காலத்தை வென்ற பல காதல் படங்களைத் தயாரித்த பெருமைக்குரிய யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தமிழ்த் தயாரிப்பான “ஆஹா கல்யாணம்” படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் முடிவடைந்தது. தெலுங்குத் திரையுலகின் பிரபல கதாநாயகனான நானி நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம் என்கிற வகையில் “ஆஹா கல்யாணம்” படத்திற்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது.
இளைஞர்களைப் பெருமளவில் கவர்ந்து இழுக்கும் வகையில் இளமைத் துள்ளளுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நடித்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது என்கிறார் நானி. மேலும் படத்தின் நாயகி வாணியுடன் பணியாற்றியது இனிமையான அனுபவம். அவரது உற்சாகமும் ஈடுபாடும் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்றார்.
“இயக்குநர் கோகுல் கிருஷ்ணா, எனக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். தனக்கு என்ன வேண்டுமோ, அது கிடைக்கும் வரை அயராத அவரது உழைப்பும் நேர்த்தியும்தான் அவரை மிகப் பெரிய இயக்குநராக அடையாளம் காட்டுகிறது. யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அமரத்துவம் வாய்ந்த காதல்படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அவர்களின் தயாரிப்பில் ஹீரோவாய் நடிப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை. அது என்னுடைய பாக்கியம். அதற்காக அவர்களுக்கு என்னுடைய நன்றி” என உருகினார் நானி.
“இந்தப் படத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டது ஏராளம் . நடிக நடிகையர் தேர்வாகட்டும் , படப்பிடிப்பு நடத்தும் நேர்த்தியும் திட்டமிடுதலும், படத்தை பெரிய அளவுக்கு விளம்பரம் செய்யும் செயல்திட்டமும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது” என்று தன் நினைவுகளைச் சொல்லி முடித்தார். இளம் பெண்களின் கனவு நாயகனான நானியின் ஆஹா கல்யாணம் காதலர்களுக்கு உகந்த மாதத்தில் வெளியாவது படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுத் தரும் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.