Search

கணித மேதை ராமானுஜர் திரைக்காவியமாகிறார்

Ramanujan film

‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ போன்ற முற்போக்கான திரைப்படங்களை திரையரங்கிற்கு கொண்டு வந்த ஞான ராஜசேகரனின் அடுத்த படம் ‘ராமானுஜன்’.

ஈரோட்டில் பிறந்து, கும்பகோணத்தில் வளர்ந்து தனது கணித அறிவினால் உலகையே வெல்லுகின்ற ஸ்ரீனிவாச ராமானுஜரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகிற திரைப்படம் ‘ராமானுஜன்’ கடைசி கட்ட பணியிலுள்ளது.

ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கம் இருந்த வேளையில் – இந்தியர்களை அறிவில் குறைந்தவர்கள் என்று அகங்காரத்தோடு வெள்ளையர் கருதிய காலத்தில் தனது அசாத்தியமான கணித ஆற்றலினால் அவர்களைக் கவர்ந்து ஜி.எச்.ஹார்டி என்கிற கணிதப் பேராசிடியரால் உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டவர், ராமானுஜன்.

இப்படிப்பட்ட தமிழ்நாட்டின் கணித மேதையை அவரது வாழ்க்கையை பெரும்பாலான தமிழர் அறியவில்லை. எனவேதான் ராமானுஜரை நம்நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஞான ராஜசேகரன் உருவாக்கி வருகிறார். “ராமானுஜனின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தது. தனது கணித ஆற்றலை வைத்துக் கொண்டு வாழ வழியின்றி அவர் அனுபவித்த இன்னல்கள், ஒரு ஜீனியஸாக வாழவிடாமல் அவருக்கு கஷ்டங்கள் கொடுத்து அவரை சராசரி மனிதனாக்க துடித்த சுற்றமும், சமூகமும்.. இதையெல்லாம் எதிர்கொண்டு உலகம் புகழும் மேதையாக ராமானுஜன் வெற்றி கண்டது எப்படி? இதைத்தான் இந்தத் திரைப்படம் சொல்கிறது” என்கிறார் ஞான ராஜசேகரன்.

உலகதரத்தில் தயாரிக்கப்படுகிற ‘ராமானுஜன்’ தமிழ், ஆங்கிலம், ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கப்படுகிறது. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் படம்பிடிக்கப்படுகின்ற இப்படத்தில் இந்திய நடிகர்களுக்கு நிகராக ஆங்கில நடிகர்களும் தமிழ் பேசி நடிக்கின்றனர்.

Ramanujan film

கேம்பிரிட்ஜில் எடுக்கப்படுகிற முதல் தமிழ்ப்படம் இது. அபினய் ராமானுஜனாகவே வாழ்ந்து நடித்துள்ளார். அவரது தாயாராக நடிக்கும் சுகாசினி மணிரத்தினத்திற்கு இப்படம் தமிழில் மிகச்சிறந்த இரண்டாம் வரவு. மலையாள, கன்னட படங்களில் முன்னணி நடிகையாய் விளங்கும் பாமா ராமானுஜனின் இளம் மனைவியாக நடிக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்தியங்களில் நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ராதாரவி, சரத்பாபு, அப்பாஸ், டெல்லி கணேஷ், மனோ பாலா, கிட்டி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல பிரபல தமிழ் நடிகர்கள் நடிக்கின்றனர்.

வி.எச்.ஹார்டியாக பிரபல நாடக/சினிமா நடிகர் கெவின் மெக்கோவன் நடிக்கிறார். லிட்டில் வுட் என்கிற மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் மைக்கல் லீபர் என்பவரும், மதராஸ் போர்ட் டிரஸ் சேர்மனாக ரிச்சர்டு வால்ஷ் என்பவரும், மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் லிசி பார்ன், ளிடியா ஸ்வான், மைக் பாரிஷ் போன்றோர் நடிக்கின்றனர்.

பிரிட்டிஷ் இந்தியாவையும், இங்கிலாந்தையும் கணுமுன்னே கொண்டுவர ஆடை வடிவமைப்பில் சகுந்தலா ராஜசேகரனும், கலை இயக்கத்தை கிருஷ்ணமூர்த்தியும் செய்கின்றனர். ரமேஷ் விநாயகம் ராமானுஜனின் காலத்தில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்பட்ட இசை கருவிகளை மட்டுமே உபயோகித்து ப்யூஷன் முறையில் வித்தியாசமான இசையைக் கொடுத்துள்ளார். சன்னி ஜோசப்பின் கேமரா பிரமிக்க வைக்கும் வகையில் அந்தக் கால உலகத்தை பதிவு செய்துவருகின்றது.

‘கேம்பர் சினிமா’ நீருவனம் மூலம் நான்கு இளைஞர்களாகிய ஸ்ரீவத்சன் நடத்தூர், சுஷாந்த தேசாய், சரண்யன் நடத்தூர், மற்றும் சிந்து ராஜசேகரன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.