32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

My Lord – உள்ளுக்குள் உலுக்கிய படம்

Dinesh R சேலம் Published: 09/02/2026 3 நிமிட வாசிப்பு Updated: 11/02/2026 சினிமா
எழுத்து அளவு:

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மாரிசெல்வராஜ், “நேற்று நான் தொடர்ந்து இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று இந்த ‘மை லார்ட்’. இந்தப் படம் முடிந்த பிறகு, என்னோட அசிஸ்டன்ட்ஸோட சேர்ந்து அதிக நேரம் விவாதம் பண்ண வைத்த படம் இது. இந்தப் படம் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கேட்கிறது. எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு, அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன? அந்த கேள்வியையே இந்தப் படம் ரொம்ப ஆழமாக முன்வைக்கிறது.

சசிகுமார் சார் கேரக்டர், ஒரு எறும்பு, ஒரு எலி, ஒரு பூனை வரை காப்பாற்றுற மனிதன். ஆனா, ‘ஒரு மனிதனை விட்டுவிடலாமா?’ன்னு கேள்வி எழுப்பும் இடத்துல எனக்கு உண்மையிலேயே ஒரு ஷாக் இருந்தது. இது சரி, தவறு என்று தீர்ப்பளிக்குற படம் இல்லை. நம்ம மனசுக்குள்ள இருக்குற நியாயம், மனிதத்தன்மை, அறம், இதையெல்லாம் நம்மையே யோசிக்க வைக்குற படம்.

ராஜுமுருகன் தொடர்ந்து இப்படிப்பட்ட சினிமாவை உறுதியோட செய்து வருவார். தான் எழுத்தாளனாக இருந்த போது சந்தித்த அத்தனை மனிதர்களையும் திரையில் கொண்டு வரத் துடிப்பவர். அதுக்காகத் தமிழ் சினிமா அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்.ய் மை லார்ட் என்னை யோசிக்க வைத்த, உள்ளுக்குள் உலுக்கிய படம்” என்றார்.

இயக்குநர் லிங்குசாமி, “முருகன் தோற்றாலும் ஜெயித்தாலும் இவ்வளவு இயக்குநர்கள் உடன் இருக்கிறோம் ஆனால் அதைவிட பெரிய விஷயம் என்னவென்றால், ஒரு தயாரிப்பாளர் மறுபடியும் திரும்பி வந்து, ‘முருகன் படம் பண்ணுறேன்’ன்னு நம்பிக்கையோட சொல்றது. எங்களோட அனுபவத்துல, ஒரு தயாரிப்பாளர்கிட்ட, ‘இந்த படத்தை எப்படி ப்ரோமோட் பண்ணப் போறீங்க?’ன்னு கேட்டா, ‘முருகனோட படம் தான்’ன்னு ஒரே வரியிலே சொல்ல முடிஞ்சா, அதுவே மிகப் பெரிய ப்ரோமோஷன். உண்மையிலேயே நன்றி சார். முருகன் எந்த சமரசமும் செய்யாதவர், எந்த விஷயத்தையும் அவர் மிகவும் ஆழமா யோசிச்சுதான் செய்றார். ‘எனக்கு ரெண்டு சாய்ஸ் இருக்குன்னாலும், நான் எல்லாத்தையும் எடுக்க மாட்டேன். எனக்குப் பிடிச்ச, சரியான படம் மட்டும் தான் எடுப்பேன்’ – அப்படின்னு சொல்லி அதை நடைமுறையிலே கடைப்பிடிக்கிறதுதான் அவரோட பெரிய பலம்.

சசிகுமார் சார், தோற்றாலும் ஜெயித்தாலும் மக்கள் அவருடைய படங்களைத் தேடிப் பார்க்கிறாங்க. அந்த நம்பிக்கையே ஒரு நடிகருக்குக் கிடைக்கிற மிகப் பெரிய வெற்றி. அவர் செய்யும் கதாபாத்திரங்கள் எப்போதும் மிகத் தெளிவாக, எந்தக் குழப்பமும் இல்லாமல், நேர்மையாக இருக்கும். அந்தச் சிரிப்பு, அந்த உடல் மொழி, அந்த உள்ளார்ந்த மனிதத்தன்மை, அதை வீணாக்காமல் பயன்படுத்துறவர். உண்மையிலேயே மிகப் பெரிய வாழ்த்துகள் சார்.

இந்தப் படம் நிச்சயமாக பேசப்படும் படம். நாளைக்கு நான் ஆவலோட காத்திருக்கிறேன். மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம் இது” என்றார்.

இயக்குநர் பாலா, “தயாரிப்பாளர் அம்பேத்கர் குமார் மிக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, இப்படிப்பட்ட அர்த்தமுள்ள படங்களைத் தயாரிப்பது பெரிய விஷயம். இன்னும் இரண்டு படங்கள் இதே ராஜு முருகனுக்குச் செய்துவிடுங்கள். நீங்கள் கண்டிப்பாக மந்திரியாகிவிடலாம்.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’, இப்போது ‘மை லார்ட்’ – டைட்டிலிலேயே நக்கலையும் கருத்தையும் சேர்த்து வைக்கும் தைரியம் ராஜுமுருகனுக்கே உரியது. அவர் சந்தித்த மனிதர்களையும், வாழ்க்கையையும் கதாபாத்திரங்களாக மாற்றும் திறமை இந்தப் படத்திலும் தெளிவாகத் தெரிகிறது. படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றாலும், நிகழ்வில் பேசியவர்களின் கருத்துகளையும், படம் குறித்து வந்துள்ள எதிர்வினைகளையும் பார்த்தால், இது மரியாதைக்குரிய, தரமான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சசிகுமார் எந்தப் படமாக இருந்தாலும் முழுமையாகத் தன்னை ஒப்படைக்கும் நடிகர். இந்தப் படத்தில் அவருடைய ஈடுபாடும், நடிப்பும் இன்னும் அதிகமாகத் தெரிகிறது. குறிப்பாக நடனக் காட்சிகள் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. நடிகை சைத்ரா உண்மையாக நல்ல நடிகை. சில காட்சிகளில் அவருடைய ஆக்ரோஷமான, ஆழமான நடிப்பு பார்ப்பவர்களைக் கட்டிப்போடும். தமிழ் சினிமா இப்படிப்பட்ட நடிகைகளைப் பாதுகாத்து, அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்” என்றார்.

ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன், அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை, அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.