Shadow

சிங்கம் II விமர்சனம்

singam 2

சிங்கம்வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மூன்று வருடங்களுக்குப் பின் வந்துள்ளது.

தூத்துக்குடியில் நடக்கும் போதைப் பொருள் வியாபாரத்தை எப்படி துரைசிங்கம் வேரோடு சாய்க்கிறார் என்பது தான் படத்தின் கதை.

துரைசிங்கமாக சூர்யா. கையிலும், கண்ணிலும் நெருப்பு எரிகிறது. சராமாரியாக அனைவருக்கும் அட்வைஸ்களை வாரி வழங்குகிறார். ஆனால், “ஆஃப்ரிக்க குரங்கு” என இனவெறியில் பிரதான வில்லனைத் திட்டுறார் ஊருக்கு உபதேசம் செய்யும் சிங்கம். சமீபத்தில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில், மராத்தான் போட்டியில் ஓடும் நைஜிரீயர் ஒருவர் தாகத்தில் தவிக்கும் சிவகார்த்திகேயனுக்கு தண்ணீர் தரும் காட்சி ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது. நீதியையும், தர்மத்தையும் காப்பாற்ற துரைசிங்கம் சுமார் 25 பேரை சுட்டுக் கொல்கிறார். அதில் 14 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் தென் ஆஃப்ரிக்காவினர். 

‘காத்திருத்தல் தான் காதல்’ எனச் சொல்வதற்கு மட்டும் காவ்யாவாக வரும் அனுஷ்கா. முதல் பாகத்திலாவது, சோர்ந்து போகும் நாயகனுக்கு சோடா தெளிக்குமளவு அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ஆனால் பள்ளி மாணவியாக வரும் ஹன்சிகா மோத்வானிக்கு, நாயகனை சுற்றிச் சுற்றி வரும் வலுவான(!?) பாத்திரம். 

சந்தானம், விவேக் என நகைச்சுவைக்கு இருவர். இருவரும் ஒரு காட்சியில் கூட ஒன்றாகத் தோன்றவில்லை படத்தில். ‘காக்கிசட்டை போட்ட காண்டாமிருகம்’, ‘கருத்த முண்டம்’ என உடனிருப்பவரை வாயிற்கு வந்தபடி அழைக்கிறார் சந்தானம். அது தான் நகைச்சுவை எனில் சந்தானம் பிண்ணி பெடலெடுத்துள்ளார். விஸ்வரூபம் கமலை இமிடேட் செய்யும் காட்சியை, சந்தானம் லொள்ளு சபாவில் இருந்து செய்திருந்தால் பட்டையைக் கிளப்பியிருப்பார். ஆனால் படத்தில் கடுப்பை தான் கிளப்புகிறார். முதல் பாகத்தினை விடவும், விவேக் இரண்டாம் பாகத்தில் படத்தோடு நன்றாகப் பொருந்தியுளார். ஆனால் நகைச்சுவையில் சோபிக்கவில்லை.

பிரதான வில்லன்களுக்கு அடியாளாக வந்தாலும் அனைவரையும் விட படத்தில் அதிகமாகக் கவருகிறார் சகாயமாக வரும் ‘நான் கடவுள்’ இராஜேந்திரன். பார்த்துப் பழகிய வில்லன்களாக முகேஷ் ரிஷி, ரஹ்மானும். அதீத பில்டப்களுடன் அறிமுகமாகும் ஆஃப்ரிக்க வில்லன் ரொம்பவுமே ஏமாற்றுகிறார். “நீ நம்பர் கொடு.. நான் ஃபோன் செய்து கேவலமாகத் திட்டுகிறேன்” என சின்னப்புள்ளத்தனமான வில்லனாக உள்ளார். மூன்று வில்லன்கள் இருந்தும்  முதல் பாகத்தைச் சுமந்த பிரகாஷ் ராஜிற்கு இணையாக எவரும் இல்லை. திரைக்கதையை விட சூர்யாவையே அதிகம் நம்பியுள்ளார் ஹரி.  

முதல் பாகத்தின் விறுவிறுப்பு, இப்படத்தின் முதல் பாதியோடு நின்று விடுகிறது. படத்தின் நீளமும் அதிகம். சத்தமும் அதிகம். பாடல்களும் முதல் பாகத்தை போல் கவரவில்லை. பின்னணி இசையும் கோர்வையற்று சோதிக்கிறது. முக்கியமாக சுமித்ரா திரையில் தோன்றிவிட்டாலே ஸ்ருதி இழந்து விடுகிறது. எனினும் இயக்குநர் ஹரி துரைசிங்கத்தை மட்டும் வைத்து படத்தைக் கரையேற்றி விடுகிறார்.  

Leave a Reply