Shadow

ஜில் ஜங் ஜக் விமர்சனம்

Jil jung juk review

‘இது மெஸ்சேஜ் சொல்ற படமில்லைங்க. இரண்டு மணி நேரம் ஜாலியா தியேட்டர்ல போய் சிரிச்சுட்டு வர படம்’ என்கிறார் படத் தயாரிப்பாளராகியுள்ள சித்தார்த். அவரது நிறுவனத்தின் பெயர் ‘ஏடாகி எண்டர்டைன்மெண்ட்’.

ஒரு சரக்கினை சீனர்களிடம் ஒப்படைக்கும்படி, ஜில் – ஜங் – ஜக் ஆகிய மூவருக்கும் வேலையொன்று தரப்படுகிறது. அம்மூவரும் அந்த வேலையைச் சொதப்பாமல் செய்தார்களா என்பதுதான் படத்தின் கதை.

ஜக் – ஜாகுவார் ஜகனாக சனந்த். டீசல் என்ஜின் போல் மெதுவாகக் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி, படத்தின் முடிவில் தன் நடிப்பால் ஜில்லையும் ஜங்கையும் ஓரங்கட்டி விடுகிறார் சனந்த். ‘டிமான்ட்டி காலனி’ படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார். ஒரு பொருளைக் காட்டி, இதென்ன நிறமெனக் கேட்டால், அவர் கவிதையாக பதில் சொல்லும் விதம் கலக்கல். ஜங் – ஜங்குலிங்கமாக அவினாஷ் ரகுதேவன். படத்தில் இவரது வேலை “வாட்ச்” சு. சரக்கைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய உதவிடும் நேரக் கண்காணிப்பாளர். படத்தின் இரண்டாம் பாதியில், இவர் நரசிம்மனுக்குச் சொல்லித் தரும் “உகாண்டீஸ்” மொழி அதகளம். அந்தக் காட்சியில், திரையரங்கம் அல்லோல கல்லோலப்படுகிறது. நரசிம்மனாக நடித்திருக்கும் நாகாவும் அசத்தியுள்ளார்.

பை – பைந்தமிழ் எனும் பாத்திரத்தில் பிபின் என்பவர் நடித்துள்ளார். அவர் பேசத் தொடங்கியதும் சிரிக்கும் மக்கள், பின் அவரை திரையில் கண்டதுமே சிரிக்கத் தொடங்கிவிடுகின்றனர். மொட்டை தலையுடன் குண்டாக இருக்கும் அவர் உருவம் மட்டும் அதற்குக் காரணமில்லை, ‘ஹர ஹர மஹா தேவகி’ என சமீபத்தில் பிரபலமான குரல் தொனியில் அவர் பேசியதாலேயேயாகும்.

ஜில் – நாஞ்சில் சிவாஜியாக சித்தார்த். இந்தக் கதையில், மூன்று நாயகனில் ஒருவராகத் தன்னை இணைத்துக் கொண்டதோடின்றி, படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார். அவரையும், ரோலெக்ஸ் ராவுத்தராக நடித்திருக்கும் ராதாரவியையும் தவிர்த்து அனைவருமே புதுமுகங்கள். படத்தில் இவரது வேலை “பேச்சு”. சரக்குடன் பயணிக்கையில் ஏதேனும் பிரச்சனைகள் எழுந்தால் பேசியே சமாளிக்க வேண்டும். பேசிச் சமாளிக்கும் கதாபாத்திரத்திற்கும், பின் பாதிப் படத்தில் “திட்டப்புள்ளி”யாகப் பரிணமிப்பதற்கும் தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார்.

அழுத்தமற்ற கதையைக் கொண்ட படத்தின் பலம் அதன் தொழில்நுட்பமுமே!

படத்தின் கலர் டோனாக ‘ப்ரெளன்’ கலரைத் தேர்ந்தெடுத்த ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் எண்ணத்தைச் சாத்தியப்படுத்த உழைத்துள்ளார் டி.ஐ.கலரிஸ்ட் (DI & Colourist) சுரேஷ் ரவி. படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக ‘பிங்க் நிற’ காரொன்று வருகிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்குப் புதிய பரிமாணத்தைத் தருகிறது.

சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகளில் ஒன்றை, ‘ ஊழ்வினை உருண்டு வந்து உதைக்கும்’ என மாற்றி, படத்தில் வருகின்ற ஓர் அத்தியாயத்திற்குப் பெயராகச் சூட்டி அதிசய வைக்கின்றனர். இப்படி சின்னச் சின்ன விஷயங்கள் நிறைய கவர்ந்தாலும், முழுப் படமாகக் கவரத் தவறி விடுகிறது. பாகுபலியை கட்டப்பா ஏன் முதுகில் குத்தினார் (கொல்லவில்லை) என்பது கூட இந்த வருடம் தெரிந்து விடப் போகிறது. ஆனால், 26 வருடங்களாகக் குடைந்து கொண்டிருந்த சொப்பன சுந்தரி பற்றிய மர்மத்தைப் போக்கியுள்ளார் இயக்குநர் தீரஜ் வைத்தி.