
நாயகனின் பெயரைக் கூட மாற்றாமல் முரளி என்றே வைத்து, மிக மிகச் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் அரண்மனையையே அரண்மனை-2 ஆக்கி விட்டுள்ளார் சுந்தர்.சி.
முரளியின் வீட்டில் அமானுஷ்யனான சம்பவங்கள் நிகழ்கின்றன. தனது மாமன் மகன் ரவியின் உதவியுடன் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
முந்தைய அரண்மனையை விட, இப்படம் சகல விதத்திலும் சிறப்பாய் உள்ளது. ஆனால், அதே திரைக்கதை என்பதால் பார்த்த படத்தையே பார்க்கும் அசுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
பழி வாங்க நினைக்கும் மாயா ஏன் இறக்கிறாள் என்ற கிளைக் கதை அச்சமூட்டுகிறது. அக்காட்சிகளில் ராதா ரவியின் நடிப்பும் அனுபவமும் அற்புதமாய் வெளிபட்டுள்ளது. கெளரவக் கொலைகளை முற்றிலுமாக இம்மண்ணிலிருந்து ஒழிக்க மாயா போல் நான்கு பேய்கள் நிஜமாகவே உலாவினால் உண்மையிலேயே நன்றாகத்தான் இருக்கும். ஹன்சிகா முகத்தில் இன்னும் கோபம் காட்டியிருக்கலாம்.
சித்தார்த் ஆச்சரியப்படுத்துகிறார். பேய்களும் பெண்களும் ஆட்சி செய்யும் திரையில் தனக்கென்றொரு முக்கியத்துவம் இருக்காதெனத் தெரிந்தும், துணிந்து அக்கதாபாத்திரத்தை ஏற்று முடிந்த மட்டும் தன்னிருப்பைக் காட்ட முயன்றுள்ளார். பாடல் காட்சிகளில் த்ரிஷாவை விட அதிக ஸ்கோப் இவருக்குத் தானெனினும் தன் உடை அலங்காரத்தால் த்ரிஷா அதையும் காலி செய்து விடுகிறார்.
சூரிக்கு ஜோடியாக்கிவிட்டனர் கோவை சரளாவை. சூரி – திண்டுக்கல் சரவணன் இணை சிரிப்பை வர வைத்தாலும், சூரி – கோவை சரளா இணை ஏமாற்றமே அளிக்கின்றனர். ராய் லட்சுமிக்குப் பதிலாக பூனம் பஜ்வாவை களமிறக்கினாலும், அவரொரு கேரளப் பதுமை போல் வந்து போகிறார். இறுதியில் மூன்று கதாநாயகிகளையும் ஒரு பாடலுக்கு ஆட வைத்து அக்குறையைப் போக்கி விடுகிறார். நம்பூதிரியாக நடித்திருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் ஆகிருதி கதாபாத்திரத்துக்குப் பொருந்த வைக்கிறது.
படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸும், ஒளிப்பதிவும் மிரட்டியுள்ளது. படத்தின் உண்மையான நாயகன் ஒளிப்பதிவாளர் U.K.செந்தில் குமார் தான். படத்தின் இன்னொரு நாயகன் கலை இயக்குநர் குரு ராஜ். படத்திற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட 103 அடி பிரம்மாண்ட அம்மன் சிலையை திரையில் கண்டு பிரமிக்காமல் இருக்கவே முடியாது. எனினும் யூகிக்க முடிந்த திரைக்கதை படத்தைச் சோபிக்க விடாமல் செய்து விடுகிறது.