32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“சகமனிதன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்” – தயாள் பத்மனாபன் | லஷ்மிகாந்தன் கொலை வழக்கு

Dinesh R சேலம் Published: 24/06/2026 4 நிமிட வாசிப்பு Updated: 26/06/2026 சினிமா
எழுத்து அளவு:

கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் முதலிய படங்களை இயக்கிய தயாள் பத்மனாபன், “லஷ்மிகாந்தன் கொலை வழக்கு” எனும் படத்தை இயக்கியுள்ளார். கவிதா பாரதியுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் தயாள் பத்மனாபன். என்கவுன்ட்டரையும், மரண தண்டனையையும் வியந்தோதும் தமிழ் சினிமாகளுக்கு இடையில், குற்றவாளி திருந்த வாய்ப்பளிக்க வேண்டிய அவசியத்தையும் அறத்தையும் பேசும் அற்புதமான திரைப்படமாக வரவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தண்டனை கடுமையானாலோ, மரண தண்டனை அளிக்கப்பட்டாலோ, என்கவுன்ட்டர் செய்தாலோ குற்றங்கள் குறையும் என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லை. ‘குற்றவாளியைச் சீர்திருத்துவது, அவனிடமிருந்து சமூகத்திற்குப் பாதுகாப்பளிப்பது, அவனைப் பயமுறுத்தித் தவறுகளைச் செய்யாமல் தடுப்பது’ ஆகியவையே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டும் என்கிறார் என்கிறார் வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி. இந்தப் படத்தின் பேசுபொருளும் அதுவே! சக மனிதனின் மீதான நம்பிக்கையை இழந்துவிடாமல், அசாதாரண மனநிலையில் இருந்து குற்றம் செய்தவன் வெளியேற வாய்ப்பளிக்கவேண்டும் என்பதை அழுத்தமாகப் பதியவுள்ளது லஷ்மிகாந்தன் கொலை வழக்கு படம்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாள் பத்மனாபன், “ஒரு மனிதன் சூழ்நிலை காரணமாகக் குற்றவாளி ஆகின்றான். ஒரு அசாதாரபமான சூழ்நிலை தான் அவனைக் குற்றவாளியாக மாற்றுகிறது. அப்பொழுது அவன் ஒரு சாதாரணம் மனிதனைப் போல் சிந்திக்காமல், அசாதாரணமாகச் சிந்திச்சதால்தான் குற்றவாளி ஆகின்றான். அவன் திருந்துவதற்கான வாய்ப்பை எத்தனை தடவை வேண்டுமானாலும் கொடுக்கணும் என்பது என் எண்ணம். அவன் திருந்தாவிட்டாலும், திருந்து, திருந்து எனச் சொல்லி அவனுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இதை நான் குழந்தை வளர்ப்போட தொடர்புப்படுத்திப் பார்க்கிறேன். நம் குழந்தை பத்து முறை தப்பு பண்றப்ப, பத்து முறையும் கண்டித்து, ‘இனி தப்புப் பண்ணாத!’ எனச் சொல்லுவோமே தவிர, எக்ஸ்ட்ரீம் பனிஷ்மென்ட் பற்றி நாம் சிந்திப்பது ரொம்ப ரொம்ப ரேர். கண்டிக்கும் போது, குழந்தையை அடித்திருந்தால், ‘ஐயோ அடிச்சுட்டோமே!’ என அதையே நினைத்து ஃபீல் செய்வோம். இது என்னோட கருத்து. ஆனா இதை திணிக்காமல், இதோட எதிர்க்கருத்தையும் படத்தில் பேசியுள்ளோம்.

