Shadow

“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்

மு.கு.: “கேரள நாட்டிளம் பெண்களுடனே” – இசை வெளியீட்டு விழா

பூ படத்தின் இசையமைப்பாளரான எஸ்.எஸ்.குமரன், “கேரள நாட்டிளம் பெண்களுடனே” என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். வைரமுத்துவின் வரிகளுக்கு அவரே இசையமைத்தும் இருக்கிறார். 

இந்தப் படத்தில் நாயகனுக்கு தந்தையாக நடித்திருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், “பேசிய அனைவரும் என் அருமை நண்பர் வைரமுத்துவை விழா நாயகன் என சொல்றாங்க. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனா உண்மையான நாயகன் எஸ்.எஸ்.குமரன் தான். குடும்பத்தோடு கொண்டாடும் விழாக்கள், இப்ப தமிழர்களிடமிருந்து மறைந்து விட்டது. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கும். குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும்படியான படமிது. தமிழர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவங்க. நான் பெங்களூரில் ஒரு நண்பரிடம், “தனியா இருக்கீங்களா கூட்டுக் குடும்பமா இருக்கீங்களா!?” எனக் கேட்டேன். “கூட்டுக் குடும்பமா தானிருக்கேன்” என்றார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. “யார் யார் இருக்கீங்க?” எனக் கேட்டேன். “நானும் என் மனைவியும்” என்றார். நான் ஆடிப் போயிட்டேன். டைவர்ஸ் ஆகாம இருந்தா கூட்டுக் குடும்பம்னு நினைச்சிட்டிருக்கிறார். அப்படி ஆகிப் போச்சு நிலைமை!!

உடைந்த வீடுகள்
உடையாத உறவுகள்

உடையாத வீடுகள்
உடைந்த உறவுகள்

என தன் கவிதை ஒன்றில் அழகாக சொல்லியிருப்பார் வைரமுத்து. 

இந்தப் படத்துல எனக்கு மலையாளம் பேசி நடிக்கிற மாதிரி பாத்திரம். என் நண்பர் கமலை சந்திக்கும் பொழுது, இதைப் பற்றி பேச்சு வந்தது. அவர் தான் எனக்கு மலையாளம் சொல்லி தந்த குரு. வேகமாகப் பேசும் ரேணுகாவுடன் நடிச்சிருக்கேன். குடும்பத்தோடு வந்து கல்யாணத்திற்கு கூப்பிட்டா, எல்லோரும் போவோம். ஒருத்தவங்க மட்டும் வந்து கூப்பிட்டா, நாம வீட்டுல இருந்து ஒருத்தவங்கள அனுப்பி வைப்போம். அந்த மாதிரி கேரள நாட்டிளம் பெண்களுடனே’ குழுவினர் குடும்பமாக உங்களை அழைக்கிறோம்.  அனைவரும் குடும்பத்துடன் படத்திற்கு வந்து சிறப்பிங்க” எனப் பேசி பாடல் வெளியீட்டு விழாவைக் கலகலப்பாக்கினார்.

விழாவின் நாயகன் என்ற ஏகோபித்த ஆதரவுடன் கம்பீரமாக எழுந்த வைரமுத்து, “இங்கு சிலர் பேசும் தமிழை விட இப்படத்தில் நடிக்கும் மூன்று நாயகிகள் பேசும் தமிழ் நன்றாகவே இருக்கிறது. எஸ்.எஸ்.குமரன் என்னை அணுகிய பொழுது, படத்தின் கதையைச் சொல்லும்படிக் கேட்டேன். இரண்டு நிமிடத்தில் சொல்லி முடித்தார். இரண்டு நிமிடத்திற்குள் யாரொருவர் கதை சொல்கிறாரோ, அவர் கண்டிப்பாக வெற்றிப் பெறுவார். “தமிழ்ப் பேசும் நாயகன், மணம் புரிந்து கொள்ள பெண் தேடி கேரளா செல்கிறான்” என்றார். போதும். நடுவில் என்ன வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படமும் கண்டிப்பாக வெற்றி பெறுமென சொன்னேன்.

‘பாடல் வரிகளை எழுதி தாருங்கள். மெட்டமைத்துக் கொள்கிறேன்’ என்றார் எஸ்.எஸ்.குமரன். இது தான் நல்ல இசையமைப்பாளருக்கு அழகு. தமிழ் இசையமைப்பாளர்களில் கே.வி.மகாதேவன்  தான் பாடல் வரிகளுக்கு மெட்டமைப்பவர். மற்றவர்கள் எல்லாம் மெட்டுக்கு பாடல் வரிகள் எழுதுபவர். பாடல் வரிகளை முதலில் எழுதுவதால் என் வேலை சுலபமாகிறது. மெட்டுக்கு எழுதும் பொழுது கொஞ்சம் தாமதமாகும். அவ்வளவு தான். எல்லாப் பாடல்களும் மெட்டின்றி அமைய வேண்டும் என்றில்லை. இரண்டும் கலந்தாற் போலிருக்கலாம்.

நான் 33 வருடங்களுக்கு முன் இரண்டு தீர்மானங்கள் செய்தேன். ஒன்று சினிமா சம்பந்தப்பட்ட தொழிலில் முதலீடு செய்யக்கூடாது. இரண்டாவது நடிக்கக்கூடாது. இரண்டையும் இது வரை கடைபிடித்து வருகிறேன். இனியும் கடைபிடிப்பேன் என நம்புகிறேன். என் வேலை பாடல் இயற்றுவது. தமிழை வாழ வைத்தால். அது நம்மை வாழ வைக்கும். நான் வா என்றால் தமிழ் வரும். ஆனால் வேலைக்காரனோ, டிரைவரோ வர மாட்டார்கள்” என்றார்.

படத்தின் இயக்குநரும் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.குமரன், “ஒரு நாயகி கிடைப்பதே இந்தக் காலத்தில் கஷ்டம். ஆனால் இந்தப் படத்தில் மூன்று நாயகிகள். ஆறு மாதம் தேடி நடிக்க வைத்திருக்கேன். என்னைப் பற்றி அவர்களுக்கு ஒன்னும் தெரில. யூ-ட்யூப் எல்லாம் காட்டி நம்ப வைத்தேன். பட்டிமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கும் ஐயாவை நடிக்க வைக்கணும்னு அப்பவே ஆசை. ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ எனத் தலைப்பைக் கேட்டதும். ‘பிட் படம்’ என நினைச்சு ஐயா பயந்துட்டார். அப்புறம் மதுரைக்கே நேரில் சென்று கதையை சொல்லி சம்மதம் வாங்கினேன். இந்தப் படம் கண்டிப்பாக மலையாளிகளுக்கும் பிடிக்கும் தமிழர்களுக்கும் பிடிக்கும். தமிழகம், கேரளம் என இரு மாநிலத்துக்கும் இடையில் ஒரு பாலமாகவே அமையும்” என நம்பிக்கையுடன் சொன்னார்.

Leave a Reply