32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“இந்திய வரலாற்றைச் சொல்லும் உலக சினிமா” – சீயான் விக்ரம் | தங்கலான்

Dinesh R சேலம் Published: 01/11/2023 3 நிமிட வாசிப்பு Updated: 06/11/2023 இது புதிது
எழுத்து அளவு:

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், “எனக்கு மிக முக்கியமான, வித்தியாசமான படம் தங்கலான். இப்படத்தின் இசையை இண்டியன் ட்ரைபலையும் இன்டர்னேசனலையும் மிக்ஸ் பண்ணி புதுமையாகச் செய்துள்ளோம். அதை எல்லோரும் கவனித்துப் பாராட்டுகிறார்கள். தங்கலான் ஒரு கோல்டன் டீம், எல்லோரும் அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். எல்லோரும் அவர்களுடைய பெஸ்ட்டைத் தந்துள்ளார்கள். விக்ரம் சார் இந்தப் படத்தில் மிகப் பெரிய உழைப்பைத் தந்திருக்கிறார், ஒவ்வொரு படத்திலேயும் அவர் பாத்திரத்திற்காக மெனக்கெடுவார். ஆனால் இந்தப்படத்தில் கதையும் அவருக்கு வித்தியாசமாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் கிறிஷ்டியன் பேல் போல உழைத்திருக்கிறார். என்ன கஷ்டப்பட்டாலும் அதை வெளிக்காட்டமாட்டார். ஒவ்வொரு படத்திலும் பா. ரஞ்சித் வேறு உயரத்தைத் தொடுகிறார். அவர் படத்தை வடிவமைக்கும் விதம் பிரமிப்பாக இருக்கிறது. அவருக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கும். எப்போதும் கேப்டன் கூல் மாதிரி கூலாக இருக்கிறார். கலை இயக்குநர் SS மூர்த்தி இந்தப் படத்தில் அட்டகாசமாக உழைத்திருக்கிறார். எடிட்டர் மிகச்சிறப்பாக எடிட் செய்திருக்கிறார். கிஷோர் விஷுவல்கள் அருமையாக வந்திருக்கிறது. இந்தப் படம் உங்கள் எல்லோரையும் அசரவைக்கும்” என்றார்.

நடிகர் சீயான் விக்ரம், “வரலாற்றில் நடக்கும் நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது என்று என் தந்தை என்னிடம் சொல்லியிருந்தார். எல்லா நாட்டிலும் அவர்கள் வரலாற்றைக் கொண்டாடுகிறார்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்தியாவில் அது போல் நிறைய விசயங்கள் நடந்துள்ளது. ஆனால் இப்போதைய தலைமுறைக்கு அது தெரியவில்லை. டைட்டானிக் காதல் கதை என்றாலும், அதன் பின்னணி, அந்தக் கதை நடக்கும் இடம் கப்பல், அதன் வரலாறு அது தான் முக்கியம். அது போல் நம் வரலாற்றில் நடந்த நிகழ்வை அந்தக் காலகட்டத்தை அவர்கள் வாழ்க்கையைச் சொல்கிற படம் இது. இந்தப் படத்தைத் திரையில் கொண்டு வருவது அத்தனை கடினமாக இருந்தது. இந்தப் படம் செட்டுக்குள் எடுக்கவில்லை. கேஜிஎஃப்பில் போய் அங்குத் தங்கி எடுத்தோம். தேள், பாம்பு எல்லாம் சர்வசாதாரணமாக இருக்கும். கல் முள்ளில் வெறும் காலில் நடந்து, அவர்கள் உடை போட்டுக் கொண்டு நடித்தேன். முதல் முறை லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன். அது இன்னும் கஷ்டம். டப்பிங்கில் நான் நிறைய மாற்றி விடுவேன். அந்நியனில், ரெமோ எல்லாம் டப்பிங்கில் மாற்றியது தான். ஆனால் இந்தப் படத்தில் அது நடக்காது. லைவ்வில் கச்சிதமாக அதே டோனில் பேச வேண்டும். கேமராவும் ஷாட் கட்டாகுது ஒரே ஷாட்டில் சுற்றி வரும், ரெஸ்ட்டே இருக்காது. ஆனால் எத்தனை கஷ்டப்பட்டாலும் மறுநாள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். நான் இது மாதிரி உணர்ந்ததே இல்லை, ரஞ்சித்திற்கு நன்றி. ரஞ்சித் சார்பட்டா படத்தை விட 100 மடங்கு உழைத்திருக்கிறார். நான் முன்னமே எந்தப் படத்திலும் இல்லாத மாதிரி இருக்க வேண்டும் என முடிவு பண்ணித்தான் இந்தப் படம் செய்தேன். ரஞ்சித் மிக அற்புதமான இயக்குநர் அதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். ஜீவி இந்தப் படத்தில் அட்டகாசமாக இசையமைத்திருக்கிறார். அவர் நடிக்க வந்தபோது, ‘வேண்டாம் நடிக்காதே, இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் நடித்தால் எனக்கு வாய்ப்பு வராதே!’ என நகைச்சுவையாகச் சொன்னேன், ஜீவி நடிப்பதால் இசை நன்றாக வருமா என நினைத்தேன். ஆனால் நடித்துக் கொண்டே எப்படி இப்படிப் பிரமாதப்படுத்துகிறார் என்று தெரியவில்லை. அவர் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் பெரிய படங்களில் அசத்துகிறார். ஞானவேல் ராஜாவுடன் முன்பே படம் செய்யப் பேசினோம். இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. இது எல்லோருக்கும் மிக முக்கியமான படமாக இந்திய சினிமாவில் ஒரு நல்ல படமாக இருக்கும்” என்றார்.

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.