32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வதந்தி – உண்மை நடக்கும் பொய் பறக்கும்

Dinesh R சேலம் Published: 24/11/2022 4 நிமிட வாசிப்பு Updated: 29/11/2022 OTT
எழுத்து அளவு:

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ்த் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதளத் தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதளத் தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ முன்னோட்ட வெளியீட்டு விழாவில் அமேசான் ப்ரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட், குமரன் தங்கராஜன், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களுமான புஷ்கர் – காயத்ரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா, ”இந்தத் தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என்னுடைய உதவியாளர். அவரது இயக்கத்தில் முதன் முதலாக வலைதளத் தொடரில் நடிப்பதைப் பெருமிதமாக நினைக்கிறேன். இவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஒரு கதையைச் சொன்னார். அப்போது அவரிடம், ‘நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனால் வலுவான கதையை எழுதி வா’ என்றேன். இந்த முறை அவர் நல்ல கதையுடன் வந்தார். த்ரில்லர் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும். இதில் உணர்வுபூர்வமான கதைகளும் உண்டு. இது பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்க்கும்.

தயாரிப்பாளர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் தெளிவான திட்டமிடல், ப்ரைம் வீடியோவின் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிசின் கடின உழைப்பு இவையெல்லாம் எனக்குக் கிடைத்த ஆசீர்வாதங்கள். அதாவது என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் தயாராகி அமேசான் ப்ரைம் வீடியோ எனும் சர்வதேச அளவிலான புகழ்பெற்ற டிஜிட்டல் தளத்துடன் இணைந்து முதன் முதலாக வலைதளத் தொடரில் நடித்திருப்பதைப் பாக்கியமாகக் கருதுகிறேன்.

திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராகப் புகழ் பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். ‘உண்மை நடக்கும். பொய் பறக்கும்’ என இந்தத் தொடரில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கிறது கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் இயல்பாகப் பேசும் இந்தப் பேச்சு, இந்தத் தொடருக்குப் பொருத்தமானது. டேக் லைனாக இணைத்துக் கொள்ளலாம்” என்றார்.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், ” வதந்தி – இந்த சமுதாயத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிறது. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், மனிதன் தன்னுடைய பொழுதுபோக்கிற்குக் கண்டுபிடித்த முதல் விசயமே வதந்தி தான் என்று நான் நினைக்கிறேன். ‘யாகவாராயினும் நா காக்க..’ என்னும் திருக்குறளில், யார் எதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், வாயிலிருந்து வெளியாகும் வார்த்தைகளையாவது கட்டுப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இது திருக்குறள். இந்தத் திருக்குறளை இதுவரை வலிமையாகவும் கூர்மையாகவும் ரசிக்கும் வகையில் யாரும் கதையாகச் சொல்லவில்லை. ஒருவேளை இதை நேர்த்தியாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதை எப்போதும் சொன்னாலும் நன்றாக இருக்கும் என நம்பினேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் அமேசான் ப்ரைம் வீடியோவின் அபர்ணா மேடத்தை மும்பையில் சந்தித்தேன். 20 நிமிடம் வதந்தி தொடரின் கதையை விவரித்தேன். அவர்கள் உடனடியாகக் கதையின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டு உற்சாகத்துடன் பணிகளைத் தொடங்குமாறு கூறினார். அத்துடன் படைப்பாளிக்குரிய சுதந்திரத்தையும் வழங்கினார். இதற்காக அவருக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு 11 மாதங்கள் இந்தத் தொடருக்கான திரைக்கதையை எழுதினேன். தயாரிப்பாளர்களும் நண்பர்களுமான புஷ்கர் – காயத்ரி அவர்களும் இதன் திரைக்கதையை முழுவதுமாக வாசித்து, ஆங்காங்கே தங்களது மேலான ஆலோசனையை வழங்கினார்கள்.

என்னுடைய திரையுலகப் பயணத்தை எஸ்.ஜே.சூர்யாவிடமிருந்து தான் தொடங்கினேன். அவரையே இந்தத் தொடரில் இயக்கியிருப்பது என்னுடைய கனவு நனவானது போல் உணர்கிறேன். எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் மற்றும் நடிகர். ஆனால் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தவுடன் அவர் நடிகராக மட்டுமே இருக்கிறார். இதற்காக அவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தத் தொடரில் நடித்திருக்கும் லைலா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, நாசர், குமரன் தங்கராஜன் ஆகிய நடிகர்களுக்கும், சரவணன், சைமன் கே கிங், கெவின் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்தத் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல், 30க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளுடன், 240 பிராந்தியங்களிலும் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.