Shadow

ராயன் விமர்சனம்

D50 எனும் தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இது இயக்குநராக அவருக்கு இரண்டாம் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

காத்தவராயன், முத்துவேல்ராயன், மாணிக்கவேல்ராயன் என ராயன் சகோதரர்கள் மூவர். அவர்களுக்கு துர்கா எனும் தங்கை பிறக்கிறாள். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவளைத் தூக்கிக் கொண்டு ராயன் சகோதரர்கள் சென்னை வந்துவிடுகின்றனர். வளர்ந்ததும், குடிகாரரான முத்துவேல்ராயனால் ஒரு பெரும்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதை ஒன்றாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் ராயன் சகோதரர்கள், ஒரு கட்டத்தில், கதையில் எதிர்பாராத திருப்பமும், அதிர்ச்சி மதிப்பீடும் வேண்டுமெனக் கருதி தொலைந்து போகிறார்கள்.

படம் தொடங்கி இடைவேளை வரை நறுக்கு தெறித்தாற்போல் உள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருக்கும் ராயன் சகோதரர்களின் வாழ்க்கை, அந்த வாழ்விடம், முத்துவேல்ராயனுக்கும் மேகலாவுக்கும் இடையேயான காதல் என முதற்பாதி கச்சிதமாகப் பயணிக்கிறது. காத்தவராயனான தனுஷ் தனது ஸ்பேஸைச் சுருக்கி, மற்ற கதாபாத்திரங்களை அதன் தன்மைகளோடு உலாவ விட்டு, சூழலுக்கேற்ற பாவனைகள் மட்டும் வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

முதற்பாதியின் நாயகனென முத்துவேல்ராயனாக நடித்திருக்கும் சந்தீப் கிஷனைத்தான் சொல்லவேண்டும். சுவாரசியமான அவரது கதாபாத்திர வார்ப்பை முதற்பாதியோடு நிறுத்திக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது. நாயகனுக்கே இந்த நிலை என்றால், துணை நாயகனாக எட்டிப் பார்க்கும் மாணிக்கவேல்ராயனாக நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம் பாத்திரம் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனினும் நடிகர்கள் தேர்வுகளில் இயக்குநராக தனுஷ் வாகை சூடியுள்ளார்.

சந்தீப் கிஷனின் காதலி மேகலாவாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி ரசிக்க வைக்கிறார். துர்காவாக நடித்துள்ள துஷாரா விஜயன், படத்தின் முதற்பாதியில் தேவைக்கேற்பத் தோன்றி ரசிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில், அவரது ஆவேசத்திற்கான (காளி metaphor) குண மாற்றம் (Transition) இயல்பாக இல்லாதது படத்தின் மிகப் பெரிய குறை. நவீன பாசமலர் ஆக உய்யவேண்டிய படம், குருதி கொப்பளிக்கும் பாசமலராய் சிவந்துவிடுகிறது. எங்கே கோபப்படவேண்டுமென்று முதற்பாதியில் தெளிவோடு இருக்கும் காத்தவராயன், வயிற்றில் குத்துப்படுவதால் இரண்டாம் பாதியில் அத்தெளிவை இழந்துவிடுகிறார். தேவையின் பொருட்டு ஆக்ஷன் என்ற தெளிவு போனதும், இரண்டாம் பாதியில் தனுஷ்க்குள் இருக்கும் மாரி விழித்துக் கொள்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷுடன் இணைந்து பார்வையாளர்களை முடிந்த அளவு காப்பாற்றுகின்றனர். கலை இயக்குநரின் வேலை படத்தின் முதல் சட்டகத்தில் இருந்து கடைசி வரையிலும் அபாரமாக உள்ளது.

படத்தின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு எஸ்.ஜே.சூர்யா உதவியுள்ளார். மொட்டை தலை, கட்டை மீசை, நிலைகுத்திய பார்வை என தனுஷ் படம் முழுவதும் மிரட்டிக் கொண்டிருக்க, சேது எனும் இரண்டு பொண்டாட்டிக்காரர் வேடத்தில் கலகலப்பிற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ‘ரேப் பண்ணவன் சாகணும்’ என நியாயஸ்தாராகவும் நடந்து கொள்கிறார். கெட்டவனுக்குள்ளும் ஒரு நல்ல குணம் இருக்கும் என்ற இயக்குநரின் அந்த ‘டச்’ ரசிக்க வைக்கிறது.

படக்கதையின் மையச்சரடாய் துரோகம் கனன்று கொண்டிருக்கிறது. ஆனால் துரோகத்தையோ, துரோகத்தின் வலியையோ திரைக்கதை பார்வையாளர்களுக்குக் கடத்தவில்லை. துரோகம் செய்தவர்களும் அதைத் துரோகமாகக் கருதவில்லை; பிரதான கதாபாத்திரங்களும் அதை உளமார அதை உணர்ந்ததாகக் காட்டப்படவில்லை. மாறாக அகம் சார்ந்த agony (வேதனை) என்பதை ரத்தம் தெறிக்கும் புறவலியாகச் சுருக்கி, அதற்குப் பழிவாங்குவதாகக் கொண்டு போய்விடுகிறார் தனுஷ். படத்தின் முதற்பாதியை ஒருவரும், இரண்டாம் பாதியை வேறொருவரும் இயக்கியுள்ளனரோ எனும் ஐயத்தை எழுப்பமளவு மாறுபட்டுக் கிடக்கிறது. இடையிடையே, சென்னை காவல்துறை ஆணையராக வரும் பிரகாஷ்ராஜ், “நான் என் சிட்டியைச் சுத்தம் செய்யப் போறேன்; அப்பாவோட மரணத்துக்குப் பழிவாங்கப் போறேன்” என குறுக்குசால் ஓட்டிக் கொண்டுள்ளார்.

மனம் போன போக்கில் ஒருவன் நடந்தாலே அவன் நினைத்த இடத்திற்குப் போய்ச் சேர படாதபாடுபட வேண்டியதிருக்கும். இப்படத்தின் இரண்டாம் பாதியில், அத்தனை கதாபாத்திரங்களும் திரைக்கதையை விட்டு விலகி மனம் போன போக்கில் நடக்கின்றனர். “எத்தனை பேர் வந்தாலும் ராயன் குத்துவான்” என்ற முட்டுச்சந்தில் திரைக்கதை நிராதரவாய் நிற்கிறது.