Shadow

குற்றப்பரம்பரை – தலைப்பும் கதையும் வேறு

Bala on kutraparambarai

இயக்குநர் பாரதிராஜாவின் கனவுப்படமான ‘குற்றப்பரம்பரை’க்கும், பாலாவின் அடுத்த படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், தான் மீண்டும் மீண்டும் சீண்டப்படுவதாக ஆவேசமாக உள்ளார் இயக்குநர் பாலா.

வேல ராமமூர்த்தியின் நாவலைப் படமாக்குகிறார் பாலா என்ற செய்தி வெளியானது. பாலாவைக் கவர்ந்த அந்த நாவலின் பெயர் ‘கூட்டாஞ்சோறு’. விகடனில் தொடராக வெளிவந்தது. அந்நாவலில் இருந்து ஒரு களத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, தானும் வேல ராமமூர்த்தியும் திரைக்கதை அமைத்துள்ளதாகக் கூறுகிறார் பாலா. சென்ற ஆண்டு, கூட்டாஞ்சோறு நாவலை “குற்றப்பரம்பரை” எனப் பெயர் மாற்றி ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ எனும் பதிப்பகம் வெளியிட்டது. இந்தப் பெயர் குழப்பமே அனைத்துக்கும் ஆதாரச் சுழி. இதனை பாலா, பாரதிராஜாவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

அந்நிலையில், “பாலா, என் எச்சிலைத் திங்க மாட்டான் என நம்புகிறேன்” என பாரதிராஜா பேட்டியளித்துள்ளார். மூத்த இயக்குநரென மரியாதை அளித்ததற்கு, ‘இதென்ன பேச்சு?’ எனக் கடுப்பாகிவிட்டார் பாலா.

இந்தக் குழப்பம் அனைத்திற்குமே, பேராசிரியர் இரத்தினகுமார் தான் காரணமென பாலா அதீத கோபத்துடன் குற்றம்சாட்டுகிறார். பாரதிராஜா முதுகின் பின்னின்று தூண்டி விடுவதாகவும், அவரது மூளையே இப்பிரச்சனையின் பிறப்பிடம் என்கிறார் பாலா.

“என்னுடையது கதை; அவர்களுடையது வரலாறு. வரலாறை யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம். அந்த அடிப்படை அறிவு கூட இல்லாம அவன் (இரத்தினகுமார்) என்னைக் கதைத்திருடனுங்கிறான். அவன்ட்ட படிக்கிற மாணவர்கள நெனைச்சா பாவமா இருக்கு” என்றவர், “இதுக்கு மேலயும் நான் பொறுமையாக இருந்தேன் என்றால் நானொரு மழுமட்டை ஆயிடுவேன். தண்ணிக்குள்ளாற பல வருஷமா ஒரு தேங்கா மட்டை கிடந்தா அது நல்லா ஊறி சலசலன்னு ஆயிடும். அப்படியொரு மழுமட்ட ஆகிடக்கூடாதுன்னுதான் இப்போ பேசுறேன்” என்றார்.

தேவரினக் கதையில் தெலுங்கரான விஷாலும், மலையாளியான ஆர்யாவும் நடிப்பது குறித்து பாரதிராஜா குத்திக் காட்டியுள்ளதைப் பற்றிக் கேட்டதற்கு, “சினிமா ஒரு உலக மொழி. அதை மொழி, இனம், தேசமெனச் சுருக்கப் பார்ப்பது பைத்தியக்காரத்தனம். நீ (பாரதிராஜா) சேண்ட் ஸ்மெலோடு குற்றப்பரம்பரை எடு.. என்ன வேணா எடு. யார் வேணாங்கிறா? நடுவுல என்னை ஏன் குத்துற? இனிமே என் பெயரை எங்கயும் இழுக்கக் கூடாதுன்னு எச்சரிக்கிறேன்” என்று காட்டமாக முடித்தார் பாலா.