Shadow

கடல் விமர்சனம்

kadal

மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் என மூவர் கூட்டணி; மேலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான இணைகளின் வாரிசுகள் அறிமுகமாகும் படம்;  அதே போல் சுமார் பன்னிரெண்டு வருடத்திற்குப் பிறகு அரவிந்த் சாமி நடிக்கிறார். ஆர்ப்பரித்திருக்க வேண்டிய கடல், அலைகள் ஓய்ந்த இராமேஸ்வரம் கடற்கரை போல் அமைதியாக உள்ளது.  அதை தான் “ஆழ்ந்த தத்துவமும், ஆன்மீகமும் கொண்ட ஸ்க்ரிப்ட்” என இப்படத்திற்கு கதை – வசனம் எழுதிய ஜெயமோகன் படத்தைப் பற்றிச் சொல்லியுள்ளார் போலும். 

தேவனை கோபித்துக் கொள்ளும் சாத்தான், தேவனை பழி வாங்க நினைப்பது தான் படத்தின் கதை.

சாத்தான் தான் இந்தப் படத்தின் நாயகன். பெர்க்மன் என்னும் சாத்தானாக அர்ஜூன். அதுவும் பைபிளை கரைத்துக் குடித்த புத்திசாலி சாத்தான். விளையாட்டு, குதூகலம், கேலி, கிண்டல், மகிழ்ச்சி என வாழ்வைக் கொண்டாடும் சாத்தான். மன்னிக்க விரும்பாத தேவன் ஒருவனால் சாத்தான் காட்டிக் கொடுக்கப்படுகிறார். தேவனை பழி வாங்கும் லட்சியத்தை நிறைவேற்றியதோடு நில்லாமல் தேவனால் கண்டெடுக்கப்பட்ட மனிதனையும் சாத்தானாக மாற்றி விடும் உன்னத லட்சியத்தோடு இயங்குகிறார் சாத்தான். அர்ஜூனை தவிர்த்து வேறு எவரையும் இந்தக் கதாபாத்திரத்திற்கு நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால், ‘நான் சாத்தான்டே!!’ என தேய்ந்த டேப்-ரிக்கார்டர் போல படம் நெடுக கூறி இம்சிக்கிறார் அர்ஜூன்.

தாமஸ் என்னும் அநாதை இளைஞனாக கெளதம் கார்த்திக். மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது அனைத்து நடிகர்களின் கனவாக இருக்கும். அத்தகைய வாய்ப்பின அறிமுக படத்திலேயே பெற்றிருக்கும் அதிர்ஷ்டசாலி தான் கெளதம். படத்தின் பிரதான பாத்திரமாக படம் நெடுகிலும் ஒரே ஆள் இவர் தான். சூழலுக்குப் பொருந்தாத பாடல்களுக்கு நன்றாக நடனமாடுகிறார். தேவனின் கையில் இருக்கும் பொழுது மனிதனாக உள்ளவர் சாத்தானின் கையிலிருக்கும் பொழுது சாத்தானாக மாறுகிறார். ஆக தேவனுக்கு தெரியாத சமத்துவம் சாத்தானுக்கு தெரிகிறது. பியாட்ரிஸ் என்னும் தேவதையாக துளசி. தாயின் ஏக்கத்தில் தாமஸ் கதறுவதை கேட்டு, தாமஸை அரவணைத்துக் கொள்கிறார். தமிழ்ப் படங்களில் வரும் பெரும்பாலான நாயகன்களுக்கு காதல் வர இந்தத் தாய் சென்ட்டிமென்ட் தான் காரணமாக உள்ளது. உதாரணம் ஆடுகளம் டாப்சீ. ஃப்ரெய்ட்டின் கூற்றுப்படி எப்படி ஆண் குழந்தையின் முதல் காதலி தாயாக இருக்கிறாரோ அதே போல் பெண் குழந்தையின் முதல் காதலனாக தந்தை இருப்பார். ஆனால் அப்படி நாயகிகளுக்கு நாயகனைப் பார்த்ததும் தன் தந்தை ஞாபகம் வருவது போல் காட்டப்படுவதில்லை. ஆணாதிக்கமாக இருக்குமோ? நாயகன் தான் பாவி என கழிவிரக்கத்தோடு சொல்லும் பொழுது, நாயகனின் கையை வாங்கி பாவங்களை சுலபமாக துடைத்து விடுகிறார். ஆனால் துளசி தன் தந்தையைப் பார்த்ததும் மிரள்கிறார். இதை தான், ‘அப்பாலே போ.. சாத்தானே!!’ என நீர்ப்பறவை சுனைனா சொன்னார் போல!!

