

இயக்குநர் சங்ககிரி ராச்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார்.
எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநரும் நடிகருமான சேரன், “ஒரு நாள் ரோகிணி மேடம் ஃபோன் செய்து, ‘வெங்காயம்’ என்றொரு படத்தைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. நீங்களும் பாருங்கள் என்றார். அவருடைய பரிந்துரை என்றால் நிச்சயமாக நன்றாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அந்தப் படத்தைப் பார்த்தேன். நல்ல விஷயத்தை அழுத்தமாகவும் இயல்பாகவும் சொல்லியிருந்தார்.
ஒரு நல்ல படத்தைப் பார்த்துவிட்டால், அது தொடர்பான உணர்வுகளைப் பதிவிடுவதுதான் என்னுடைய வழக்கம். அந்தத் தருணத்தில் என்னை ஏராளமானவர்கள் தூக்கிச் சுமந்ததைப் போல், எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தத் தருணத்தில் ராச்குமாரைத் தோளில் தூக்கிச் சுமக்கத் தொடங்கினேன். அதன் பிறகு என்னுடைய அழைப்பின் பேரில் 50-க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் இந்தப் படத்தைப் பார்வையிட்டனர். அதன் பிறகு அந்தப் படத்திற்கு ஒரு அடையாளம் கிடைத்தது.
திரையரங்குகளில் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படம், மீண்டும் ‘சேரன் வழங்கும் வெங்காயம்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. நல்ல வசூலையும் பெற்றது.
இவர் சினிமாவில் சம்பாதிப்பதற்காக வரவில்லை. சாமானியனும் ஒரு சினிமாவை உருவாக்க முடியும். சாமானியர்களிடம் சினிமாவைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். சாமானியர்களையும் சினிமாவில் பயன்படுத்த முடியும் என்ற கர்வம் மிக்க சிந்தனை அவருக்கு உண்டு.
அவருடைய அடுத்த படமான ‘பயாஸ்கோப்’, ‘வெங்காயம்’ திரைப்படத்தை உருவாக்கும்போது கிடைத்த அனுபவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம். அவரிடம் மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அது அந்தத் திரைப்படத்தில் வெளிப்பட்டிருக்கும்.
இதுபோன்ற நல்ல திரைப்படங்களை மக்களிடம் நாம் தான் முன்னிறுத்த வேண்டும். அதிலும் இந்த ‘ONE MAN’ திரைப்படத்தில் அனைத்து விஷயங்களையும் அவர் மட்டுமே செய்திருக்கிறார். இத்தகைய புதுமையான முயற்சிக்காகவே அவரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். ஆனால் அந்தப் புதுமையான முயற்சியையும் அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
இந்தப் படத்தை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பார்த்துவிட்டேன். அதன் பிறகு பல்வேறு தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்டு படத்தை மேலும் சிறப்பாகச் செதுக்கியிருக்கிறார்.
படத்தில் அனைத்துக் கதாபாத்திரங்களிலும் அவரே நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் ராச்குமார் தெரியமாட்டார்; அந்தக் கதாபாத்திரம்தான் தெரியும். அந்த அளவிற்குக் கடுமையாக உழைத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
அவருடைய கடும் உழைப்புதான் அவரை அடையாளப்படுத்தும். அவர் ‘நெடும்பா’ என்றொரு படத்தையும் உருவாக்கியிருக்கிறார். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
சங்ககிரி ராச்குமாருக்கு ஒரு படத்தை உருவாக்க ரூ.70 லட்சம் போதுமானது. இந்தப் பட்ஜெட்டில் தமிழ் சினிமாவில் நல்லதொரு படத்தை எடுக்க முடியும் என்பதை ராஜ்குமார் நிரூபித்திருக்கிறார்; நிரூபித்தும் வருகிறார்.
தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் திரைப்படங்களாகவே சங்ககிரி ராச்குமார் உருவாக்கும் திரைப்படங்கள் இருக்கின்றன. இருப்பினும், இன்றைய சூழலில் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து அவருடைய புகழையும் அவரையும் தமிழ் சினிமா கொண்டாடும். அவருக்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும். அவர் சினிமா மீது வைத்திருக்கும் நேசத்தால், சினிமா ஒரு நாள் அவரைக் கொண்டாடியே தீரும்” என்றார்.
