32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“அன்பைப் பேசப் பணம் தேவைப்படுகிறது” – ராஜு முருகன் | My Lord

Dinesh R சேலம் Published: 09/02/2026 3 நிமிட வாசிப்பு Updated: 11/02/2026 சினிமா
எழுத்து அளவு:

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் அம்பேத்குமார், “ராஜுமுருகன் எழுத்தாளராக இருந்த போதே தெரியும். அவர் என்னைச் சந்தித்து ஜிப்சி கதை சொன்னார். அந்தப் படம் எனக்கு வெற்றிப்படம் தான். அவர் இந்தக் கதையைச் சொன்ன போது சின்ன படமாக எடுக்கலாம் என்றார். அடுத்து நீரவ் ஷா, ஷான் ரோல்டன் என்றெல்லாம் சொன்னார். இறுதியாக சசிக்குமார் நடிக்க வைக்கலாம் என்றார். அப்போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. இம்மாதிரியான படத்தை மக்களிடம் சேர்க்க அவர் மாதிரி ஒரு நடிகர் கண்டிப்பாக வேண்டும். நடிகை சைத்ரா அவர்களும் அற்புதமாக நடித்துள்ளார். ஷான் மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார்.

நான் இனி எத்தனை படங்கள் தயாரித்தாலும் மை லார்ட் மாதிரி ஒரு படம் செய்வேனா எனத் தெரியாது அந்தளவு இது மிகச்சிறந்த படம்” என்றார்.

நடிகர் சசிக்குமார், “இந்தப் படம் கோர்ட்டை மையமாகக் கொண்ட படம் இல்லை. படத்தில் கோர்ட் காட்சிகள் ஒரு பத்து நிமிடம்தான் வரும். ஆனால் இந்தக் கதை அதிகாரத்தைப் பற்றியது. அதிகாரம் ஒரு எளிய, கரைக்கோடி மனிதனின் கையில் கிடைத்தால் அவன் அதை எப்படிப் பயன்படுத்துவான், அவன் அந்த அதிகாரத்துடன் என்ன செய்ய முடியும் என்பதையே இந்தப் படம் கேள்வியாக முன்வைக்கிறது. ‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலையையும் முத்துச்சிற்பி என்ற நபரையும் குறிக்கிறது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம்.

இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு வழிகாட்டிகள். இங்கே கிடைக்கும் வாழ்த்துகளை நான் என் அண்ணன் பாலாவுக்கு ஒப்படைக்கிறேன். இது எனக்கான வாழ்த்து அல்ல; இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருக்குமானது.

இந்தக் கதையை, ‘கதையில் எதையும் மாற்ற வேண்டாம். கதை எப்படியிருக்கிறதோ அப்படியே படம் எடுங்கள்’ என்று முழுச் சுதந்திரம் கொடுத்தார் தயாரிப்பாளர். இப்படிப்பட்ட நம்பிக்கை ஒவ்வொரு இயக்குநருக்கும் கிடைப்பது பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்காகத் தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு என் மனமார்ந்த நன்றி.

இயக்குநர் ராஜுமுருகனை சைக்கோ என்றார்கள். நானே பயந்தேன். அவருடன் வேலைபார்த்த போது அவர் அப்படி இல்லை. படம் முடித்து பார்த்த போது தான் தெரிந்தது. அவர் சினிமா மீது தான் சைக்கோவாக இருக்கிறார். அவர் நல்ல படங்கள் தருவதில் சைக்கோவாக இருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும்” என்றார்.

இயக்குநர் ராஜு முருகன், “எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும், நேர்மையையும் சினிமாவாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை, இயக்குநர் பாலாவின் ‘பிதாமகன்’ படம் தந்தது. அவர் வந்து வாழ்த்தியது பெருமை.

நம்பிக்கையை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே இந்தப் படத்தின் அடிப்படையான நோக்கம். இந்தப் படம் எந்த கணக்குப் போடலிலும் உருவானது அல்ல. ‘ராஜுமுருகன்’ என்ற மனிதன் மீது ‘அம்பேத்குமார்’ என்ற மனிதன் வைத்த நம்பிக்கையில் தான் மை லார்ட் உருவானது.

அம்பேத்குமார் என்ற மனிதர் இல்லையென்றால் இந்தப் படம் உருவாகியிருக்காது. நான் என் வாழ்க்கையில் மிகவும் டவுன் ஃபாலில் இருந்த ஒரு காலகட்டத்தில், என்னை அழைத்து ‘வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் சார். ஒரு நாள்கூட உட்காரக் கூடாது’ என்று சொல்லி, அடுத்த நாளே படம் பண்ணத் தொடங்குவதற்கான மனநிலையை எனக்குக் கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் இயல்பாகவே வேண்டிக் கொள்வது, அந்த நம்பிக்கையை என்மீது வைத்த அம்பேத்குமார் என்ற மனிதனுக்காகத்தான். அவர் வைத்த நம்பிக்கை பொய்யாகக் கூடாது என்பதே என் மனதில் இருந்த ஒரே எண்ணம். அன்பையும் நம்பிக்கையையும் பேசப் பணம் தேவைப்படுகிறது. எப்படியாவது இப்படத்தில் பணத்தைச் சம்பாதித்து என் தயாரிப்பாளருக்குத் தந்து விட வேண்டும்” என்றார்.

ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன், அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை, அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.