Search

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

Enakku innoru per irukku vimarsanam

அதீத ஹீரோயிசத்தையும், மாஸ் ஹீரோக்களையும், அப்படிப்பட்டவைகளை வியந்தோதிய படங்களையும் பகடி செய்யும் ‘ஸ்பூஃப்’ படமாக ரசிக்க வைக்கிறது இப்படம். தலைப்பே, அத்தகைய பகடியின் ஒரு வடிவம் தான்.

‘நைனா’ எனும் அதீத அதிகாரத்தை வழங்கும் நாற்காலியில், உட்காரத் தகுதியான நபரைத் தேடுகிறான் தாஸ். ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வரும் ஜானியை, கொலைகள் புரியும் பெரிய ‘மாஸ்’ வீரனென நினைத்து தெரியாத்தனமாக நைனாவாகத் தேர்வு செய்து விடுகிறான் தாஸ். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கலகலப்பான கதை.

Cigarette smoking is injurious to health என நான் கடவுள் ராஜேந்திரன் குரலில் ஆங்கில உச்சரிப்பைக் கேட்ட நொடி முதல், திரையரங்கில் கேட்கும் பார்வையாளர்களின் சிரிப்பொலி, அனேகமாக முதல் பாதி முழுவதும் எதிரொலிக்கிறது. அதுவும் இடைவேளைக் காட்சியில், சரவணனுக்கு முன் ஜீ.வி.பிரகாஷ் பைக்கில் அமர்ந்து செல்லும் காட்சி அதகளம். இப்படியொரு கலகலப்பான இடைவேளைக் காட்சியை வேறெந்தப் படத்திலும் பார்த்ததாக நினைவில் இல்லை.

ஒண்டிப்புலியாக நடித்திருக்கும் யோகிபாபு வயிற்றைப் பதம் பார்க்கிறார். அதே போல், ‘கோயில் பிள்ளை’யாக நடித்திருக்கும் விஜய் வரதராஜன் கலக்கியுள்ளார். வீட்டுக்குச் செல்லும் கோயில் பிள்ளை, அவனது தந்தை ஆசிர்வாதமாக நடித்திருக்கும் ‘லொள்ளு சபா’ மனோகரிடம் பேசும் காட்சியும் திரையரங்கை அதிர வைக்கிறது.

ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்தின் கலகலப்புக்கு மிகவும் உதவுகிறது. ஜானி எனும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். நாயகி ஒருவர் தேவை என்பதால், ஹேமா எனும் பாத்திரத்தில் ஆனந்தி வந்து போகிறார்.

ஜீ.வி.யின் அம்மா தனமாக நிரோஷா நடித்துள்ளார். சரண்யா, ஊர்வசி தொடர்ந்து நாயகனுக்கு அம்மாவாக நடிக்க இன்னொரு தோதான ஆளும் கிடைத்து விட்டார். அவருக்கும் தாஸாக வரும் சரவணனுக்குமான உறவுச் சிக்கலையும் வைத்து இயக்குநர் சாம் ஆண்டன் செம நகைச்சுவையைக் கொடுத்துள்ளார். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் ‘சிக்ஸ்’ அடித்துள்ளார். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு மிக கலர்ஃபுல்லாகப் படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளது.

கத்தியை எடுத்துக் கொண்டு ஓடி வரும் நான் கடவுள் ராஜேந்திரன், கட்டப்பா போல் ஆயுதத்தைப் போட்டு முட்டி போட்டவாறு சறுக்குகிறார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் மகாபலி மஹா ஆகும். இவரது வாய்ஸ்-ஓவரில்தான் கதை, டைட்டிலின் பொழுது சொல்லப்படுகிறது. மூன்று நண்பர்கள் பற்றி அனிமேஷனாகச் சொல்லப்படும் அக்கதையின் யுக்தியும் நன்றாக உள்ளது. இயக்குநர் சாம் ஆண்டன், பார்வையாளர்களின் நேரத்தைக் கலகலப்பாக்க உத்திரவாதம் அளிக்கிறார்.