ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது.
படத்தொகுப்பாளர் R.K. செல்வா, “என் கரியரில் இது மிக முக்கியமான படம். இது விஷுவலாகப் பேசும் படம். அதனால் டீசரில் அதைக் காட்டலாம் என நினைத்துத் தான் டயலாக் இல்லாமல் எடிட் செய்தோம். எனக்கு நீண்ட காலமாக வரலாற்றுப் படத்தில் வேலை பார்க்க ஆசை இருந்தது. அது இந்தப் படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. பா. ரஞ்சித் அண்ணா, ஒவ்வொரு படத்திலும் அவருடன் எங்களையும் வேறு உயரத்திற்கு அழைத்துச் செல்கிறார். விக்ரம் சாரை விஷுவல்களில் பார்த்து நிறைய முறை பிரமித்திருக்கிறேன். எப்படி இந்த மனுசன் இவ்வளவு உழைக்கிறார் எனத் தோணும். இந்தப் படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார்.
கலை இயக்குநர் SS மூர்த்தி, “கல்லூரிக் காலத்திலிருந்தே பா. ரஞ்சித் சார் எனக்குப் பழக்கம். அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சி. எனக்கு முழுச் சுதந்திரம் தந்தார். ஒரு வேலையைச் சொல்லிவிட்டால் முழுதாக என்னிடம் விட்டுவிடுவார். அதைப் பற்றிக் கேட்க மாட்டார்” என்றார்.
பாடலாசிரியர் உமாதேவி, “இலக்கியப் பரப்பிலிருந்து எனது கவிதைகளைத் திரை உலகிற்குக் கொண்டு சேர்க்க எனக்கு உறுதுணையாக இருக்கும் தாயுமானவன் ரஞ்சித் சாருக்கு நன்றி. ஸ்டூடியோ க்ரீனில் என் முதல் பாடல் அமைந்தாலும், இந்த தங்கலான் மிக முக்கியமான படமாக உள்ளது. பா. ரஞ்சித் மிக உறுதுணையாக இருந்தார். இரண்டு பாடல்களும் அட்டகாசமாக வந்துள்ளது” என்றார்.
உடை வடிவமைப்பாளர் ஏகாம்பரம், “நான் படித்த படிப்பிற்குக் கிடைத்த முழுமையான வேலையாகத் தங்கலானைப் பார்க்கிறேன். 10 வருடங்களாக நேச்சுரல் டை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். இந்தப் படத்தில் அதைப் பயன்படுத்த முடிந்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் ஸ்பாட்டிலேயே நேச்சுரல் டை தயாரித்து, அங்கு உடைகள் தயாரித்து ஆர்டிஸ்டுக்கு தந்தேன். பா. ரஞ்சித் அண்ணா என்னிடம் இந்த வேலையைக் கொடுத்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் இயற்கையோடு இணைந்து உடைகளை உருவாக்கியுள்ளோம். பா. ரஞ்சித் இயற்கையை நேசிப்பவர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி” என்றார்.
எழுத்தாளர் தமிழ்பிரபா, “என் முதல் சினிமா மேடை இது தான். பா. ரஞ்சித் அவர்களுடன் இணைந்து எழுதும் இரண்டாவது படம் இது என்றாலும், அது ஓடிடி போய்விட்டதால், இது தான் என் கன்னிப்பேச்சு. பொதுவாக எழுத்தாளர்களைத் தமிழ் சினிமாவில் மதிப்பதில்லை, மலையாளத்தில் மரியாதை தருகிறார்கள் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் அதை ரஞ்சித் உடைத்துத் தொடர்ந்து முழு மரியாதை தந்து வருகிறார். அதற்காக எழுத்தாளர்கள் சார்பில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஒரு திரைக்கதையாக இந்தப் படம் தனித்துவமாக எப்படி இருக்கப் போகிறது என்பதில் ரஞ்சித் அவர்களுடன் இணைந்து எழுதியது மிக உற்சாகமாக இருந்தது, சவாலாக இருந்தது. இந்தப் படம் உங்களைப் பல்வேறு வகையான சிந்தனைக்குள் கொண்டு செல்லும்” என்றார்.
நடிகர் முத்துக்குமார், “இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சர்பட்டாவிற்கு பிறகு மிக முக்கியமான ஒரு ரோல் தந்துள்ளார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளேன் என நினைக்கிறேன். டீசர் பார்த்து விட்டு மிரண்டுவிட்டேன். விக்ரம் சாருக்கு நன்றி, மகானுக்குப் பிறகு அவர் உழைப்பைப் பார்த்துப் பிரமிப்பாக இருக்கிறது” என்றார்.
ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார், “என்னைத் தொடர்ந்து மேடை ஏற்றும் ஒரே கலைஞர் ரஞ்சித் அண்ணா. சினிமாவை நேசிப்பவர், நிறையப் படங்கள் பற்றி அவருடன் பேசுவேன். இடங்களை அப்படியே அதன் பிரமிப்பைத் திரையில், அதே ஒளியில் கொண்டு வர ஆசைப்படுவார், என்னைப் பார்த்து என் வேலையைப் பார்த்து உடனுக்குடன் பாரட்டுவார். முடிந்தளவு இயற்கை ஒளியோடு திரைக்கு இந்தக் கதையைக் கொண்டு வந்துள்ளோம். நான் முதன் முதலில் கல்லூரியில் பார்த்து ரசித்த ஹீரோ விக்ரம் சார். அவரை நான் படம்பிடிப்பேன் என நினைக்கவில்லை. அப்போதிருந்த அதே எனர்ஜியோடு இப்போதும் மிரட்டுகிறார். டீசரில் நீங்கள் என்ன பார்த்தீர்களோ, அதை விடப் பிரமிப்பான விசயங்கள் படத்தில் இருக்கும்” என்றார்.
ஸ்டன்னர் சாம், “இந்தப் படம் மிக வித்தியாசமான படம். ஸ்டன்ட் காட்சிகள் மிகக் கடினமான பணியாக இருந்தது. மற்ற படங்கள் போல கேமராவை நினைத்த மாதிரி வளைக்க முடியாது. எல்லாமே ஒரே ஷாட்டாக இருக்கும் ஆனால் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து, விக்ரம் சார் கலக்கியிருக்கிறார். அவருக்கு இந்தப் படத்தில் அடிபட்டது. ஆனால் அதையும் தாண்டி வந்து ஆக்சன் காட்சிகளில் நடித்தார். அவரிடம் சாரி கேட்டுக் கொண்டே இருப்பேன் அந்த அளவுக்கு அடிபட்டிருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும், தங்கலான் உங்கள் மனதில் தங்குவான்” என்றார்.
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.