இது பொழுதுபோக்கான படம் இல்லாவிட்டாலும், உங்களை சிறைக்குள்ளும் கிராமத்திற்குள்ளும் அழைத்துச் சென்று என்கேஜ் செய்யும் படமாக இருக்கும். சூழ்நிலையால் மனிதன் குற்றவாளி ஆகின்றான் என்பதை என் தனிப்பட்ட அனுபவங்களில் நான் உணர்ந்துள்ளேன். சின்ன வயதில் இருந்து எனக்கு இசை கற்றுக் கொள்ளவேண்டுமென ஆசை இருந்தது. சிங்கிள் பேரன்ட்டான என் அம்மாவிடம் அதற்கான பொருளாதாரம் இல்லை. ஒன்றிய அரசு அலுவலராக நான் பெங்களூருவில் பணியில் அமர்ந்ததும், முதல் மாத சம்பளத்தில் முதலில் வாங்கியது ஒரு கேசினோ கீபோர்ட்தான். அதைச் செழியன் எனும் ரெளடி, குடிக்கக் காசில்லை என வீட்டிற்கு வந்து கீபோர்ட்டை எடுத்துக் கொண்டு போய் விட்டான். அவனைக் கொல்லவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதே எண்ணத்தில் ஆறு மாசம் இருந்தேன். நான் டிப்ளமோ படிச்சவன், நல்ல வேலையில் இருக்கேன், ஆனா அந்தச் சூழல் என்னை அப்படி யோசிக்க வைத்தது. அப்போது, என் அறையிலிருந்து இந்திரன் எனும் இலங்கை அகதி, ‘பாவம் அவன் பிச்சைக்காரன். எடுத்துட்டுப் போயிட்டான். நாம சம்பாதிக்கிறோம். இப்படிலாம் யோசிக்காம இதை விட்டுப் போங்க’ என என் மனதை மாற்றினார்.

அதே போல் இன்னொரு சம்பவம் நடந்தது. நான் கைக்குழந்தையோடு ட்ரெயின்ல பெங்களூரு போகும்போது, என் மனைவியோட நகையும், ஒன்றரை லட்சம் பணமும் வைத்திருந்த என் சூட்கேஸை ஒரு பெரியவர் எடுத்துட்டுப் போயிட்டார். கையில் குழந்தை இருந்ததால் என்னால் ஓடிப் போய்ப் பிடிக்க முடியவில்லை. இந்தப் பொருள் இழப்பு, என்னைக் கடனாளியாக்குகிறது. இவ்ட ஸ்ட்ரெஸில் இருக்கும்போது, ஒருநாள் எக்மோரில் ட்ரெயின் ஏறுகிறேன். என் எதிரில் நகை அணிந்த ஒரு பெண்மணி அமர்ந்துள்ளார். அவரது கணவன் நகைகளைக் கழட்டி பையில் வைக்கச் சொல்கிறார். அத்தம்பதி தூங்க ஆரம்பித்ததும், அந்நகைப்பையைத் திருடிக் கொண்டு இறங்கிவிடலாம் என எனக்குத் தோன்றுகிறது. என் மனம் என்ன சொல்கிறது என்றால், ‘நான் இழந்த பணத்திற்குப் பதிலாகக் கடவுள் காட்டும் வழி இது’ என என்னைச் சமாதானப்படுத்திக் கொள்கிறேன். அப்பொழுது, நகையையும் பணத்தையும் இழந்த இரவு நான் அழுது வேதனைப்பட்டது ஞாபகம் வந்தது. என்னைப் போல்தானே இவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் வருகிறது. ஆனால் எல்லாருக்கும் இப்படியொரு பிரேக்கிங் பாயின்ட் கிடைப்பதில்லை. அதனால் குற்றவாளி ஆகிவிடுகின்றான்.

அந்தக் குற்றவாளியை மன்னிச்சுடுங்க என நான் சொல்லலை. அசாதாரண சூழலிலும் மனநிலையிலும் குற்றங்கள் நடக்கின்றன. அவன் திருந்துவதற்கான முயற்சியை இந்தச் சமூகம் தந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். அப்படிச் செய்யும் பட்சத்தில் அதற்கான பலனைக் காண முடியும்னு நான் நம்புறேன். அதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.