான் படப்பிடிப்பில் அவர்களைத் திட்டுவேன். ஒரு குழந்தை போல என்னிடம் கோபித்துக் கொண்டு ஓரமாக அமர்ந்து விடுவார்கள். பின்னர் அவர்களை சமாதானம் செய்து நடிக்க வைப்பேன். எல்லா முதல் பட இயக்குநர்களுக்கும் மகேஷ் முத்துசாமி போல ஒரு ஒளிப்பதிவாளர் கிடைத்துவிட்டால் போதும். சுந்தரமூர்த்தி நகரத்துப் பின்னணியில் வளர்ந்தவர் என்றாலும் கிராமத்து இசையை எளிதாக உள்வாங்கி அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்காக கிராமங்களில் சில வீடுகள் தேவைப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் கதை சொல்லி வீடு கேட்போம். அவர்கள் வீடு கொடுப்பதற்கு முன்பே ஒப்பாரி வைக்கும் காட்சிகள் ஏதும் இருக்கிறதா என்று விசாரித்து விட்டுதான் அனுமதி கொடுத்தார்கள். அப்படி ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்திய சமயத்தில் அந்த வீட்டில் இருந்த பெண்ணுக்கு திடீரென திருமணம் ஏற்பாடு ஆகிவிட்டது. அதற்கடுத்து படப்பிடிப்பிற்குப் போனபோது கல்யாண வீட்டில் வந்து ஒப்பாரி வைக்கிறீர்கள் என வீடு கொடுக்க மறுத்து விட்டார்கள். இதுபோன்ற பல சுவாரசிய நிகழ்வுகள் இந்தப் படத்தின்போது நடந்துள்ளது” என்றார்.

நடிகர் பசுபதி, “சார்பட்டா பரம்பரை முடிந்ததும் இந்தக் கதை கேட்டேன். கேட்கும்போதே க்யூட் ஆக இருந்தது. எனக்கு எப்போதுமே எனது பாட்டியின் தண்டட்டி மீது ஒரு காதல் இருந்தது. சிறுவயதில் அவர்கள் அணிந்திருந்த தண்டட்டியைச் சுட்டு விடலாம் என பல நாட்கள் முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவர் மறைவுக்குப் பின் தான் கிடைத்தது. இந்த ஒன்றரை மாத படப்பிடிப்பு நாட்களில் பாட்டிகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. இந்த ஜேனரில் இவ்வளவு எளிதாக சமீபத்தில் யாரும் கதை சொன்னது இல்லை.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது. நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்கள். ரோகிணியும் நானும் அதிக காட்சிகளில் நடித்திருந்தாலும் எங்கள் இருவருக்கும் பேசிக் கொள்ளும்படியான வசனம் எதுவும் இல்லை. விவேக் பிரசன்னாவைப் படப்பிடிப்பு சமயத்தில் என்னைப் போன்ற கலரில் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. இந்தப் படத்தில் தீபா முக்கியமான வேலை பார்த்துள்ளார். படப்பிடிப்பில் என்ன ஒரு ஹைலைட் என்றால் நாம் டயலாக்கை மறந்து விட்டுவிட்டோம் என்றால் உடனே இந்தப் பாட்டிகளே யாரையும் எதிர்பார்க்காமல் கட் சொல்லிடுவாங்க. அவர்களுக்குப் பயந்து கொண்டு வசனங்களை சரியாகப் பேசி நடிக்க வேண்டி இருந்தது. மகேஷ் முத்துசாமி தூங்குகிறாரா, சாப்பிடுகிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. எந்நேரமும் வேலை என்று இருப்பவர். இதற்குமுன் அவருடன் பணிபுரிந்திருந்தாலும் இதுபோன்று அவரை நான் பார்த்தது இல்லை. பாடலாசிரியர் ஏகாதசியுடன் அந்த சமயத்தில் பணிபுரிய முடியாமல் போய்விட்டால் கூட இப்போது ஒன்றாக இணைந்து பணியாற்றி விட்டேன். நல்ல படத்திற்கான எல்லாத் தகுதியும் இந்தப் படத்திற்கு இருக்கு” என்று கூறினார்.

இந்த நிகழ்விற்குப் படத்தில் நடித்த அனைத்து தண்டட்டி அப்பத்தாக்களும் வருகை தந்திருந்தனர். விழா நிகழ்வின் இறுதியில் இந்தப் படத்தின் ட்ரைலரை பசுபதி வெளியிட பாட்டிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெற்றுக் கொண்டனர். குலுக்கல் முறையில் பாட்டிகளின் பெயர் எழுதப்பட்டு அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு ஒன்றரை பவுன் தண்டட்டி பரிசாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல அனைத்து பாட்டிகளுக்குமே விலை உயர்ந்த பரிசுகளும் தயாரிப்பாளரால் வழங்கப்பட்டது.