நடிகர் சத்யராஜ், “சங்ககிரி ராஜ்குமாருடன் இணைந்து பணியாற்றியதற்கு முக்கியமான காரணம் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் தான். ஏனெனில், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் ஃபோன் செய்து இவரைச் சந்திக்கச் சொன்னார். அவர் சொல்லும்போது, ‘அய்யாவின் தொண்டர். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
அவரைச் சந்தித்தபோது, ‘நீங்கள் சத்யராஜாகவே நடிக்க வேண்டும். ஒரு பாடலில் மட்டும் பெரியாராக நடிக்க வேண்டும்’ என்றார்.
கடந்த 20 ஆண்டுகளாக கேரக்டர் ரோலில் நடிக்கத் தொடங்கிய பிறகு, என்னுடைய கதாபாத்திரத்தை மட்டுமே கேட்கிறேன். இயக்குநர் சொல்வதை மட்டும் செய்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் தவறில்லாமல் இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டு நடிக்கிறேன்.
‘வால்டர் வெற்றிவேல்’, ‘அமைதிப்படை’ காலகட்டத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமாவின் கையில் இருக்கிறேன். அதனால் தற்போது படப்பிடிப்புக்குச் சென்றோமா, நடித்தோமா என்று இருக்கிறேன்.
அதே சமயத்தில், நான் நடிக்காத படங்களின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. ஏனெனில், நான் நடிக்கும் படங்கள் மாதந்தோறும் வெளியாகின்றன. கடந்த மாதம் ‘சாருகேசி’. இந்த மாதம் ‘ஜி.டி.என்.’. அடுத்த மாதம் ‘மண்டாடி’.
நாம் நடித்த படங்களைப் பற்றிய விமர்சனம் நமக்குள் இருந்தாலும், அதைப் பகிரங்கமாக மேடையில் பகிர்ந்துகொள்வதில்லை. படத்தைப் பற்றி புகழ்ந்துதான் பேச வேண்டும். என்னிடம் இருக்கும் மிகப்பெரிய ‘மிஸ்டேக்’ என்னவென்றால், இரண்டு ‘பால்’ கூடுதலாகவே போடுவேன். ஏனெனில் கலைஞர்களின் சந்தோஷம் அங்கீகாரம் தான். பாராட்டிற்காக ஏங்குவது மனித இயல்பு. அதனால் தான் புகழ்ந்து பேசுகிறேன்.
இதைப் பற்றிப் பேசும்போது மணிவண்ணன் அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்வதுண்டு. ‘தலைவரே, ஐஸ் வைக்கிறது என்றால் சின்னதாக வைக்கக் கூடாது. பெரிய அளவில் ஐஸ் வைத்துவிட வேண்டும். ஒன்று அவரது மண்டை உடைய வேண்டும் அல்லது ஐஸ் உடைய வேண்டும். அந்த அளவிற்கு ஐஸ் வைக்க வேண்டும்’ என்பார்.
ஆனால், நான் இந்தப் படத்திற்கு ஏன் வந்தேன் என்றால், ‘வெங்காயம்’ படத்தைப் பார்த்துப் பிரமித்துப் போனேன். ‘வெங்காயம்’ படத்தை மீண்டும் வெளியிட்டு வெற்றி பெறச் செய்ததில் சேரனின் பங்களிப்பு அதிகம். அதற்காக இந்தத் தருணத்தில் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அவருடைய ‘பயாஸ்கோப்’ படத்தையும் பார்த்துப் பிரமித்தேன். அந்தப் படமும் சிறப்பானதாக இருந்தது. இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்றும் குழப்பத்தில் இருக்கிறேன். ‘ONE MAN’ என்றால் எப்படி? எல்லா வேலைகளையும் இவரே செய்கிறார் என்றால் அது எப்படி சாத்தியமானது? எனக்கு தற்போது வரை புரியவில்லை. 125 படங்களில் நடித்த பிறகு ‘வில்லாதி வில்லன்’ என்ற ஒரு படத்தை இயக்கினேன். அப்போதுதான் நடிப்பது எவ்வளவு சுகமானது என்பதை உணர்ந்தேன்” என ராச்குமாரைப் பாராட்டினார்.


