எட்டப்பன், காந்தி, ஹிட்லர் என சிலரின் பெயர்கள் கால ஓட்டத்தில் அவர்களின் குணங்களாகவே அடையாளம் பெற்று விடுகின்றன. அப்படி ஒரு பெயர் தான் சகுனி. தனக்கு சாதகமாக பகடைகளை உருட்டி அரசியல் லாபம் பெறுபவர்களை குறிக்கும் சொல்லாக சகுனியைப் பாவிக்கலாம்.
இரயில்வே மேம்பால திட்டத்தில் அடிபடும் தனது பாரம்பரிய வீட்டை மீட்பதற்காக சென்னை வருகிறான் கமலகண்ணன். தன் வீட்டை மீட்டானா இல்லை என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
கமலகண்ணனாக கார்த்திக். வாயை சற்று கோணலாய் திறந்தபடி படம் முழுவதும் வருகிறார். எதிர்பார்த்த இடத்தில் உதவி கிடைக்காததை தொடர்ந்து சகுனித்தனம்(!?) செய்ய தொடங்குகிறார். தொடர்ந்து ஐந்து படங்கள் ஓடி விட்ட நம்பிக்கை காரணமோ என்னமோ உப்பு சப்பில்லாத கதையில் அலட்டலில்லாத நடிப்புடன் களம் இறங்கிவிட்டார். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சொல்லி வருவது போல, சகுனி என்ற மகாபாரத பாத்திரம் குறித்து ஒன்றுமே தெரியாத அப்பாவியாக தான் இருப்பார் போல. அதனால் தான் படத்தின் தலைப்பை எந்த்வித பதற்றமும் இல்லாமல் சகுனி என வைக்க அவரால் ஒத்துக் கொள்ள முடிந்துள்ளது. குறைந்தபட்சம் அவரது அப்பாவிடமாவது சகுனி என்ற பாத்திரத்தின் வில்லத்தனம் பற்றிக் கேட்டு தெரிந்திருக்கலாம்.

ராதிகா சரத்குமாரும், நாசரும் மட்டும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர். ராதிகா வட்டிக்குப் பணம் கொடுப்பவராக அறிமுகப்படுத்தப்பட்டு.. பின் படிப்படியாக கவுன்சிலர், மேயர் என கமலகண்ணனின் சகுனித்தனத்தால்(!?) வளர்கிறார். பீடி சாமியாராக மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் நாசரை பணம் கொழிக்கும் கார்ப்ரெட் சாமியாராக வளர்த்து விடுகிறார். வில்லத்தனம் சகுனியான நாயகனிடம் தான் இல்லை என்று பார்த்தால் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜிடமும் இல்லை (இயக்குனரிடம் மட்டுமே இருந்துள்ளது). நாயகியின் அம்மாவாக நடித்த ரோஜாவின் கண்களில் தெரிந்த வெறுப்புணர்ச்சி கூட பிரகாஷ்ராஜின் நடிப்பில் வெளிப்படவில்லை. நாயகிக்கு போட்டியாக கடைசி நேரத்தில் பல்டி அடிக்கும் இன்னொரு நபர் பிரகாஷ்ராஜின் வைப்பாக வரும் கிரண்.
கார்த்திக்கி்ன் கோணலான புன்னகையையும், சந்தானத்தையும் காட்டியே படத்தை முடித்து விட்டார் இயக்குனர் ஷங்கர் தயாள். திரைக்கதையில் கொஞ்சமேனும் திருப்பம், சுவாரசியம், சஸ்பென்ஸ் என எதையேனும் வைத்திருக்கலாம். நேர்க்கோட்டில் பயணித்து முடிகிறது படம்.