
ஒருவருக்கு ஒன்பதுல குரு இருந்தால் அவர் மேற்கொள்ளும் செயல்கள் எல்லாம் வெற்றியடையும் என்கிறது ஜோதிடம்.
நண்பர்கள் நால்வர் ‘பேச்சுலர் பார்ட்டி’க் கொண்டாட பெங்களூரு செல்கின்றனர். அவர்களுக்கு அங்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எப்படி மீண்டனர் என்பது தான் படத்தின் கதை(
).


லட்சுமி ராய், சோனா, மந்த்ரா, ஹர்திகா, ரூபஸ்ரீ ஆகியோர் படத்திற்கு பலம் சேர்க்கும் பெண் நடிகைகள். ஆனால் வினய்யை கல்யாணம் செய்வதால் கீதா சிங்கையே நாயகியாக கொள்ளலாம். ஹரிதாஸ் போன்ற படங்களிலேயே பருமனான சிறுவனுக்கு யானை பிளறல் சத்தத்தைக் கொடுக்கும் பொழுது.. இந்தப் படத்தில் கேட்கவா வேண்டும்?
ஆசிரியைகளைக் காதலிக்கும் மாணவனாக ப்ரேம்ஜி அமரன்; புரோகிதராக பாஸ் (எ) பாஸ்கரன் புகழ் மங்கூஸ் சித்ரா லக்ஷ்மணன்; நாயகியின் தந்தை வேலு நாயக்கராக லொள்ளு சபா சுவாமிநாதன்; டேவிட் பில்லாவின் தந்தை சின்ன கவுண்டராக கரகாட்டக்காரன் புகழ் சண்முகசுந்தரம்; வீட்டு உரிமையாளராக மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். ஆயினும் சிரிப்பே வராத நகைச்சுவைக் காட்சிகள் தான் படம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. “எனக்கு ஒன்பதுல குரு” என லட்சுமி ராய் படத்தின் தலைப்பை வசனத்தில் சொல்லி விடுகிறார்.
நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஓ.வான P.T.செல்வக்குமார் தான் படத்தின் இயக்குநர். 100% ஜாலியான படமாம். அதற்காக பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசனை படத்தின் ஓப்பனிங் சாங்கிலும், கதை சொல்லியாகவும் உபயோகித்துள்ளார். ஆதிபகவன் படத்தின் இரண்டாம் பாகத்தை நாசூக்காக தெரியப்படுத்தித் தான் கலவரப்படுத்தினார் அமீர். ஆனால் இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் உண்டென கதை சொல்லியான ஸ்ரீநிவாசனைக் கொண்டு நேரடியாகவே இயக்குநர் மிரட்டுகிறார்.
எந்த ஒரு ஜாதகரின் ஒன்பது கட்டத்திலுமே வக்கிர சனி உக்கிரமாக உள்ளாரோ.. அவருக்கு இந்தப் படத்தினைப் பார்க்கும் பெரும்பேறு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.