Search

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 விமர்சனம்

FF 6

குறிப்பிடும்படியான தமிழ்ப் படங்கள் வெளிவராத நிலையில், ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் ஆறாம் பாகம் தமிழகத் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இறந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் லெட்டி உயிருடன் இருக்கிறாள். அவ்வுண்மையைத் தெரியபடுத்தி வின் டீசலின் உதவியைக் கோருகிறார் வ்ரெஸ்லிங் புகழ் ராக். வின் டீசல் தனது அணியைச் சேர்க்கிறார். அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்தில், மின் தடையை ஏற்படுத்தும் கருவியை உருவாக்கி விற்க நினைக்கும் ஓவன் ஷாவைப் பிடிக்க ஒத்துக் கொள்கின்றனர். லெட்டி மீட்கப்பட்டாளா, ஓவன் ஷா பிடிப்பட்டானா போன்ற கேள்விகளுக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

ஸ்பெயினிலுள்ள கேனரி தீவின் மலைப் பாதை கொண்டை வளைவுகளில் போட்டியிடும் இரு கார்களில் இருந்து தொடங்குகிறது. பின் இடைவெளியே இல்லாமல் வெறும் ஆக்ஷன் தான்.

ஐந்தாவது பாகத்தைத் தொடர்ந்து வின் டீசலும், ராக்கும் இணைந்து கலக்கியுள்ளனர். ராக், யுனிவர்சல் பிக்சர்ஸ் விநியோகிக்கும் ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் படத்தில் நடிக்க வந்ததே சுவாரசியமான கதை.  ‘ராக்கும், வின் டீசலும் இணைந்து நடிக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான வின் டீசலின் ஃபேஸ்புக் பேஜில் ஒரு ரசிகர் தனது விருப்பத்தினைத் தெரிவித்திருந்தார். டாமி லீ ஜோன்சுக்காக உருவாக்கப்பட்டிருந்த அந்தப் பாத்திரத்தை, இயக்குநர் ஜஸ்டின் லின்னுடன் இணைந்து ராக்கிற்கு ஏற்ற வகையில் வின் டீசல் மாற்றினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஏழாவது பாகத்தில் ராக் நடிக்கவில்லை. அதை ஈடு செய்யும் வண்ணம், ஜேசன் ஸ்டெத் வில்லனாகக் கலக்கவுள்ளார்.

படத்தின் இறுதிக் காட்சியில், வெடித்துச் சிதறும் விமானத்தின் உள்ளிருந்து காரில் வேகமாக விமானத்தின் முகப்பை உடைத்துக் கொண்டு வெளியில் வருவார் வின் டீசல். இந்தக் காட்சியை இயக்குநர் ஜஸ்டின் லின், நான்காவது பாகத்திலேயே வைக்க திட்டமிட்டுள்ளார். செலவு அதிகமாகும் என்பதால் தள்ளிப் போயுள்ளது. கதைக்கு தேவையில்லை என ஐந்தாவது பாகத்திலும் அவரால் வைக்க முடியவில்லை. கடைசியாக இப்படத்தில் அந்தக் காட்சியை வைத்து விட்டார் இயக்குநர். ஆனால் இந்தக் காட்சியை 1990இலேயே பணக்காரன் படத்தில், வெடித்துச் சிதறும் லாரியின் உள்ளிருந்து ஜீப்பில் வேகமாக லாரியின் முகப்பை உடைத்துக் கொண்டு ரஜினி வருவார் என்பதை பெருமையுடன் நாம் நினைவு கூரலாம். அதே போல், பாட்ஷா படத்தில் ரகுவரனை ரஜினி சந்திக்கும் பொழுது, அருகிலிருக்கும் மாளிகை உச்சியிலிருந்து ஆட்கள் துப்பாக்கியால் ரஜினியையும், ரகுவரனையும் குறிப் பார்த்த வண்ணம் இருப்பார்கள். அதே காட்சி இப்படத்திலும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் யாரேனும் ஒருவர் வாகனங்களில் இருந்து இன்னொரு வாகனத்துக்கு அநாயாசமாகப் பாய்ந்து கொண்டேயுள்ளனர். ராக் பாலத்திலிருந்து கீழே சாலையில் செல்லும் கார் மீது குதிக்கிறார். கிப்ஸன் நெடுஞ்சாலையில் நொறுங்கின காரிலிருந்து பால் வாக்கரின் கார் மீது பாய்கிறார். வின் டீசல், ஒரு பாலத்தில் இருந்து இன்னொரு பாலத்தில் இருந்து கீழே விழும் மிச்சேல் ரோற்றிக்ஸைப் பாய்ந்து காப்பாற்றுகிறார். ஆனால் எதையும் யோசிக்க விடாமல் காட்சிகள் அசுர வேகத்தில் செல்கின்றன.

அடுத்த பாகத்திற்கான ஆவலை ஏற்படுத்தியவாறு படம் முடிகிறது. குறைந்தபட்சம் இரண்டு வருட இடைவேளைகளுக்குப் பிறகே ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியசின் அடுத்த பாகம் வெளிவரும். ஆனால் ஏழாம் பாகத்தை ஜூலை 2014இலேயே வெளியிடப் போவதாய் டீசல் அறிவித்துள்ளார்.  
Leave a Reply