
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் டாக்கீஸ், நான்கு குறும்படங்களை ஒன்றாக்கி 132 நிமிட அவியலாக்கியுள்ளனர்.
நான்கும் ஒவ்வொரு விதம்.
மோஹித் மெஹ்ராவின் ‘ஸ்ருதி பேதம்’, புறத்திணைப் பிரிவுகளான பெருந்திணையையும் (பொருந்தாக் காதல்) கைக்கிளையையும் (ஒரு தலை காதல்) கலந்து கட்டிய கதை. தன்னை விட ஒரு வயதே மூத்தவரான சித்தி மீது நாயகனுக்கு காதல் வந்து விடுகிறது. இது போன்ற பேசுப்பொருள்களை நாடகப் பாணியில் திரையில் உலவ விடுவதில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சமர்த்தர். ஆனால், மோஹித் மெஹ்ராவோ முற்றிலும் நகைச்சுவையுடன் இதை அணுகியுள்ளார். சில நிமிடங்களே எனினும், இந்தப் பேசுப்பொருள் தருகின்ற கிளர்ச்சி அலாதியானது.
ஆனால், கலாச்சாரக் காவலர்களுக்கு வேலை வைக்காமல் படம் சுபமாகவே முடிகிறது. சித்தி ஸ்ருதியாக அம்ருதா நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் மணிரத்னம் படத்து நாயகிகளை நினைவுபடுத்துகின்றது. மற்ற மூன்று குறும்படங்களிலும் நாயகி இல்லாததால், அவியலின் கதாநாயகி இவரே.! அவர் புல்லட் ஓட்டும் அழகும் கம்பீரமும் ரசிக்க வைக்கிறது. ஸ்ருதியின் அக்கா பையன் ராஜாக ரோஹித் நடித்துள்ளார். பார்ப்பதற்கு சட்டென சூது கவ்வும் படத்து பாபி சிம்ஹாவை ஞாபகப்படுத்துகிறார். அம்ருதா, ரோஹித், ராஜின் நண்பன் நிப்ரீத் ஆகிய மூவருமே கச்சிதமான தேர்வுகள்.
லோகேஷ் கனகராஜின் “களம்”, நிராகரிக்கப்படுவதால் ஏற்படும் வன்மத்தைச் சுட்டிக் காட்டும் கதை. அவ்வன்மத்தை மீறி நாயகன் தனக்கான களத்தை அடைகிறானா இல்லையா என்பதே குறும்படத்தின் கதை. ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பட நாயகனான தீபக் பரமேஷ்தான் இக்குறும்படத்தின் நாயகன். நான்கில், இது சற்றே நீளமான படமாகத் தோன்றுகிறது. பயந்தால் பக்திப் பாடல்கள் கேட்கும் கதாபாத்திரம், தொடக்கத்தில் ஈர்த்தாலும், சரியாக உபயோகிக்கப்படாததால் மனதில் நிற்கவில்லை. மற்ற பாத்திரங்களின் நிலைமையும் அப்படியே! ஆனால், தொடக்கக் காட்சி முதலே வருவதால் தீபக் மட்டும் மனதில் பதிகிறார். வாட்டம், வருத்தம், ஏமாற்றம், கோபமென முக பாவனைகளிலேயே வித்தியாசத்தைக் காட்டியுள்ளார்.
குரு ஸ்மரனின் “கண்ணீர் அஞ்சலி”, இறந்த பின்னும் தன் நண்பர்களுடன் ஊர் சுற்ற நினைக்கும் ஒருவனைப் பற்றிய கதை. இந்தக் கதையின் நாயகனும் தீபக் பரமேஷே! ஒரு கதையில் இருந்து சட்டென மறு கதைக்கு மனம் தாவினாலும், அதே நாயகனை அப்படி உடனடியாக வேறு கதையில் பொருத்திப் பார்க்க முடியாது. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பின் மூலம் அதைச் சாத்தியமாக்கி விடுகிறார் குரு ஸ்மரன். அர்ஜுனன் நந்தகுமாரும், தீபக் பரமேஷும் ‘களம்’ உருவாக்கியிருந்த சீரியஸ்தன்மையை நொடிகளில் போக்கிவிடுகின்றனர்.
அல்ஃபோன்ஸ் புத்திரனின் “எலி”, நச்சென்றொரு குறும்படம். ஒருவன் தன்னை பூனையாகப் பாவித்து, விதி எப்படி எலியை வீழ்த்துமென கர்ணபரம்பரைக் கதையைச் சொல்லுகிறான். ஆனால், விதி யாரை எலியாக்குகிறது என்பதுதான் படத்தின் முடிவு. நேரம் படத்தில் வந்த வட்டிராஜா கெட்டப்பிலேயே பாபி சிம்ஹா வருகிறார்; நிவின் பாலியும் அப்படியே வருகிறார். இப்படத்தின் நாயகனாக பாபி சிம்ஹாவைத்தான் சொல்ல முடியும். மூன்று கதாபாத்திரங்களில், ஒருவன் பேசுகிறான் மற்ற இரண்டு பேர் வெறுமனே கவனிக்கிறார்கள். அந்த இருவரையும் கூட ரசிக்க வைத்து விடுகிறார் அல்ஃபோன்ஸ் புத்திரன். பின்னணி இசையிலேயே ஒரு கதை சொல்வதென, குறும்படம் தரும் எல்லையற்ற சுதந்திரத்தை மிக அழகாகத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார்.
இந்த நான்கு குறும்படங்களும் தொடங்கும் முன், ஷமீர் சுல்தானின் இயக்கத்தில் வரும் “உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் மச்சான்” எனும் குறும்படம், ஒரு பொறியியல் மாணவனின் வாழ்க்கையை விமர்சன ரீதியாக போஸ்ட்-மார்ட்டம் செய்கிறது. நவீன் சோலோவாக கலக்கியுள்ளார். அந்தக் கேள்விகளும், இறுதி ட்விஸ்ட்டும் ஈர்த்தாலும், அதை அசை போட்டே மீட்க வேண்டியிருக்கிறது. அவியலின் குறையும் அதுவே! கார்த்திக் சுப்புராஜ் இதை ‘குறும்படங்களின் திரட்டு (Anthology of short-films)’ எனக் குறிப்பிட்டாலும், இந்த ஐந்து குறும்படங்களையும் இணைக்கும் ஒரு கண்ணியோ, தொடர்போ இல்லாதது ஒரு பெருங்குறை.