

காதலை ஒரு AI செயலியைக் கொண்டு அளக்க முடியும் என்கிறார் LIK எனும் நிறுவனத்தின் தலைவரான சூரியன். காதலெனும் இதயத்தின் அழகான உணர்ச்சியை அப்படியெல்லாம் அளந்து விட முடியாது என சவால் விடுகிறான் வைப் வாசி (Vaibhav Vasudevan). வெற்றி யாருக்கு என்பதே படத்தின் முடிவு.
கதை 2040 இல் நடக்கிறது. திரையில் அதைக் கொண்டு வர மிகவும் சிறப்பாக உழைத்துள்ளனர். ஆனால் இதே கதை 2025 இல் நடப்பதாகக் காட்டினாலும், பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. எதிர்காலத்தை வடிவமைக்கும் மெனக்கெடலில், கதைக்குள் போக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். எதிர்காலத்தின் படோடாபம் ரசிக்க வைத்தாலும், அது தேவையற்ற கவனச்சிதறலுக்கே வழி வகுத்துள்ளது. இரண்டாம் பாதியில்தான் படம், நாயகன் உடைந்து போன பின், அந்த உலகத்தின் ஆடம்பரம் மறைந்து கதாபாத்திரங்கள் கொஞ்சமாகத் தெரியத் தொடங்குகின்றனர். வேலை, காதலைத் தவிர்த்த வேறு கவலைகள் அற்றதாக உள்ள உலகமும் சற்றே அந்நியமாக உள்ளது.
எப்பொழுதும் ஃபாலோயர்ஸை அதிகப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் தாய் வாளமீனும், மகள் தீமாவும், பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆகாமலே விலகியே உள்ளனர். இன்னொரு பக்கம், ஆர்கானிக் வேர்ல்டின் நிறுவனரான தமிழ்க்கடலும், அவரது மகன் வைப் வாசியும் மொபைல் உபயோகமே முற்றிலும் இல்லாத சூழலில் உள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், ஆர்கானிக் வேர்ல்டிற்குள் வர வேண்டுமென்றால் தங்களது வடிவான அதிநவீன மொபைலைச் சிதறு தேங்காய் போல் தூக்கி வீசி உடைக்க வேண்டுமாம். சமூக ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக, ஒரு வாரமோ, மூன்று மாதம், ஆறு மாதம் என குறுகிய கால தண்டனை பெற்றே ஆர்கானிக் வேர்ல்டிற்குள் வரும் அனைவருமே தங்கள் மொபைலை உடைக்கின்றனர். ரொம்பப் பேசாமல் அமைதியான தமிழ்க்கடலாகச் சீமான் நடித்திருந்தாலும், மற்றவர் உடைமையைக் குற்றவுணர்வின்றி உடைக்கும் பாத்திரத்திற்கு இயல்பாய்ப் பொருந்தவே செய்கிறார்.
மொபைலுக்கு அடிமையானவர்களை LIK செயலி ஆட்டிப் படைக்கிறது. ஒருவர் யாரைக் காதலிக்கவேண்டும் என்பது வரை லவ் ஸ்கோர் கொடுத்து, தன் கட்டுப்பாட்டிற்குள் அனைவரையும் வைத்துள்ளது. கிட்டத்தட்ட இதே கதையம்சத்தைக் கொண்ட ‘ஹார்டிலே பேட்டரி’ எனும் ஜீ5 இணைய தொடர், இந்தப் படம் செய்யத் தவறவிட்ட மேஜிக்கை மிக சூப்பராகச் செய்திருக்கும். இப்படம், தான் எடுத்துக் கொண்ட கருவான மனம் Vs செயலி என்பதிலிருந்து, ஒரு கார்ப்ரேட் பிசினஸ்மேன் Vs சாதாரன இளைஞன் என தமிழ் சினிமா அடித்துத் துவைத்தக் கருவிற்குக் க்ளைமேக்ஸின் பொழுது இறங்கி விடுகிறது.
‘மயிலிறகே’ பாட்டுக்கு SJ சூர்யாவின் ரோபோக்களுடனான எனர்ஜியான ஆட்டம் அதிரிபுதிரியாய் உள்ளது. படத்தில் அனைவரது அப்ளாஸாயும் பெறும் காட்சி இதுவாகத்தான் இருக்கும். சூரியனாக, SJ சூர்யா நன்றாக என்ஜாய் செய்து ரசித்து நடித்துள்ளார். ஏனோ அந்த எனர்ஜி பிரதீப் ரங்கநாதனிடம் இல்லை. அவரது முந்தைய படங்களைப் போல ஒரு வசீகரமான துள்ளல் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். வழக்கம் போல் எல்லாச் சுமையையுமே அனிருத்தே தன் தோள்களில் தாங்கிப் பிடித்துப் படத்தைக் கரை சேர்க்கிறார்.


