Search

அஞ்சான் விமர்சனம்

அஞ்சான் விமர்சனம்

தொன்மத்தை நவீனப்படுத்தி மீட்டுருவாக்கம் செய்வது கலையினொரு அம்சம். தளபதி படம் இதிகாசத்தின் ஒரு சின்னஞ்சிறு பகுதியின் நவீன மீட்டுருவாக்கமே! அவ்வகைமையைச் சார்ந்த படம்தான் லிங்குசாமியின் ‘அஞ்சான்’. பிருத்விராஜ் செளகான் என்னும் மன்னரைதான் சூர்யா நடிக்கும் ராஜூ பாய் பாத்திரமாக மீட்டுருவாக்கம் செய்துள்ளார் லிங்குசாமி. முதல் தாரைன் போரில் முகமது கோரியைப் பிழைத்துப் போ என பிருத்விராஜ் செளஹான் அனுப்புவது போல், வில்லன் மனோஜ் பாயை முதல் முறை எச்சரித்து அனுப்பி விடுகிறார் சூர்யா. பிருத்விராஜ் செளஹான் சுயம்வரத்தில் சம்யுக்தாவைத் தூக்கிச் சென்றதுபோல், சூர்யா மணப்பெண் கோலத்தில் இருக்கும் கமிஷ்ணர் பெண்ணான சமந்தாவைக் கடத்தி விடுகிறார். ஆக, இப்படத்தை மற்றுமொரு பழிவாங்கும் கதை என புறந்தள்ளிவிட முடியாது.

Anjaan reviewபொதுவாக அதி நாயகத்துவமுள்ள படத்திற்கு தலைப்பு நாயகன் பெயரையோ அல்லது அவரைப் புகழும் சிறப்புப் பெயரையோ வைப்பார்கள். ஆனால் லிங்குசாமி அங்கேயே வித்தியாசத்தைப் புகுத்தியுள்ளார். ஒருவன் நல்ல நிலையில் வலுவாக இருக்கும் பொழுது, அவரை துதி பாட ஆயிரம் பேர் சுற்றி இருப்பர். ஆனால் ஒருவர் இறந்த பின்பும் அவரது புகழை அவரது எதிரிகளுக்கு மத்தியில் பயமில்லாமல் (அ) அஞ்சாமல் சொல்கிறார் படத்தில் இருக்கும் இந்த நபர். சில நிமிடங்கள் வந்து போகும் அந்த துணை கதாபாத்திரத்தின் குணத்தைப் பிரதிபலிக்குமாறு ‘அஞ்சான்’ என படத்திற்கு தலைப்பு வைத்து அசத்தியுள்ளார். ஊரான் வீட்டு பாரில் உட்கார்ந்திருக்கோம் என்ற பிரக்ஞையோ பயமோ இல்லாமல், ராஜூ பாய் பெயரைக் கேட்டதும் அவர் அமர்ந்திருந்த டேபிளை உடைத்து விடுகிறார். படத்தின் பிரதான வில்லன் இம்ரான் பாயாக வரும் மனோஜ் பாஜ்பாயை டவுசரோடு கட்டிப் போட்டு காவலிருக்கும் வீர தீரரும் இவரே!

படத்தில் அடுத்த புதுமை வில்லன் பாத்திரத்தின் வடிவமைப்பு. இவ்வளவு மென்மையான, நளினமான, லலிதமான, கருணையான, பெருந்தன்மையான வில்லன் கதாபாத்திரத்தை ‘டான்’ படத்தில் யோசித்தது, நாடி நரம்பெல்லாம் உலக சினிமா பற்றுக் கொண்ட ஒருவரால்தான் இயலும். படத்தில் வில்லன் செய்வது ஒரே ஒரு கொலைதான். அதுவும் அவருக்கு சூர்யா மீதும், வித்யுத் ஜமால் மீதும் மட்டுமே கோபம். அவர்கள் கட்டிப் போட்ட பொழுது உதவிய அஞ்சானைக் (மேல் பத்தியில் குறிப்பிடப்பட்டவர்) கொல்லவில்லை. எய்யப்பட்ட அம்பை நோகா அந்தப் பெருந்தன்மையும் இரக்கக் குணமும், சம காலத்தில் நாயகனாக இருக்கும் எவருக்குமே இல்லை. ஏன் இந்தப் படத்தின் நாயகனுக்கே இல்லை.