சாம் ஃபெர்னான்டோ என்னும் தேவனாக (தேவரென மரியாதையாக விளித்தால் வம்பாயிடும்) அரவிந்த் சாமி மறு பிரேவசம் செய்துள்ளார். அர்விந்த் சாமி போல் வெள்ளையாக இருப்பவர் தேவனாக தான் இருக்கணும் அல்லது இருக்க முடியும் என்ற பொது புத்தி மீண்டும் ஒருமுறை வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அரவிந்த் சாமி அழகான பாதிரியாராக கடவுள், விசுவாசம் போன்றவற்றின் மீது அதீத நம்பிக்கைக் கொண்டவராக வருகிறார். தன்னை திட்டும் சிறுவனை நல்வழிபடுத்துகிறார். பொய்யான குற்றச்சாட்டினால் சிறைக்கு செல்ல நேரிடும் பொழுதும், அங்குள்ளவர்களை கடவுளின் பாதைக்குக் கொண்டு வரும் வாய்ப்பாக கருதுகிறார். பொறுமைக்கும் எல்லையுண்டு என்பது போல்.. சாத்தானின் சீண்டல் தாங்காமல் தன்னிலை மறக்கிறார் தேவனான அரவிந்த் சாமி.

தேவனின் ஆதிக்கம் இருக்கும் பொழுது சாத்தான் திரையில் தென்படுவதில்லை. அதே போல் சாத்தானின் ஆதிக்கம் இருக்கும் பொழுது தேவன் தென்படுவதில்லை. படத்தின் இறுதியில் தேவனும் தன்வசம் இழக்கிறார்; சாத்தானும் அன்பின் பிடியில் சிக்கி விடுகிறார். ஆனால் தேவதையால் பாவங்கள் துடைக்கப்பட்ட மனிதன்.. தேவதூதன் ஆகி தேவனிடமே சாத்தானிற்காக மன்னிப்பை இறைஞ்சுகிறான். தேவனையே நல்வழிப்படுத்தும் தேவதூதன். அவனுக்கு சிசுவின் ரத்தம் கூட ஏசுவின் ரத்தமாக தெரிகிறது. படத்தின் முடிவு சுபம் என்றாலும் சாத்தான் செய்யும் கொலைகளுக்கு ஒரு வரைமுறையே இல்லை.

கெளதமும்,  துளசியும் வரும் காட்சிகளில் ஒரே வறட்சி. நல்லவேளை துளசியை பதினைந்து வயது பெண்ணாகவே காட்டவில்லை. நம்புவதற்கு ரொம்ப சிரமமாக இருந்திருக்கும். மனம் ஏனோ நீ தானே என் பொன்வசந்தம் சமந்தாவை நினைத்துக் கொள்கிறது. துளசி சைக்கிள் தள்ளிக் கொண்டு வரும் பொழுது நீர்ப்பறவை சுனைனாவும் நினைவில் வந்து போகிறார். எத்தனை நாயகிகளுக்கு பாடல்களுக்கு ஆடுவதை தவிரவும் படத்தில் ஏதேனும் செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என தெரியவில்லை. துளசி தவறவிட்டது பொன் குடத்தை அல்லது பதினைந்து வயது பெண் உள்வாங்கி நடிக்கும் பாத்திரமல்ல பியாட்ரிஸ் என்னும் தேவதை. சாத்தான், தேவதை போன்ற விடயங்கள் உருவகங்களாக இல்லாமல்.. பாத்திரங்கள் தாங்களாகவோ அல்லது மற்றவர்களாலேயே சாத்தான், தேவதை என அழைக்கப்படுகின்றனர். ராவணன் படத்தில் நான் தான் ராமாயணத்தில் வரும் சீதை என ஐஸ்வர்யா ராய் சொல்லிக் கொள்வதில்லை. மணிரத்னம் மீதான எதிர்பார்ப்பு திரையரங்கில் நிர்கதியாய் விடபடுவதால் படம் தர வேண்டிய தாக்கம் மேலும் பலவீனம் அடைகிறது. எதிர்பார்ப்பு துக்கத்தைத் தரும் என்ற ஆன்மீக தத்துவம் தலையில் ஓங்கி அடித்து புலப்படுத்தப்படுகிறது.

Leave a Reply