Shadow

காஞ்சனா விமர்சனம்

Kanchana
 

காஞ்சனா – முனி படம் பெற்ற வரவேற்பை நம்பி தைரியமாக களம் இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். தர்க்கத்திற்கே இடமில்லா கற்பனை என முன்னறிவிப்போடு படம் தொடங்குகிறது. கதை, நாயகன் ராகவா லாரன்ஸ், நாயகனின் தாய் கோவை சரளா தவிர முந்தைய படமான ‘முனி’க்கும், காஞ்சனாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பகலில் எதற்கும் அஞ்சாதவனாகவும், இரவானால் பேயிற்கு மட்டும் பயப்படுவனாக ராகவா. கிரிக்கெட் விளையாட மைதானம் கிடைக்காமல் நண்பர்களுடன் காலி மனைக்கு விளையாட செல்லும் இடத்தில் இருந்து ஸ்டம்ப்பில் ஒட்டி வரும் இரத்தத் துளிகள் மூலம் பேயை வீட்டிற்குள் கொணர்ந்து விடுகிறான் ராகவா. பேய்களை விரட்ட ராகவா குடும்பத்தினர் முயல, பேய்கள் ராகவாக்குள் புகுந்து கொள்கின்றன. பேய்களின் வரலாறைத் தொடர்ந்து படம் தனது முதல் பகுதியான முனி போல் நிறைவுறுகிறது.ஆடுதல், பாடுதல், நல்லது செய்தல், அழகான நாயகியை காதலிப்பது போன்றவை தான் நாயகனின் லட்சணங்கள் யாது என்ற கேள்விக்கு பெரும்பாலான தமிழ்/தெலுங்குப் படங்களின் பதிலாக இருக்க கூடும். அத்தகைய நாயக லட்சணங்களுடன் ராகவா லாரன்ஸ். படத்தின் இரண்டாம் பாதியில் மூன்று வித பாத்திரங்களில், மூன்று வித நடிப்புகளை வெளிபடுத்துகிறார்.நாயகியாக லட்சுமி ராய். நாயக லட்சணத்திற்கு அழகு சேர்க்கும் அணிகலனாகவும், பாடலிற்கு நடனமாடவும். காரியத்தில் கண்ணாக இருந்து விட்டு பேய்கள் திரையில் தலைக் காட்ட ஆரம்பித்தவுடன் மறைந்து விடுகிறார். அந்த நேர்மையைப் படம் பார்ப்பவர்கள் கவனிக்க தவறாதீர்கள்.படத்தின் முதல் பாதியை ஆள்வது கோவை சரளா. அவருக்கு துணையாக ‘விடாது கருப்பு’ தொடர் புகழ் தேவ தர்ஷினி. மாமியாரான சரளா கோவை தமிழும், மருமகளான தேவதர்ஷினியும் அக்ரஹார தமிழும் பேசுகிறார்கள். பல இடங்களில் முகம் சுளிக்க வைக்க முயன்றாலும், படத்தினை கலகலப்பாக நகர்த்துபவர்கள் இவ்விருவருமே!!

திருநங்கை காஞ்சனாவாக சரத்குமார்.

ஜக்குபாய் படத்தினைத் தொடர்ந்து அவரது திரையுலக அனுபவத்திற்கு சவாலாய் அமைந்திருக்கும் வேடம். ஏற்ற பாத்திரத்திற்கு நன்மை செய்வது போல் திருநங்கைகளின் மேன்மைக்காக சிறு வேண்டுகோளையும் படத்தில் முன் வைக்கிறார். பற்களை மேலும் கீழும் அடித்து, தொடையைத் தட்டி, புடவையை கனுக்காலை வரை தூக்கி பறந்து பறந்து அடிக்கிறார். பறந்தடிப்பது பழக்க தோழமாக இருக்கலாம். தேவன், மயில்சாமி, மனோபாலா, ஸ்ரீமன் என படத்தில் கூட்டத்திற்கு பஞ்சமில்லை.  புதிதான முயற்சி ஏதுமில்லாவிட்டாலும் தமனின் பின்னணி இசை படத்தோடு ஒன்ற செய்கிறது. தர்காவில் பேய் ஓட்டுபவரை பூதம் அளவிற்கு பெரிதாய் காட்டுகிறார்கள். எப்படியும் பேய்கள் ஓடிவிடும் என்ற நம்பிக்கை அவரைப் பார்த்ததும் வந்து விடுகிறது. மூன்று பேய்கள் ஹாலிவுட் பாணியில் அடியாட்களை பழி வாங்கும் காட்சிகளின் நீளம் அதிகம். பேயான காஞ்சனாவிற்கும், கடவுளான நரசிம்மருக்கும் பேச்சு வார்த்தை நடக்கிறது. இறுதியில் தர்மம் வெல்கிறது. அசாத்திய நம்பிக்கையின் காரணமாக முனி – 3 தொடரும் என்று படத்தை முடிக்கிறார்கள்.

காஞ்சனா – சிந்திக்காமல் சிரித்து ரசிக்க.

Leave a Reply