Shadow

உயிருள்ளவரை உஷா விமர்சனம் | Uyirullavarai Usha review

ஜனரஞ்சகமான காதலைச் சொல்வதற்காக, 1983 இல், T.ராஜேந்தர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கிய படமிது. தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரது மனைவி உஷா ராஜேந்தர் தயாரிப்பில் உருவான முதல் படமிது. கல்யாணமான பின் அவர் இயக்கிய முதல் படமிது. ரஜினியை நடிக்க வைக்க விரும்பி, அவருக்காக T.ராஜேந்தர் கதை எழுதிய முதல் படமிது. ரஜினியை நடிக்க வைக்கும் சூழல் அமையாததால், அவருக்காக உருவாக்கின செயின் ஜெயபால் பாத்திரத்தில் T. ராஜேந்தரே நடித்துவிட்டார். தற்போது, இப்படம் 43 ஆண்டுகள் கழித்து மறு வெளியீடு காண்கிறது.

எதிரெதிர் வீட்டில் வசிக்கும் அறிமுக நாயகனான கங்காவும், அறிமுக நாயகியான நளினியும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் படிக்கின்றனர். நாயகியின் கவனத்தைத் தன்பால் ஈர்ப்பதற்காகத் தொடர்ந்து கலாட்டா செய்து வருகிறான் நாயகன். கடுப்பாகும் நாயகி பொய்யான புகார் அளிக்கிறார். நாயகன் கோபத்தில், பலர் பார்க்க மேடையில் வைத்து நாயகிக்கு முத்தம் அளித்து விடுகிறான். தனது பொய்ப் புகாரால் தான் எல்லாம் நிகழ்ந்தது என மனம் திருந்திப் புகாரை வாபஸ் வாங்குகிறாள் நாயகி. நாயகன் தனது காதலைச் சொல்ல, நாயகி ஏற்க, கெட்டவனான நாயகியின் அண்ணன் அக்காதலை எதிர்க்கிறான். அவர்கள் இருவரது காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை.

T. ராஜேந்தரின் பாடல்கள் கேட்கக் கொண்டாட்டத்துக்குரியவை, எனினும் பார்ப்பதற்குக் கவர்ச்சி தூக்கலாகவே உள்ளன. மழைப்பாட்டு, குளியலறைப் பாட்டு என நளினியைத் தொப்பலாக நனைய வைத்துள்ளார். கவித்துவமான ரம்மியமான, “வைகைக்கரை காற்றே நில்லு, வஞ்சிதனைப் பாா்த்தா சொல்லு” எனும் பாடல் வருடங்கள் கடந்தும் இளமை குன்றாமல் ரசிக்க வைக்கிறது.

ஈவ் டீசிங் செய்பவனையும், பொதுவெளியில் சக வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடந்து முத்தம் கொடுப்பவனையும் நாயகனாகச் சித்தரித்து பிளாக்பஸ்டர் வெற்றியும் பெற்றுவிட்டார் T.ராஜேந்தர். நான்கு தசாப்தங்கள் கடந்த பின்னும், இப்படக் கதையிலுள்ள அபத்தத்தை உணராமல், தனது படைப்பு ஒரு காதல் காவியம் என நம்பி, அதைக் காதலர் தினத்தன்று வெளியிட நிச்சயம் ஒரு முரட்டுத் தைரியம் வேண்டும். T.ராஜேந்தரின் வெற்றியே, எதற்கும் கவலைப்படாமல் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் இத்தகைய முரட்டுத் தைரியத்திலும், அவரது அடுக்கு மொழி தமிழிலும் விளைந்ததுதான். அது உள்ள வரை அவருக்கு இல்லை ஒரு முஹாரி ராகம்.