“ஏன்டா.. கல்யாணமே வேணாம்னு சொல்ற?”
“உங்களுக்கு சொன்னா புரியாது” என கிட்டர் எடுத்துப் பாடத் தொடங்கி விடுகிறார் ஷிவா. படத்தின் தலைப்பை எப்படி நியாயப்படுத்தியிருக்கார் பாருங்க இயக்குநர்?
வோல்க்ஸ்வேகன் கார் வாங்க வேண்டும் என்பது தான் ஷிவாவின் 20 வருடக் கனவு. அந்தக் கனவு நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் படம் சுபமாய் முடிகிறது.
டப்பிங் ஆர்டிஸ்ட் ஷிவாவாக ஷிவா. தமிழ்நாட்டின் மானத்தைக் காக்க அறிமுகமாகி, விக்ரமின் ‘லாலா’விலிருந்து, ரஜினியின் ‘அஜக்குன்னா அஜக் தான்’, மொழிபெயர்க்கப்படும் ஜெட்லி பட வசனம், சாம் அன்டர்சனின் நடனம் எனப் பாரபட்சமில்லாமல் அனைவரையும் கலாய்க்கிறார். கோபம், வருத்தம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என அனைத்துப் உணர்ச்சிகளுக்கும் சிரித்தவாறே முகத்தை வைத்துள்ளார். அவரது அனைத்துப் படங்களைப் போலவே, எந்தச் சூழ்நிலையிலும் அசால்ட்டாக வசனம் பேசி ரசிக்க வைக்கிறார்.
அஞ்சலியாக வசுந்தரா காஷ்யப். பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, போராளி போன்ற படங்களில் நடித்துள்ளார். நாயகனைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் நடிக்கிறார். எனினும் நாயகனின் சின்ன அணைப்பில் சட்டென்று காதல் வந்து, வழக்கமான நாயகி ஆகிவிடுகிறார்.
நாயகனின் நண்பர்கள் அனைவருமே பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகின்றனர். மனோபாலா, மீரா கிருஷ்ணன், வட்சலா ராஜகோபால் முதலிய துணைப் பாத்திரங்களும் படத்தின் போக்கிற்கு உதவுகின்றனர். யதீஷ் மகாதேவின் இசையில் பாடல்களும், பின்னணி ஒலிப்பதிவும் படத்திற்குத் துணை புரிகின்றன.
எழுதி இயக்கிய கிருஷ்ணன் ஜெயராஜ் அசத்தியுள்ளார். ஷிவாவிற்கு இணையாக படம் முழுவதும் இவரும் பலரை கலாய்க்கின்றார். “குஷியானந்தா குரு பீடம் – கதவை மூடுங்கள் குஷி வரட்டும்” என்றொரு பதாகை படத்தில் வருகிறது. தமிழ் சினிமாவில், ஃப்ளாஷ்-பேக் காட்சி ஓப்பன் ஆகும் கிளிஷே காட்சிகளை செம்மையாகக் கலாய்த்துள்ளனர் படத்தில். கதாபாத்திரங்கள் அனைவரும் கீழே குனிந்து ஃப்ளாஷ்-பேக் காட்சிகளைப் பார்க்கின்றனர். உடனே ஃப்ளாஷ்-பேக் காட்சிகள், திரையில் தோன்றுகின்றன. 24×7 ஃபேஸ்புக்கில் தொலைபவர்களை கிண்டல் செய்வது போல ஷிவாவின் பாட்டி கதாபாத்திரத்தைப் படைத்துள்ளனர். அதே போல் அபத்தமான டி.வி. ஷோக்களையும் மிக லேசாக உரண்டைக்கு இழுத்துள்ளனர். ஆனால் டி.வி. ஷோ காட்சிகளை இன்னும் கூட சுவாரசியப்படுத்தியிருக்கலாம். சிங்கமுத்து தண்டனையின் தீவிரத்தைக் குறைக்க சொல்லும் தீர்ப்பு அட்டகாசம். அந்தத் தீர்ப்பிற்கு பிறகு, ஷிவா வெள்ளைக்காரர் ஒருவரை கேள்வி கேட்பது செம நக்கல். ஷிவா படமென்றால் என்ன எதிர்பார்ப்போமோ அதை இயக்குநர் அளித்துள்ளார். எந்த மன உளைச்சலையும் ஏற்படுத்தாமல், ஜாலியாக நேரத்தைக் கழிக்க உதவும் நல்லதொரு “கலாய்” (தில்லுமுல்லு) படம்.