Shadow

தடையறத் தாக்க விமர்சனம்

thadaiyara thaakka

படம் தொடங்கிய முதல் ஃப்ரேம்மில் இருந்து பார்வையாளர்களைக் கட்டிப் போட முடியுமா?

அதை சாத்தியமாக்கி இருக்கார் மகிழ் திருமேனி. கதை சொல்லும் பாணியில் அவரது முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தில் இருந்து ரொம்பவே வித்தியாசப்படுத்தி உள்ளார். அப்பொழுது வந்திருந்த விண்ணத் தாண்டி வருவாயா போலவே அவரது முதல் படம் இருந்ததோடு, வாய்ஸ்-ஓவர் என்னும் கெளதம் வாசு தேவ் மேனனின் ஸ்டைல் படம் முழுக்க விரவி இருந்தது. அவரிடம் அசோசியேட்டாக ஒரு படத்தில் பணிப் புரிந்த பாதிப்பாக இருக்கலாம். ஆனால் இம்முறை அருண் விஜய்யை வைத்து அருமையான ஆக்ஷன் படத்தைக் கொடுத்துள்ளார்.

ட்ராவல் ஏஜென்சி வைத்திருக்கும் செல்வாவிற்கு அவரது காதலி ப்ரியாவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எதிர்பாராவிதமாக மஹா என்னும் ரவுடியைக் கொன்று விட்டான் என செல்வா மீது பழி வந்து விழுகிறது. செல்வாவைக் கொன்று பழி வாங்க மஹாவின் தம்பி குமார் தேடுகிறான். மஹாவை யார் கொன்றது, செல்வா
எப்படித் தப்பிக்கிறான் என சுவாரசியமாக முடிச்சு அவிழ்தல்களுடன் படம் முடிகிறது.

சுமார் பதினைந்து படங்களுக்கு மேல் நடித்து விட்ட அருண் விஜய்யிற்கு லட்டு மாதிரி கிடைத்திருக்கும் வாய்ப்பு. அதை அருண் விஜய் பயன்படுத்திக் கொண்டார் என்பதை விட இயக்குனர் அருண் விஜய்யை படத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தி உள்ளார் என்றே சொல்ல முடியும். இது கண்டிப்பாக நாயகனின் படமல்ல. ஓர் இயக்குனரின் படம். இந்த வாய்ப்பு அமைந்த வகையில் அருண் விஜய் அதிர்ஷ்டசாலி என சொல்லலாம். ஏனெனில் அவர் தனது அனைத்து படங்களிலுமே உயிரைக் கொடுத்து தான் நடிக்கிறார். மம்தா. விஷாலுடன் சிவப்பதிகாரத்தில் அறிமுகமாகி இருந்த மலையாளப் பட நாயகி. புற்று நோயில் இருந்து மீண்டு வந்த உண்மையான நம்பிக்கை நாயகி. படத்தில் பாடல்களுக்கு மட்டும் ஆடி மறையும் நாயகியாக இல்லாமல் நடிக்கவும் செய்திருக்கார்.

Mamtha

படங்கள் பார்த்து பார்த்து அடுத்த காட்சிகளை யூகிக்க முடிகின்ற அளவுரசிகர்கள் தேறி விட்டனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யும் அளவிற்கு கதை சொல்லும் இயக்குனர்களால் இயலவில்லை. இது சமீபமாக வெளி வந்த அனைத்து ஆக்ஷன் படங்களுக்கும் பொருந்தும். கேள்விப்பட்ட கதை போல் இருந்தாலும் மகிழ் திருமேனி திரைக்கதையில் பின்னிப் பெடலெடுத்திருக்கார். கிளைக் கதைகள் திடீர் திடீரென்று தோன்றி மறைகிறது. ஆனால் அது படத்தின் ஓட்டத்தை எள்ளளவும் பாதிக்கவில்லை. ஸ்ரீகாந்த மற்றும் பிரவீனின் படத்தொகுப்பு படத்தின் மாபெரும் பலம். பாடல்களை விட பின்னணி இசையில் மிரட்டி இருக்கார் தமண். படத்தின் தொடக்க காட்சிகளிலேயே ஒரு பழைய குடோனைக் காட்டி, பின்னணி இசையின் உதவியோடு மிரள வைக்கின்றனர். திரைக்கதையை யூகிக்க முடியாததால் படத்துடன் சுலபமாக ஒன்ற முடிகிறது. ஒன்றிரண்டு நகைச்சுவை காட்சிகளும் படத்தோடு ஒன்றி வருவதால் ரசிக்க முடிகிறது. ஆடுகளம் படத்தில் தனுஷின் நண்பராக வரும் முருகதாஸ் இப்படத்திலும் அருண் விஜய்யிற்கு நண்பனாக நடிக்கிறார். மிக இயல்பான தனது முக பாவனைகளால் அசத்துகிறார். எப்பொழுதும் போல் கருப்பாய் பெரிதாய் ஒரு வில்லன். ஆனால் மஹாவின் தம்பி குமாராக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா நாயகன் போலவே இருக்கார். அதிகம் கத்தாத காரியக்கார வில்லன்களாக இருவரும் இருப்பது ஆறுதலான சங்கதி. ‘நான் மகான் அல்ல’ படத்தில் தாதாவாகவும், இராஜபாட்டை படத்தில் காமெடி அடியாளாகவும் வரும் அருள்தாஸ் இப்படத்தில் கறிக்கடை சேகர் என்னும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாபாத்திர தேர்விலும் மகிழ் திருமேனி மெனக்கெட்டுள்ளார். தமிழ்ப்பட விதிகளை மீறாமல், “நான் பூந்தமல்லி தான்.. பேர் புஷ்பவள்ளி தான்” என கண்களுக்கு செறிவான ஒரு பாட்டை வைக்க தவறவில்லை இயக்குநர்.

Leave a Reply