Shadow

சேது பூமி விமர்சனம்

Sethu Boomi vimarsanam

மறவர் குலத்தைச் சேர்ந்த குமரனைக் கொல்ல முயல்கின்றனர். அவனது காதலி புது மலரின் தாய் மாமனைக் கொன்று விடுகின்றனர். அதனாலெழும் சிக்கல்களைச் சமாளித்து நாயகன் குற்றவாளியை எப்படிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் தலைப்பைக் கொண்டே படம் நடக்கும் களம் ராமநாதபுரம் என யூகிக்கலாம். வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் முத்துராமலிங்கத் தேவரை வழிபட உதவியதே அன்றி, களம் கதைக்கு உதவவில்லை. சம்பிரதாயமான முறையில் கதாபாத்திர அறிமுகங்கள் முடிந்தும், படத்தின் முதற்பாதி இலக்கற்றே பயணிக்கிறது. நாயகன், நாயகிக்கிடையேயான காதல் காட்சிகளில் இன்னும் சுவாரசியத்தைக் கூட்டியிருக்கலாம்.

Kenthiran Muniasamiசாமி எனும் கதாபாத்திரம் வீழ்ந்ததும் படம் சூடு பிடித்து ஓடத் துவங்குகிறது. நாயகனுக்கு இணையான சாமி எனும் கதாபாத்திரத்தில் படத்தின் இயக்குநர் கேந்திரன் முனியசாமியே நடித்துள்ளார். ‘நீ துரியோதனன் பக்கமிருக்கும் கர்ணன் மாதிரிய்யா’ என வசனங்களிலேயே அவரது குணவார்ப்பு படத்தில் விவரிக்கப்படுகிறது.

புது மலராக சமஸ்க்ருதி நடித்துள்ளார். மருளும் பொழுதும், சில கோணங்களிலும் அனன்யாவை ஞாபகப்படுத்துகிறார். காதலா அல்லது பாசத்தால் உருவான பிடிவாதமா என்ற தவிப்பை சமஸ்க்ருதி தன் கண்களில் கொண்டு வந்து பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார். தந்தையின் மீது புது மலர் வைத்திருக்கும் அளவிட முடியாப் பாசத்தை அழகாகப் பிரதிபலிக்கார் சமஸ்க்ருதி. அவரது தந்தையாக நடித்தவர் ஒத்துழைத்திருந்தால், அக்காட்சிகள் மேலும் மெருகேறி இருக்கும்.

குமரனாக தமன் குமார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை படம் நெடுகே தமன்.. தமன் மட்டுமே! சாமியைப் போல் குமரனுக்கும் பிரத்தியேக குணவார்ப்பினை இயக்குநர் அளிக்காதது பெருங்குறை. எனினும் நாயகியுடனான காதல் காட்சிகள், கிச்சுகிச்சு மூட்டி ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் சிங்கம் புலியைச் சமாளிப்பதென படம் நெடுகே தன்னிருப்பை அழுத்தமாகப் பதிக்கிறார். படத்தின் க்ளைமேக்ஸில் அவர் பேசும் வசனம் மிக முக்கியமானது.

தொட்டால் தொடரும் படத்தில் பார்த்ததை விட எடை கூடி, அதிரடி சண்டைக் காட்சிகளுக்குத் தயாரென்பது போல் கிண்ணென்று இருக்கிறார். அதே போல் படத்தில் வரும் இரண்டு சண்டைக் காட்சிகளிலும் ஈர்க்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் நாக்-அவுட் நந்தாவின் சண்டைக் காட்சிகள் ஆர்ப்பாட்டமின்றி ‘நச்’சென்றுள்ளது.

சேது பூமியை திரையில் காட்டியதுமே அங்கே நிலவும் மத நல்லிணக்கத்தைச் சித்தரிக்கிறார் இயக்குநர். இந்துவாய் வரும் K.S.G. வெங்கடேஷ்க்கும், முஸ்லிமாய் வரும் ஜூனியர் பாலையாவுக்கும் இடையேயான நட்பு ஆழமானதாய் உள்ளது. இன்ஸ்பெக்டராக வரும் ராஜலிங்கம், அந்தக் கதாபாத்திரத்திற்கு அருமையான தேர்வு. சேரன் ராஜ்க்கென்றே தனித்துவமான உடல்மொழி உள்ளது. ஆனால் இப்படத்தில் ஏனோ மலையாள நடிகர் லாலின் (சண்டக்கோழி வில்லன்) உடல்மொழியைக் கையாண்டுள்ளார்.

மண்ணின் மனம் கமழ, அழுத்தமாக தன் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் உருவாக்கத் தவறியுள்ளார் இயக்குநர். எனினும் படத்தின் இரண்டாம் பாதி அக்குறையைப் போக்கி விடுவது ஆறுதல்.

சேது பூமி – பாச பூமி.