32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பூக்கி – 2K கிட்ஸின் காதலும், பிரேக்கப்பும்

Dinesh R சேலம் Published: 09/02/2026 4 நிமிட வாசிப்பு Updated: 10/02/2026 இது புதிது
எழுத்து அளவு:

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்ரேஷன் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும், மார்கன் படத்தில் தனது நடிப்பால் பெரும் பாராட்டுக்களைக் குவித்த அஜய் திஷான் நடிப்பில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி” ஆகும். விஜய் ஆண்டனி நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுமாகி, ஜெயில், காரி, Miss Match தெலுங்குப்படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, “இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்குப் பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரிதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்தப் படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. அஜய், மிக நேர்மையான உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா, மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு எல்லாமே சிறப்பாக இருந்தது. இப்படத்தின் உரிமையை வாங்கிய Zee நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.

இயக்குநர் கணேஷ் சந்திரா, “இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற ‘ஆக்‌ஷனை’ மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, ‘பூக்கி’ படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து ‘ஆக்‌ஷன்-கட்’ சொல்ல ஆரம்பிச்சிருக்கேன். இந்த வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது அவர் வைத்த நம்பிக்கையை நான் கண்டிப்பாகக் காப்பாற்றியிருக்கிறேன். இந்தப் படத்தை வெறும் ஆறு மாதங்களில் முடித்திருக்கிறோம். இன்றைய சூழலில் ஒரு படத்தை விரைவாக முடித்து, வணிக ரீதியாகவும், வெளியீட்டிலும் ஒழுங்காகக் கொண்டு வருவது எளிதல்ல. Zee நிறுவனம் இப்படத்தை வாங்கி விட்டது. அதைச் சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாருக்கு மிகப் பெரிய நன்றி.

விஜய் ஆண்டனி சார் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்புக்கு ஒரே விளக்கம் தான், ‘தொடர்ந்து முயற்சி செய். தவறாக இருந்தாலும் சரியாக வரும் வரை செய்’ என்பார். இரவு, பகல் பாராமல் வேலை செய்யும் அந்த ஆற்றல் எங்களை எல்லோரையும் ஊக்கப்படுத்தியது. இந்தப் படத்தின் எழுத்தாளர் புதிய பரிதி, நாயகன் அஜய், நாயகி தனுஷா —இந்த மூன்று பேரும் இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. இவர்களில்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது” என்றார்.

நடிகர் அஜய் திஷான், “இந்தப் படம் எனக்கு ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய அனுபவம். நான் ஒருபோதும் நினைக்காத பல விஷயங்கள் இந்தப் படத்தின் மூலம் நடந்திருக்கிறது. கதையை முதலில் படித்தபோதே, இந்தப் படம் மிகுந்த கவனத்தோடு, ஆழமான எழுத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் உணர்ந்தேன். உண்மை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதையே என்னை மிகவும் பாதித்தது. இயக்குநர் கணேஷ் சந்திரா சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவருடன் வேலை செய்வது மிகுந்த ஊக்கமும் நிம்மதியும் தரும் அனுபவமாக இருந்தது. அவருடன் இன்னும் நிறையப்படங்கள் வேலை செய்ய ஆசைப்படுகிறேன். படத்தில் உடன் நடித்த அனைவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். தனுஷா நல்ல தோழியாக மாறி விட்டார். இந்தப் படத்தின் குழு அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாகவே இருந்தார்கள். அவர்களில்லாமல் இந்தப் படம் இவ்வளவு சீக்கிரமாகவும் ஒழுங்காகவும் முடிந்திருக்காது. உடை வடிவமைப்பாளர் மாளவிகா அவர்களுக்கும், நடன இயக்குநர் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள். இந்தப் படம் எனக்கு ஒரு வேலை போல அல்ல; இன்னொரு வீட்டில் இருப்பது போலவே இருந்தது. அந்த அளவுக்கு அன்பும், நம்பிக்கையும் இந்தக் குழுவில் இருந்தது” என்றார்.

எழுத்தாளர் புதிய பரிதி, “இந்த படம் ஒரு சாதாரண முயற்சி அல்ல. கணேஷ் சந்திராவிடம் நான் கதையை ஒரு படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கூடக் கொடுக்கவில்லை. ‘படிக்க ஒரு ஸ்கிரிப்ட் கொடுங்கள்’ என்றார். அதைப் படித்த இரண்டே நாளில் படம் உறுதியானது. அது எனக்கு ஒரு மேஜிக் மாதிரி இருந்தது. கணேஷ் சந்திரா சாரும், தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாரும் கதையை அப்படியே நம்பி, அதற்கு உண்மையாக நின்றார்கள். ‘ஸ்கிரிப்ட் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று உறுதியாக நின்றார்கள். ஒரு முதல் பட எழுத்தாளருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது. நான் எழுதும்போதே இந்தப் படம் என் மனதில் இசையோடு, எடிட்டிங்கோடு ஓடிக்கொண்டிருந்தது. அந்த உணர்வை இசை மூலமாகவும், எடிட்டிங் மூலமாகவும் அப்படியே திரையில் கொண்டு வந்ததற்காக விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் இசை என்பது பின்னணி மட்டும் அல்ல, பல காட்சிகளுக்கே மாற்றாக இசை பேசுகிறது. அது இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம். உண்மையிலேயே இந்தப் படம் எனக்கு ஒரு வேலை போலவே தோன்றவில்லை. ஒரு குடும்பத்தோடு இருந்து செய்த அனுபவமாகத்தான் இருந்தது” என்றார்.

இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை, காதலர்களே தான் பிரச்சனையாக இருக்கிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் உலகை மையப்படுத்தி, ஒரு இளைஞன் சந்திக்கும் பிரேக்கப், அதைத் தாண்டி அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதைப் பரபரப்பான திரைக்கதையில், கலக்கலான நகைச்சுவையுடன் சொல்லும், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக ‘பூக்கி’ உருவாகியுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.