இயக்குநர் சுசீந்திரனின் கதையமைப்பில் உருவாகும் ‘வீர தீர சூரன்’ எனும் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், கேத்ரின் தெரஸா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கிறார். இப்படத்தை N.ஷங்கர் தயாள் இயக்குகிறார்.
“ என்னுடைய பல்வேறு தொழில் அலுவல்களுக்கு மத்தியில் நான் ஒரு சினிமா ஆர்வலனாகவே இருந்துள்ளேன். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் திண்ணமாய் இருந்த சமயத்தில் எதேச்சையாக சுசீந்திரனிடமிருந்து, இந்தக் கதையைக் கேட்டேன். சொல்வதற்கு வார்த்தையில்லாமல் அசந்து போனேன். மற்றவை சொல்லி வைத்தாற்போல் நிகழ ‘வீர தீர சூரன்’ படத்தை நானே தயாரிக்கிறேன். விஷ்ணு விஷால் இக்கதைக்கு நாயகனாக கச்சிதமாய் அமைய, மே மாத மத்தியில் முதல் கட்டப் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகவுள்ளது” எனக் கூறினார் தயாரிப்பாளர் AVR புரொடக்ஷன்ஸ் V.R.அன்புவேல் ராஜன்.
தேசிய விருதுபெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில், ஒளிப்பதிவாளர் திவாகர் ஒளிப்பதிவில், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இசையமைப்பாளர் வேத் ஷங்கர் இசையில் உருவாக உள்ளது வீர தீர சூரன்.