Shadow

உச்சிதனை முகர்ந்தால் விமர்சனம்

Uchithanai
உச்சிதனை முகர்ந்தால்தமிழகத்தில் தஞ்சம் புகும் ஈழத்துச் சிறுமி பற்றிய நெகிழ்வான படம்.

புனிதா என்றழைக்கப்படும் புனிதவதியின் வயது 13. அவளின் சொந்த ஊர் கிழக்கிலங்கையின் முக்கிய நகரங்களில்(!?) ஒன்றான மட்டக்களப்பு.  சிங்கள இராணுவத்தினரால் களவியல் வன்முறைக்கு ஆளாகி கர்ப்பமுறுகிறார். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பகிரங்கமாக பேசி சிறைச் செல்லும் பேராசிரியர் நடேசனும் அவரது மனைவி நிர்மலாவும், கள்ளப் படகில் வந்து சேரும் புனிதவதி மற்றும் அவரது தாயாருக்கு அடைக்கலம் அளிக்கின்றனர். தன் கணவர் சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருப்பாரோ என அச்சத்தில் தன் மகளை விட்டு விட்டு மீண்டும் இலங்கைத் திரும்புகின்றார் புனிதவதியின் தாயார். நடேசன் தம்பதியினருடன் தனித்து விடப்படும் புனிதவதியின் நிலை என்ன ஆனாது என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

கடலில் கரைத்த பெருங்காயம் போல் வணிகக் குப்பையின் இடையில் ஓரிரு வசனங்களில் ஈழத்தை இழுக்காமல் படத்தின் கருவாகவே கொண்டு வந்துள்ள படம். அதற்காகவே இயக்குனர் ‘புகழேந்தி தங்கராஜ்’ பாராட்டப்பட வேண்டியவர். படத்திற்கான கருவை ஓர் உண்மை சம்பவத்தில் இருந்து எடுத்துள்ளதாக தெரிகிறது.

படத்தின் நாயகி புனிதவதி ஆக நடித்துள்ளார் நீனிகா. முழுப் படத்தையும் கட்டி இழுக்கிறார். துறுதுறு என விளையாட்டுக் குணம் மாறாத மங்கை. அடிக்கடி கடந்த கால வாழ்க்கையை அசைப் போட்டு கதை சொல்லி ஆக உருமாறுகிறார். பூச்செடிகள், பறவைகள், வளர்ப்பு நாய் என சக உயிரினங்கள் மீதும் வாஞ்சையைப் பொழிகிறார். இது ஒரு படம் தான் எனினும் இயக்குனர் மீது ஆத்திரம் வருவதை தடுக்க இயலவில்லை. சிங்கள இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு, அதனால் கர்ப்பமுற்று, அந்தக் கர்ப்பத்தைத் தவிர்க்க நாட்டு வைத்தியம் முயன்று, அதனால் மேலும் பலவீனமாகி, பின் சொந்த மண் விட்டு ஓடி, புது இடத்தில் தாயைப் பிரிந்து என மருந்திற்கு கூட அம்மங்கைக்கு ஒரு நல்லது நடப்பதாக இயக்குனர் காட்டவில்லை. சரி இந்த மட்டுக்குமாவது விட்டாரே என நினைக்கும் முன் ஆட்கொல்லி நோய் முற்றி விட்டது என்றும், உயிருக்கே ஆபத்தென்றும் மேலும் அம்மங்கையை துன்புறுத்துகிறார். மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் புனிதவதியைச் சேர்த்து பதைபதைப்பை உண்டு பண்ணி விட்டு, “இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ!! இழிவாய் கிடக்க செருப்பா நீ!!” என காசி ஆனந்தனின் தணிக்கைச் செய்யப்பட்ட வரிகளுடன் வீராவேச பாடல் இமானின் இசையில் ஒலிக்கிறது. என்னவென்று சொல்வது!? படத்தின் தொடக்கம் முதல் குவிமையமாக இருப்பவள் புனிதவதி. அந்த 13 வயது மங்கையின் உயிர்ப் போராட்டத்தை ஊசலில் விட்டு விட்டு, “மாந்தர் உயிரோ நிலையற்றது.. மானம் தானடா நிகரற்றது.. போராடு நீ வீரோடு” என தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இயக்குனர் இறங்குகிறார். படத்தில் வேறு நல்ல இடமே இயக்குனருக்கு கிடைக்கவில்லையா என கோபம் வருகிறது. பல இடங்களில் இப்பாடலை அழகாக வைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மனித வெடிகுண்டாக பெண் போராளி புறப்படும் இடம் ஓர் உதாரணம். புனிதவதி என்னும் பாத்திரத்திற்கு எவ்வளவு சங்கடங்கள் தர முடியுமோ அவ்வளவும் அளித்து, பார்வையாளனை மிகவும் பலவீனப்படுத்தி தான் so called தமிழுணர்வை நிறுவ வேண்டுமா!? இரத்தம், மரணம், ஓலம், சிங்கள வல்லூறுகள் என தமிழுணர்வை ஊக்குவிக்க புறக் காரணிகள் தேவையா!? கடந்த காலத்தின் கோரப் பக்கங்களையே எத்தனை முறை வாசித்துக் கொண்டிருப்பது!? எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை வர வைக்க ஒரே ஒரு காட்சியாவது படத்தில் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.

