32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வதந்தி – உண்மையைத் தேடும் எஸ்.ஜே.சூர்யா

Dinesh R சேலம் Published: 24/11/2022 3 நிமிட வாசிப்பு Updated: 27/11/2022 OTT
எழுத்து அளவு:

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ்த் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதளத் தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதளத் தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ முன்னோட்ட வெளியீட்டு விழாவில் அமேசான் ப்ரைம் வீடியோ ஒரிஜினல்ஸ்  தலைவர் அபர்ணா புரோஹித், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட், குமரன் தங்கராஜன், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களுமான புஷ்கர் – காயத்ரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், ”இந்த நாள் எங்களுக்கு சிறப்பான நாள். ‘சுழல்’ எனும் ஒரிஜினல் தமிழ்த் தொடரைத் தொடர்ந்து, ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடர் தயாராகி இருக்கிறது. இதனை புஷ்கர் காயத்ரி தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார். இந்தத் தொடர் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் 240 பிராந்தியங்களில் வெளியாகிறது. ஒவ்வொரு அத்தியாயங்களையும் பார்வையாளர்களால் யூகிக்க முடியாத வகையில் சுவராசியமான திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் சிறிய நகரம் ஒன்றின் பின்னணியில் இந்தத் தொடரின் கதைக்களம் அமைந்திருக்கிறது. இந்தத் தொடரில் உண்மையைத் தேடிக் காவல்துறை அதிகாரி ஒருவர் மேற்கொள்ளும் பயணத்தில், பொய்களைப் பேசும் மனிதர்கள், உண்மையற்ற விசயங்களைப் பேசும் மக்கள் என பல சுவாரசியமான அடுக்குகள் இடம் பெற்றுள்ளன. இறுதியில் அவர் உண்மையைக் கண்டறிந்தாரா இல்லையா எனப் பரபரப்பாகச் சொல்லக்கூடிய தொடர் தான் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'” என்றார்.

இந்தத் தொடரின் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி, ”ப்ரைம்  வீடியோவுடன் எங்களுக்கு இது இரண்டாவது பயணம். ப்ரைம் வீடியோ, தரமான படைப்புகளைச் சர்வதேச அளவிலான மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஒப்பற்ற சிறந்த டிஜிட்டல் தளம். ‘வதந்தி’ தொடரின் கதைக் கருவை சொன்னவுடன், படைப்பிற்கு தங்களது ஒத்துழைப்பைத் தொடர்ந்து அளித்து வருகிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா சிறந்த மனிதர். அளவற்ற பாசிட்டிவ் எனர்ஜி கொண்டவர். இந்தத் தொடரில் நடிப்பின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் இயக்குநரான ஆண்ட்ரூ லூயிஸ், லயோலா கல்லூரியில் வகுப்பறை தோழர். பட்டப்படிப்பு முடித்தவுடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராகச் சேர்ந்தவர். அதனால், அவருக்கும் எங்களுக்குமான இணக்கம், தொடர்பு அதிகம். இந்தத் தொடரில் சஞ்சனா என்ற இளம்பெண்ணைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறோம்.

பொதுவாகத் தமிழ்த் திரையுலகத்தில் இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்திற்கான திரைப்படத்திற்காகத்தான் திரைக்கதை எழுதுவோம். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆறு அல்லது ஆறரை மணி நேரம் கொண்ட எட்டு அத்தியாயங்களுக்கான கதையை எழுதுவது என்பது சவாலானது. எங்களது தயாரிப்பில் வெளியான சுழல் தொடரிலேயே நாங்கள் கடினமாக உழைத்து தான் திரைக்கதை எழுதினோம். ஆனால் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’எனும் வலைதளத் தொடரை இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் எட்டு அத்தியாயங்களுக்கான முழுத் திரைக்கதையும் எழுதி அவரே இயக்கியிருக்கிறார். ப்ரைம் வீடியோவைச் சேர்ந்த அபர்ணா புரோஹித் மற்றும் ஷாலினி முழுவதும் படித்து, தொடர் தயாரிப்புக்கு அனுமதி அளித்து, இறுதி வரை எங்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாது.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் சொல்லும் கதையை ஜப்பானியர்கள், தென்கொரிய மக்கள், தென் அமெரிக்கா மக்கள் ஆகியோர் பார்வையிடவிருக்கிறார்கள். இது அமேசான் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தால் மட்டுமே அளிக்க முடியும். அவர்களுக்கு மீண்டும் நன்றி சொல்கிறேன். இது போன்ற ஆச்சரியங்கள் தான் ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடருடைய பயணத்தின் நேர்த்தியான அழகு என நான் நினைக்கிறேன்” என்றனர்.

இந்தத் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல், 30க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளுடன், 240 பிராந்தியங்களிலும் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.