வில்லனிற்காவது அவமானப்படுத்தப்பட்டோம் என கொலை செய்வதற்கு ஒரு காரணம் உண்டு. ‘நான் யாருன்னு தெரிஞ்சவங்க யாரும் இப்ப உயிருடன் இல்லை’ என பெருமைப்படுகிறார் பலரைக் கொன்ற சூர்யா. அதுவும் ஒருவர் உயிருக்கு பயந்து ஓடுகிறார். சூர்யா துரத்திக் கொண்டு போய், அவரை ஆணியாலயோ கம்பியாலயோ குத்துகிறார். சரியாகக் குத்தினோமா என சந்தேகம் வந்து, உடலில் குத்திய கம்பியை கேப்டன் ஸ்டைலில் பின்னால் உதைக்கிறார். Yes he is a ruthless, brutal, கர்ணக்கொடூரமான bloody murderer. வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டில் பிறந்த நாயகனா இப்படி என அதிர்ச்சி அடைய வேண்டாம். அது பால் தாக்கரே வாழ்ந்த மண்ணின் குணம். அங்குப் போய் இறங்கினாலே, எப்படியாப்பட்ட நாயகனுக்கும் கொலைவெறி வந்துவிடுவது சகஜம்தான்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவார் என்ற மூதுரையின் படி கொலைவெறி கொண்ட நாயகனை கொலைவெறி கொண்ட நாயகியே காதலிக்கிறாள். சூர்யா யாரையோ துப்பாக்கியால் சுட்டுவிட்டுப் போவதைப் பார்த்த பின்தான் அவர் மீது காதலே வருகிறது சமந்தாக்கு. நாயகியை அடியாட்கள் கடத்திக் கொண்டு போய்விடுகிறார்கள். எங்கே என்றால்.. போக்கிரி படத்தில் விஜய்யும் அசினும் சந்தித்துக் கொள்ளும் அதே பாழடைந்த கோட்டை. அப்பொழுது அசின், விஜய் செய்யும் கொலைகளைக் கண்டு மிரண்டு, “உன்னைப் பார்த்தால் பயமா இருக்கு? இதைலாம் விட்டுடு வந்துடேன் ப்ளீஸ்” எனச் சொல்வார். ஆனா சமந்தா என்னப் பண்றாங்க? “என்னைத்தான் கடத்திட்டன்னு தெரிஞ்சது.. ராஜூ பாய் இங்க வந்து உங்களைலாம் கொன்னுடுவார்” என கொலை மிரட்டல் விடுக்கிறார். ‘உங்களில் யார் அடுத்த ஜெனலியா?’ போட்டியில், இப்படத்தின் மூலம் அன்னப்போஸ்ட்டாக வென்று விட்டார் சமந்தா. அவரது சிறுபிள்ளைத்தனம் அவரது உடையிலும் பளிச்செனப் பிரதிபலிக்கிறது. சரி சமந்தாதான் சின்னப்பிள்ளை அறியாமல் இருக்கிறார் என்று பார்த்தால், வர்ற போற பெண்மணிகள் அனைவருமே சமந்தாக்கு ‘டஃப் காம்பட்டீஷன்’ தருகிறார்கள்.

தமிழ்ப்படத்தில் காதலுக்காக என்னென்னமோ தியாகம் பண்ணிப் பார்த்து இருப்போம். இயக்குநர் லிங்குசாமி இங்கும் ஒரு புதுமையைப் புகுத்தியுள்ளார். சூர்யாவின் கொலைவெறிக்காக தன் காதலையே தியாகம் செய்கிறார் சமந்தா. எங்கே தன்னைப் பார்த்துவிட்டால் சில பல கொலைகள் புரியாமல் போய்விடுவாரோ என அஞ்சி, தன் முகத்தைக் காட்டாமல் மூடிக் கொள்கிறார். என்னே ஓர் அசுரக் கொலைவெறி!?

படத்தின் வில்லனான மனோஜ் பாஜ்பாய் கருணையானவர்தானே தவிர அதி திறமைசாலி. 3-டி ஹாலோகிராம் ப்ரொஜக்ஷனில் தெரியும் தன்னை எங்கேயோ சூர்யா சுட்டதும், அதைத் தெரிந்து கொள்கிறார் மனோஜ் பாஜ்பாய். கடைசியாக இத்தகைய திறமை கொண்ட வில்லன் விட்டலாச்சாரியார் படத்தில்தான் வந்தார். நாயகனுடன் இருப்பவர் இறக்க வேண்டுமென்ற பல வருட திரையிலக்கணத்தையும் கட்டுடைத்துள்ளார் லிங்குசாமி (எல்லாம் வில்லனின் கருணைக் குணத்தால்தான்!) கவிஞர் ஜோ மல்லூரி, ராஜூ பாயைப் புகழ கடைசி வரை உயிருடன் இருக்கிறார். ‘அவங்க இரண்டு பேரும் இதுக்குக் கொடுத்த விலை என்னத் தெரியுமா?’ என அவர் கேட்டதும் ப்ளாஷ்-பேக் திறக்கிறது. அங்கே ஃப்ரேமில் ஒரு பெண் ஆடிக் கொண்டிருக்கிறார். ‘ஙே.. நல்ல விலை கொடுத்திருக்காங்க!’ என நாம் நினைத்தால், அதென்ன விலை என்ற ட்விஸ்ட்டை நீட்டி முழக்கிச் சொல்கிறார். லிங்குசாமி, கழுகாக நின்னு நிதானமாக இரைகளான பார்வையாளர்களுக்கு, அவர்களுக்குத் தெரிந்த கதையையே சொல்கிறார்.

படம் சுபமாக முடிவது போல் மேற்பார்வைக்குத் தோன்றினாலும், ஒரு பெரும் திகிலோடுதான் படத்தை முடிக்கிறார். கொலைவெறி தம்பதிகள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் ஏறப் போவதுபோல் படம் முடிகிறது. சுட்ட கையும், பஞ்ச் வசனம் பேசிய வாயும் போற இடத்தில் சும்மா இருக்குமா? அடுத்த பாகத்திற்கான முடிச்சோடு நிறுத்தியிருப்பதுதான் ஹாலிவுட் பாணி டைரக்டரியல் டச்!