“படம் முடியும் போது புனிதவதி என்கிற குழந்தைக்காக அழுவீர்கள். அந்தக் கண்ணீர்.. ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் கோபாவேசத்தை எழுப்பும்” என இயக்குனர் ‘சொல்லி‘ உள்ளதாக தெரிகிறது. ஏன் பார்வையாளன் அழணும்?? அழுது அழுது வற்றியக் கண்ணீரை மேலும் ஆழமாக தூர் வாரி எடுக்கும் முயற்சியா இப்படம்!? ஈழத்தைப் பற்றிய அக்கறையும், வருத்தமும் இல்லாத தமிழகத் தமிழன் இங்குண்டா!! ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலைமையில் அன்றோ அனைவரும் உள்ளனர். ஈழம் மலர எத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கணும் என்ற சொல்ல இங்கு ஒருவரும் இல்லை. வருபவர் எல்லாம் இழந்தவைகளை மட்டுமே பட்டியல் போட்டு கோபாவேசம் தணியாமல் இருக்க தூபம் போட்டவண்ணம் உள்ளனர்.

காவல்துறை அதிகாரி சார்லஸ் ஆன்டனி ஆக ‘சீமான்’ நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்து விளம்பரம் தேடிக் கொண்டுள்ளனர். இயல், இசை என படத்தில் சீமானுக்கு இரண்டு புதல்விகள். ‘நாடகம் எப்போ?’ என சத்யராஜ் கேட்க, “அதான் தினமும் அரசியல்வாதிகள் நாடகம் ஆடுகிறார்களே!! நாம வேற எதுக்கு தனியான்னு விட்டுட்டேன்” என்று வலுவான பாத்திரம் கிடைக்காத குறையைத் தீர்த்துக் கொள்கிறார். மகேஸ்வரி என்னும் பாத்திரத்தில் சீமானின் மனைவியாக லாவண்யா நடித்துள்ளார். பேராசிரியர் நடேசனாக சத்யராஜ். புனிதவதியை வாஞ்சையுடனும், அவளது சூட்டிகையை ரசிப்புடனும் பார்த்தவண்ணமே உள்ளார். அவருக்கும் சேர்த்து பேசியும், நடித்தும் உள்ளார் சங்கீதா. படத்தின் பிரதான பாத்திரம் ஆன மருத்துவர் ரேகாவாக லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்துள்ளார். எய்ட்ஸ் சம்பந்தபட்ட சிகிச்சைக்கு புகழ்பெற்ற மருத்துவர் ஆக நாசர் நடித்துள்ளார். அவரும் மருத்துவர் ரேகாவும் விவாகரத்து ஆனவர்கள் எனினும் புனிதவதியின் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த அக்கறைக் கொண்டவர்களாக உள்ளனர்.

இது வணிகப் படம் இல்லை என்ற தெளிவு அனைவருக்கும் இருக்கும் என நினைக்கிறேன். அப்பொழுது கலைப் படமா அல்லது ஆவணப் படமா என்று சந்தேகம் எழலாம். ‘மாற்றுக் கரு’வைக் கொண்டுள்ளது எனினும் எப்பொழுதும் போல் இது ஒரு தமிழ்ப்படம். ‘பள்ளிக்கூடம் மீது குண்டுகள் வீசப்படும் பொழுது மாணவ மாணவிகள் பதுங்கு குழியில் பதுங்கிக் கொள்வார்கள்; அப்பவும் சிலர் உயிர் இழப்பார்கள். அப்படித் தான் நித்திலா இறந்தாள்’ என புனிதவதியின் தாயார் படத்தின் முற்பாதியில் சொல்வார். அதற்குரிய காட்சிகள் காட்டப்படும். ‘நானெல்லாம் பதுங்கு குழிக்கு போயிட்டேன். ஆனா பதுங்கு குழிக்கு வெளியில் இருந்த நித்திலா இறந்துட்டாள்’ என புனிதவதி படத்தின் பின்பாதியில் சொல்வாள். மாணவர்கள் எல்லாம் நித்திலாவைக் கையில் ஏந்தி செல்லும் ஆசிரியர் பின் ஓடுகிறார்கள் என காட்சி விரிகிறது. ‘உச்சிதனை முகர்ந்தால் உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி’ என புனிதவதியைப் பார்த்து சங்கீதா பாடுகிறார். தாயில்லாத கர்ப்பிணி மங்கையான புனிதவதியை சோஃபாவில் தனியாக படுக்க வைத்து விட்டு, சங்கீதாவும் சத்யராஜூம் அறையில் படுத்துக் கொள்கிறார்கள். வயிறு வலிக்கிறது என புனிதவதி தூக்கத்தின் நடுவில் துடிப்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் பகல் நேர வசனங்களில் மட்டும் அன்பு அமிர்தமாகவும்,  பரிதாபம் பாலாகவும் ஓடுகிறது. இந்த லட்சணத்தில், ‘ஒரு நாயுக்கு இருக்கிற அக்கறை கூட ******* (தணிக்கை செய்து விட்டனர்) இல்லாம போச்சே’ என்று சத்யராஜிற்கு வசனம் வேறு வருகிறது. தமிழருவி மணியனின் வசனங்கள் நிறைய இடத்தில் ‘டொய்ங்’ சத்தமாக கேட்கிறது.

