32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

7 ஸ்டார் பாய்ஸ் | 7 Star Boys review

Dinesh R சேலம் Published: 03/09/2026 2 நிமிட வாசிப்பு அயல் சினிமா
எழுத்து அளவு:

‘ஆணப்பரம்பிலே வேர்ல்ட் கப் (Aanaparambile World Cup)’ எனும் மலையாளப் படம் 2022 இல் வெளியானது. அப்படத்தைச் சிறப்பாக மொழிமாற்றம் செய்துள்ளனர். கால்பந்து உலகக் கோப்பை 2018 இன் முதல் போட்டியில் தொடங்கும் கதை, கடைசிப் போட்டியில் நிறைவுறுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பன்னிரெண்டு வயது ஆகவில்லை என்று சொல்லி மைதானத்திற்குள் சிறுவர்களை அனுமதிக்க மறுக்கிறார் பயிற்சியாளர். அவர் பயிற்சியளிப்பதும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கே! பயிற்சியாளரால் துரத்தப்படும் ஏழு சிறுவர்களிலேயே இளையவனான 9 வயது உமர், ‘7 ஸ்டார் ஆத்தங்கரை டீம்’ என தங்கள் அணிக்குப் பெயர் சூட்டுகிறான். கிளப்பில் இருந்து தடை செய்யப்பட்ட இஸ்மாயில் எனும் இளைஞனைத் தங்கள் பயிற்சியாளராக இருக்கும்படி சிறுவர்கள் கேட்டுக் கொள்கின்றனர். இஸ்மாயிலோ, இந்தியக் கால்பந்து அணியில் ஜாம்பவனாகத் திகழ்ந்த I.M.விஜயனிடம் அழைத்துச் செல்கிறார். பன்னிரெண்டு நாட்களில் தொடங்கும் ‘கேரள பிளாஸ்டர்ஸ்’ போட்டியில் பங்கேற்க அச்சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார் விஜயன்.

அந்த ஊரே கால்பந்தின் மீது பித்தாக அலைகிறது. நெய்மர், ரொனால்டோ, மெஸ்ஸி ஆகிய மூவரும்தான் அந்த ஊர் மக்களின் ஆதர்சங்கள். ஆனால், மொழிமாற்றத்தில் ‘எம்பாப்பே’-க்கும் வசனத்தில் இடமளித்துள்ளனர். அந்த ஊரின் கால்பந்து கனவைச் சுமக்கும் பாத்திரத்தில் T.G.ரவி கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். கால்பந்து உலகக்கோப்பை போட்டியில், இந்தியா பங்கேற்று விடாதா என்ற ஏக்கம் நிறைந்த கேள்வி படத்தின் பார்வையாளர்களையும் தொற்றிக் கொள்கிறது.

உமர் எனும் சிறுவனின் வீட்டருகே இருக்கும் வயலில், மெஸ்ஸியின் உருவம் உள்ளது. சிறுவன் மெஸ்ஸியை ஆதர்சமாகக் கொண்டு வளர்கிறான். இறக்கை முளைத்த மெஸ்ஸி சிறுவனின் தூக்கத்திலும் தொடர்கிறார். சிறுவனாக நடித்துள்ள சிறுவன் டேனிஷ் P.K., லட்டு போல் இருக்கிறான். அவன் தான் படத்தின் நாயகன். ஷூ கிடைக்காத பொழுதும், வாய்ப்பு மறுக்கப்படும் பொழுதும், மிக நீளமான 10 ஆம் எண் மெஸ்ஸி டி-ஷர்ட்டைப் போடும் பொழுதும், சோர்ந்து போகும் அவனது முகத்தைப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. அச்சிறுவனுக்கும், I.M.விஜயனுக்குமான கெமிஸ்ட்ரி அற்புதமாக உள்ளது. ’10 ஆம் எண்’-ஐப் பற்றிய விஜயனின் கேள்விக்கு, ‘அது கடவுளின் எண்’ என்ற உமரின் அட்டகாசம் பதில் அடிப்பொளி. அணியின் கேப்டன் குஞ்சுவாக நடித்துள்ள அமல் பிரமாதப்படுத்தியுள்ளான்.

இந்தக் கதையோட ஒட்டாமல், இஸ்மாயிலாக நடித்துள்ள ஆண்டனி வர்கீஸின் காதல் கதையும் வருகிறது. நல்லவேளையாக அக்காதல் கதைக்கு அதிக அழுத்தம் தராமல் ஊறுகாய் போல் பயன்படுத்தியுள்ளனர். ஜேக்ஸ் பிஜோயின் இசையும், ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. சிறுவர்களின் இயல்பை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். எழுதி இயக்கியுள்ள நிகில் பிரேம்ராஜ் நீறைவானதொரு படத்தை வழங்கியுள்ளார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.