Shadow

குக்கூ விமர்சனம்

Cuckoo review

எளிய மனிதர்களின் வாழ்க்கை பற்றிய படம் தமிழில் அரிதினும் அரிதாகவே வருகிறது. அப்படியொரு அரிதான படம் குக்கூ. பார்வையற்ற இருவருக்குள் மலரும் கலர்ஃபுல்லான காதல்தான் படத்தின் கரு.

‘அட்டகத்தி’ தினேஷ் தமிழாகக் கலக்கியுள்ளார். மூன்று மாதம் பார்வையற்றவர்களுடன் உடனிருந்து அவர்களது உடல்மொழியை அவதானித்து அப்படியே திரையில் பிரதிபலித்துள்ளார். இத்தகைய படத்தில் நடிப்பதைவிட வேறென்ன பேறு ஒரு நடிகருக்குக் கிடைத்துவிட முடியும்?

சுதந்திரக்கொடியாக மாளவிகா. நமக்கு வேண்டப்பட்ட ஒரு நபர் போல், அவரை மிக நெருக்கமாக உணரச் செய்கிறது அவரது பொலிவான முகம். ஒரு படத்தின் கதையில் நாயகி முக்கியத்துவம் பெறுவதே அதிசயம். அதிலும் நாயகனுக்கு நிகராக நாயகிக்கும் நடிக்க காட்சிகள் அமையப்பெற்றால்? 99% நாயகிகளுக்குக் கிடைக்காத அரிய வாய்ப்பினை மிகக் கச்சிதமாக மாளவிகா பயன்படுத்தி தன்னை நிரூபித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

“அண்ணா.. ஆம்லெட்ங்ணா!” என்ற மிகச் சாதாரணமான வசனத்திற்கு தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை. பார்வையற்ற இருவரின் காதல் பற்றிய படமென்றவுடனே சோகமாகவும் ட்ராஜெடியான க்ளைமேக்ஸாக இருக்கும் என்ற முன்முடிவு பலரிடம் உள்ளது. அவர்களது பயத்தை தனது கதாபாத்திரங்களின் மூலம் தகர்க்கிறார் இயக்குநர். இதற்கே, தொடர்ந்து காதலிக்க யோசனை சொல்லித்தரும் நபர் படத்திலில்லை. ஆனால் கலகலப்புக்கு உத்திரவாதம் அளிக்கின்றனர் நாயகனின் நண்பனாக வரும் இளங்கோ, முருகதாஸ், ஈஸ்வர் போன்றவர்கள். குறிப்பாக குபேரன் சந்திரபாபுவாக வரும் ஈஸ்வரும், படபடவென பொரியும் குபேரனின் மூத்த மனைவி ‘கோவை’ பானுவும், குபேரனின் நாடகக் குழுவினரும் அலப்பறை செய்கிறார்கள்.

ஒரு காட்சியில், விஜய் மேடையில் ஆடுகிறார்; அஜீத் திரும்பி நின்று கொண்டிருக்கிறார். அஜீத்தின் முறை வரும்பொழுது, அவர் திரும்பி நின்று கொண்டு ஆடாமல் சும்மா நிற்கிறார். நாயகி அவரைச் சுற்றிச் சுற்றி ஆடுகிறார். இது போன்ற நுண்ணிய விவரணை படம் முழுவதும் வருகிறது. நாயகனுக்கு திடீரென உதவுகிறார் ஒரு போலீஸ்காரர். மிஷ்கின் படத்து போலீஸ்காரர் போல நல்லவராக இருப்பாரென நினைத்தால், எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் ஐம்பதாயிரத்தை லவட்டிக் கொண்டு அவர் போகிறார். சட்டத்தின் நீண்ட அதிகார கைகள், தமிழ் போன்ற சாமான்யர்களை எப்படி ஏய்க்கும் என்பது போகிறப்போக்கில் காட்டப்பட்டுள்ளது.

இயக்குநர் தொழில்நுட்பத்தை அவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்தியுள்ளார். ரீடிங் கிளாஸில் நாயகன், நாயகி பக்கம் திரும்பும்பொழுது சாரல் சத்தம் கேட்கும்; அவரது ரீடர் நாயகன் தலையை தன் பக்கம் திருப்பும் பொழுது ரம்பத்தால் மரத்தை அறுக்கும் ஓசை கேட்கும். அதேபோல், நாயகன் தன் கனவைப் பற்றிச் சொல்லும் பொழுது திரை கருப்பாகி விடுகிறது. அந்தக் கனவு வெறும் பேச்சுக் குரல்களாக உள்ளது. அந்தக் காட்சி கலகலப்பாகப் படமாக்கப்பட்டிருந்தாலும், பார்வையற்றவர்களின் கனவுகள் பற்றி ஒரு புரிதலையும் வலியையும் ஒருங்கே உருவாக்கிவிடுகிறார்.

