மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் திரைப்படம். குறைவான லோக்கேஷன்களில், திரைக்கதையை நம்பி விரைவாக எடுத்து முடிக்கப்பட்ட பட்ஜெட் படம் என்பதே இதன் சிறப்பம்சம். இப்படம், ஆஹா ஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறது. டி பிக்சர்ஸ் சார்பாக, இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் தயாள் பத்மனாபன். சிறந்த இயக்குநருக்கான கர்நாடக அரசின் விருதினை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையில் இருந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறான். அடுத்த நாள் ஜெய்குமார் இறந்து கிடக்கிறான். பசவண்ணர் அனாதை ஆசிரமத்தில் ஜெய்குமாருடன் ஒன்றாக வளரும் நண்பர்கள், அவனது மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் திட்டமிடுவதோடு சரி, அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. எப்படி எவரால் எனும் சுவாரசியத்தைக் கடைசி வரை தக்க வைத்துள்ளார் தயாள் பத்மனாபன்.
ஜெய்குமாராக மஹத் ராகவேந்திரா நடித்துள்ளார். ரொம்ப மெச்சூர்டான நபர் என பில்டப் கொடுக்கப்பட்டாலும், இழந்த உறவுகளை ஏற்கத் தயங்குபவராகவும், நெருக்கடி நிலையில் சமயோசிதமாகச் செயற்படாதவராகவும் அவரது பாத்திர வார்ப்பு அமைக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கதை, ஜெய்யின் மரணத்தில் தொடங்கி, அம்மரணத்தை மையமாகக் கொண்டே பயணிக்கிறது.
மஹத்தின் உற்ற நண்பர்களாக வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர் ஆகியோர் நடித்துள்ளனர். மற்ற மூவரையும் இயக்கும் சக்தியாக அர்ச்சனா எனும் பாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் வரலக்ஷ்மி. தனது நண்பர்களுடன் இணைந்து, கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதாலும், அவர்களைக் கொல்வதற்கு திட்டம் போட்டுத் தருவதாலும், படத்தின் பிரதான பாத்திரமாக இவரை மட்டுமே சொல்லமுடியும். மற்ற மூவரும், கதையின் தேவைக்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளனர்.
இடைவேளையின் பொழுதுதான் அறிமுகமானாலும், ஏசிபி நெடுஞ்செழியனாக நடித்திருக்கும் ஆரவ், இரண்டாம் பாதியில் மேற்கொள்ளும் விசாரணையின் மூலம் படத்தின் நாயகனாக ஜொலிக்கிறார். அவரது தோற்றம், பார்வை, குரல் ஆகியவை அவர் ஏற்றிருக்கும் ஏசிபி (ACP) கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளன.
நான்-லீனியராகக் குழப்பமின்றி அழகாகப் படத்தை எடிட் செய்துள்ளனர் படத்தொகுப்பாளர்கள் ப்ரீத்தியும் பாபுவும். காவல் நிலையத்திற்குள்ளேயே பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், சலிப்புத் தட்டாத வகையில் தனது கேமரா கோணங்களால் அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா.
கன்னடத்தில் 21 படங்கள் இயக்கியுள்ள தயாள் பத்மனாபன், தனது முதல் தமிழ்ப்படமாக, வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப் நடித்த ‘கொன்றால் பாவம் (Aa Karaala Ratri)’ எனும் படத்தை இயக்கியிருந்தார். இதே வருடத்தில், அவர் இயக்கத்தில் தமிழில் வெளியாகியுள்ள இரண்டாவது படமிது. முதல் படத்தைப் போல், கனம் மிகுந்ததாக இல்லாவிட்டாலும், இப்படத்தின் திரைக்கதை ஓட்டம் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது.