படத்தில் கதை என்று பார்த்தால் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றே! கொலை செய்யப்பட்ட பெண் பேயாகி பழிவாங்குகிறார்.
தன் பரம்பரை சொத்தான அரண்மனையை விற்க கிராமத்திற்கு வருகிறான் முரளி. வந்த இடத்தில் அமானுஷ்யமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பேயின் பிடியில் இருந்து அந்தக் குடும்பம் எப்படித் தப்பிக்கிறது என்பதுடன் படம் முடிகிறது.
சுந்தர்.சி படத்தில் என்ன எதிர்பார்ப்போமோ அதை அவர் ஏமாற்றாமல் வழங்கியுள்ளார். சந்தானம், கோவை சரளா, மனோபாலா, சாமிநாதன் ஆகிய நடிகர்களைக் கொண்டு நகைச்சுவைக்கு உறுதியளிக்கிறார். படத்தைக் காப்பாற்றுவது பேய் அல்ல. சந்தானமும் கோவை சரளாவுமே! அதுவும் மனோபாலா சந்தானம் வாயில் மாட்டும் பொழுதெல்லாம் திரையரங்கம் அதிர்கிறது. “முருங்கை காய் சாப்பிட்டா மூடு வரும்; இங்க முருங்கை காய்க்கே மூடு வந்துடுச்சே!” என மனோபாலாவைக் கலாய்க்கிறார். வெங்கட் ராகவனின் வசனங்களில், “மூடு (mood)” என்ற வார்த்தையை வஞ்சனையின்றி படத்தில் கேட்க முடிகிறது.
ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, ஹன்சிகா என படத்தில் மூன்று கதாநாயகிகள். ஒருவர் பேயாகிறார்; இன்னொருவர் பேயால் பிடிக்கப்படுகிறார்; மற்றுமொருவர் கவர்ச்சிக்கு உதவுகிறார். வினயின் தமிழ் உச்சரிப்பும், ஆண்ட்ரியாவின் தமிழ் உச்சரிப்பும் தெலுங்கு டப்பிங் படத்திற்கு வந்துவிட்டோமோ என எண்ண வைக்கிறது. நிதின் சத்யாவிற்குதான் படத்தில் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம் அமையவில்லை. ரவி எனும் வக்கீலாக சுந்தர்.சியும் படத்தில் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். சீரான திரைக்கதையாக இல்லாவிட்டாலும் அலுப்புத் தட்டாமல் பார்த்துக் கொள்கிறார். பேய்க்கு பேதி மாத்திரை தரப் பார்ப்பது; நெஞ்சு வலி என பொய் சொல்லி பேயை ஏமாற்றப் பார்ப்பது ஆகிய காட்சிகளில் சுந்தர்.சி பளீச்செனத் தெரிகிறார். வில்லனாக வருகிறார் சரவணன். அவரை ஆண்ட்ரியா மிரட்டுவதாக நம்மை ஒப்பனை, இசை, கேமிரா கோணம் என சகலத்தையும் கொண்டு நம்மை நம்பவைத்துவிடுகிறார் சுந்தர்.சி.
ஏற்கெனவே தெலுங்குப் படத்திற்குப் போடப்பட்ட அரண்மனை செட்டை இப்படத்திற்கு உபயோகித்துள்ளனர். எனினும் கலை இயக்குநர் குருராஜின் உழைப்பு படத்தின் எல்லா ஃப்ரேமிலும் தெரிகிறது. பரத்வாஜின் இசையில், ‘பெட்ரமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ பாடல் ஈர்க்கிறது. க்ளைமேக்ஸீல் வரும், ‘உன்னையே எண்ணியே’ என்ற அம்மன் துதிப்பாடல் ‘சந்தணம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது’ என்ற பாடல் பாணியிலுள்ளது. எனினும் திரைக்கதை ஓட்டத்தில் அதன் தாக்கம் வலுவிழுந்து விடுகிறது.
மூன்று நாயகிகள், சந்தானம், கோவை சரளா, கிராஃபிக்ஸ் என ஊரைக் கூட்டி அரண்மனை தேரை அழகாக நகர்த்தியுள்ளார் சுந்தர்.சி.