சந்தோஷ் நாராயணின் இசையில் அனைத்துப் பாடல்களுமே, P.K.வர்மாவின் ஒளிப்பதிவோடு இணைந்து மனதை வருடுகிறது. பாடல்களை சரியான இடத்தில் வைத்துள்ளனர் என்பது கூடுதல் விசேஷம். “ஆகாசத்த நா(ன்) பார்க்கிறேன்.. ஆறு கடல் நா(ன்) பார்க்கிறேன்” என்ற யுகபாரதியின் பாடல் வரிகள் எவ்வளவு அழகாய் பார்வையற்ற பெண்ணின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது! படம் முடிந்தும் கல்யாணி நாயரின் குரல் உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். ‘ஒத்த நொடியிலதான் சித்தம் கலங்கிருச்சே’ என்று நாயகனின் மனதையும் பாடல் வரிகளில் கொண்டுவந்து அசத்துகிறார் யுகபாரதி.  இசைஞானியின் பாடல்களும் படத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

வழக்கமான தமிழ் சினிமா போல் காதலுக்கு இப்படமும் அதீத முக்கியத்துவம் தருகிறது. ஊர் கூடி தேரிழுப்பதுபோல, நாயகனின் நண்பர்கள் சுமார் 2 லட்சம் கஷ்டப்பட்டுப் புரட்டி நாயகனிடம் தருகின்றனர். ‘குஜராத் போல் தமிழ்நாடும் மின்மிகை மாநிலமாகணும்’ எனச் சொல்லும் நாயகனின் நண்பன் இளங்கோ கூட, பணம் பறிப்போனது பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. காதல் கிறுக்கு பிடித்த நாயகனை விட்டு விடுவோம். நாயகனைச் சுற்றியிருக்கும் ஏனைய எளிய மனிதர்களுக்கும் சாமான்யர்களுக்கும் மூன்று லட்சம் என்பது ஒரு பொருட்டில்லையா!? படத்தின் முடிவை யூகிக்க முடிவதால், க்ளைமேக்ஸ் கொஞ்சம் இழுவையாக இருப்பது போலுள்ளது. க்ளைமேக்ஸ் மூன்றாம் பிறை படத்தை வேறு நினைவூட்டுகிறது.  

படம் ஏற்படுத்தும் பாதிப்பு முழுமையாக இல்லை.  ஒரு கதைசொல்லியின் பார்வையில் தொடங்கும் படம், அந்தக் கதையின் மாந்தர்களால் முடிக்கப்படுகிறது. அதாவது தொடங்கும் புள்ளியிலிருந்து விலகி வழக்கமான தமிழ் சினிமா காதல் கதைக்குள் நுழைந்து விடுகிறது. ‘விதி சதி செய்தது’ என்ற ரீதியிலேதான் காதலர்கள் பிரிகின்றனர். அவர்களது வாழ்க்கை முறை சார்ந்த பிரச்சனைகளால் அவர்கள் பிரியவில்லை. ஒருவேளை பிரதான கதாபாத்திரங்களுக்கு பார்வை இருந்திருந்தாலும், படத்தின் கடைசி 15 நிமிடங்களில் பெரிய மாறுதல் இருந்திருக்காது.  அதிலும் குறிப்பாக இரயில்வே ஸ்டேஷனில் இணையும் காதலர்களின் பாரம்பரியம் தமிழ்ப்படங்களுக்குப் புதிதன்று.

இயக்குநர் இராஜூமுருகன் விகடன் நிருபராகவே படத்தில் வருகிறார். 2 மாதத்தில் ஒருவருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த ஒருவரின் மனமும் மாறலாம். ஆனால் சுதந்திரக்கொடியின் புகைப்படத்தைப் பிரசுரித்து, அவருக்கு கண் தெரியாது, அவர் இன்னாரைக் காதலித்தார், அந்த இன்னார் சுதந்திரக்கொடிக்காகக் காத்திருக்காரென சுதந்திரக்கொடியைப் பார்ப்பவர்கள் சொல்லவும் என ஒரு கட்டுரை எழுதுகிறார் இராஜூமுருகன். என்னக் கொடுமை இது!? சுதந்திரக்கொடியின் புகைப்படத்தையும், அவரது அந்தரங்கத்தையும் பற்றி எழுத ஆனந்த விகடன் நிருபருக்கு உரிமை அளித்தது யார்? ஏன் சுதந்திரக்கொடியே வினோத்தைக் காதலித்து, அது நிறைவேறாததால்தான் தன் மனதை நாயகன் மீது திருப்புகிறாள். அப்படி அவள் மீண்டும் வேறு எவரையும் இந்த 2 மாதங்களிலோ அல்லது இனி என்றுமே காதலித்து விடக்கூடாது என்ற கட்டாயத்தை சுதந்திரக்கொடிக்கு (ஒரு பெண்ணுக்கு) ஏற்படுத்துவது எதில் சேர்த்தி? 

படத்திற்கான கருவை எங்கு எடுத்தேன்  என்று அவர் பேட்டியளிப்பது போல் படம் தொடங்குகிறது. இதையெல்லாம் மீடியா பார்ட்னரான விஜய் டி.வி.யில் பேசுவதற்கு அவர் சேமித்து வைத்திருந்திருக்கலாம். படத்தின் நீளம் குறைந்து இன்னும் க்ரிஸ்ப்பாக இருந்திருக்கும். எனினும் தனது முதல் படத்திலேயே பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது வசனங்களும் படத்தின் ஒரு பலம். தேசிய அளவில், தமிழ்த் திரைப்படத்திற்கான கெளரவத்தையும் மரியாதையையும் இப்படம் பெற்றுத் தருவதோடு சர்வதேச விழாக்களிலும் பங்கு பெற்று நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அதுவும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம் நிறுவனங்களின் தயாரிப்பு வேறு. சொல்லவும் வேண்டுமா?

2014இன் சிறந்த 10 படங்களில் ஒன்றாக ‘குக்கூ’ நிச்சயமிருக்கும்.