‘எனக்கு டொக்டராக வேண்டுமென்டு ஆசை’ என்று சொல்லி விட்டு, மட்டக்களப்பில் மருத்துவர்களே இல்லை அதனால் தான் நித்திலா இறந்தாள் என காரணம் சொல்கிறாள் புனிதவதி. ஆனால் கிழக்கிலங்கையின் முக்கிய நகரமான மட்டக்களப்பில் அரசு மருத்துவமனை ஒன்றுள்ளது. இந்தக் கதை உருவாக காரணமாக இருந்த புனிதவதி அங்கு தான் சிகிச்சைப் பெற்றுள்ளார். எதார்த்தமான கலைப் படைப்பிற்கு தான் தமிழில் எவ்வளவு பஞ்சமாய் இருக்கிறது. புனிதவதியின் ஒரு புன்னகை போதும் அவளது வெகுளித்தனத்தை எடுத்து இயம்புவதற்கு. ஆனால் வசனங்களாலேயே தன் குழந்தைத் தனத்தை மீண்டும் மீண்டும் நிறுவ வேண்டிய சங்கடத்திற்கு அவளை உட்படுத்தி உள்ளனர். திடீரென்று மருத்துவ டெஸ்ட் ரிப்போர்ட்கள் புனிதவதிக்கு ஹெச்.ஐ.வி. உள்ளதை உறுதிப்படுத்துகிறது அதுவும் முற்றிய நிலையிலாம். இது தான் நம் மருத்துவர்களின் ‘டக்கு’ என இயக்குனர் எதிர்பார்த்த கோபாவேசம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மெரீனா கடற்கரையில் சத்யராஜ், சங்கீதா தம்பதியினரை கூட்டத்தில் தவற விட்டு விடுகிறாள் புனிதவதி. உடனே அங்கிருக்கும் சிலர் கர்ப்பிணி என தெரிந்தும் புனிதவதியைக் கடத்த முயல்கின்றனர். என்னக் கொடுமை இது!? கர்ப்பிணி என்றும் பாராமல்.. சிங்கள இராணுவத்தினரை நொந்து என்னப் பயன்!? இயக்குனர் நம்மவர்களை இப்படியா கேவலப்படுத்த வேண்டும்!? ஜெனலியா, ஷ்ரேயா, டாப்ஸீ, ரிச்சா கங்கோபாத்யாய் என தமிழ் பேச தெரியாத நாயகிகள் யாரையாவது கடத்தினால் வில்லன்களுக்கு கவுரதையாகவும், நமக்குப் புண்ணியமாகவும் இருக்கும். ஆனால் 13 வயது கர்ப்பிணிப் பெண்ணை கடத்துவதாக இயக்குனர் காட்சி வைத்துள்ளார். ஒன்றும் சொல்வதற்கில்லை. அனுதாபத்தை கசக்கி பிழிந்து நம்மை அழ வைத்து விட வேண்டும் என்ற உறுதியான கங்கணம் போல. ஆனால் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது. நல்லவேளை இம்முறை ரொம்ப படுத்தாமல் திருநங்கை அனு வந்து புனிதவதியைக் காப்பாற்றி வயிற்றில் பாலை வார்க்கிறார். அடைக்கலம் கொடுத்தவருக்குத் தொந்தரவாக இருக்க வேண்டாமென புனிதவதி வீட்டை விட்டு செல்கிறார். எதிரில் ரெண்டு டூ-வீலர் வருகிறது. ‘என்னப் பாப்பா.. லிஃப்ட் வேணுமா?’ என வண்டியை நிறுத்துகிறார்கள். போச்சுடா என்ற நமது மனப் பதற்றத்தை அதிகப்படுத்தாமல் கிளம்பி விடுகின்றனர். பிறகு ஆட்டோக்காரர் ஒருவர் வருகிறார். புனிதவதியோ வாடிய பூ போல் சோர்ந்து போயுள்ளார். நல்லவேளை ‘பாட்ஷா’ படத்து முன் பாதி ரஜினி போல நல்ல ஆட்டோகாரர் ஆக இருக்கார். அவர் வண்டிக் கண்ணாடியில் திருவள்ளுவர் படமும், செந்தமிழ் அரசி என்ற பெயரும் ஒட்டப்பட்டுள்ளன.

உச்சிதனை முகர்ந்தால் கடலில் கரைத்த பெருங்காயம் போல் வணிகக் குப்பையின் இடையில் ஓரிரு வசனங்களில் ஈழத்தை இழுக்காமல் படத்தின் கருவாகவே கொண்டு வந்துள்ள படம். அதற்காக மட்டும் இயக்குனர் ‘புகழேந்தி தங்கராஜ்’ பாராட்டப்பட வேண்டியவர்.

Leave a Reply