Shadow

தில்லு முல்லு விமர்சனம்

Thillu mullu
1981-இல் பாலசந்தரின் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’ வெளியானது. சிவாவை நடிக்க வைத்து அப்படத்தை ரீ-மேக்கியுள்ளார் இயக்குநர் பத்ரி.
முருக பக்தரான சிவகுருநாதரிடம், பக்திப் பழமாக வேடமிட்டு வேலையில் சேருகிறான் பசுபதி.  வேடம் கலையாமல் இருக்க பொய் மேல் பொய் சொல்கிறான் பசுபதி. பசுபதியின் வேடம் எப்படிக் கலைகிறது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.
எப்பொழுதும் போல் அதிக சிரமப்படாமல், தன் கதாபாத்திரத்தை சிரித்து முகமாக ரசித்துச் செய்துள்ளார் சிவா. அவரது பலமே சீரியசான நேரத்திலும் அசால்ட்டாக வசனம் பேசுவது தான்.  “இது என்னோட ராஜினாமா லெட்டர். இது என் தம்பியுடைய ராஜினாமா லெட்டர். சைனீஸ்ல எழுதியிருக்கு” என சிவா சொல்லும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.தமிழ்ப் பேசும் நல்லுலகத்திற்கு “கலாய்” என்னும் வார்த்தையைத் தந்துள்ளார் சிவா. சிவாவால் காதலிக்கப்படும் பெண்ணாக இஷா தல்வார் அறிமுகமாகி உள்ளார். 

“உங்க வீட்டில் ஏ/சி இல்லையா?”

“இன்னும் 10 நிமிஷத்தில் கரன்ட்டே போகப் போகுது.”

என நாயகியின் கேள்விக்கு சிவா சமகால மின்தடை அவலத்தை போகிற போக்கில் பதிந்துள்ளார்.
படத்தின் நாயகன் பிரகாஷ் ராஜ் தான். வில்லன்களை அடித்துப் பறக்க வைக்கிறார். தண்ணீர் குடிப்பது போல அநாயாசமாக நடித்துள்ளார். அதே போல் படத்தின் நாயகி என கோவை சரளாவை சொல்லலாம். சந்தானம் கடைசிக் காட்சியில் மட்டும் வந்தாலும் கலகலக்க வைக்கிறார். ஆனால் உருவத்தை எள்ளல் செய்வதை மட்டும் விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். நாயகனின் நண்பனாக வரும் சூரி, படத்தின் போக்கோடு ஓட்டாமல் தனித்து இம்சிக்கிறார். ஒரே ஒரு காட்சியில் தான் வந்தாலும், இயக்குநர் வெங்கட் பிரபு படத்தின் போக்கிற்கு உதவுகிறார். டிடெக்டிவாக வருபவரின் கதாபாத்திர தேர்வும் கச்சிதம். 
பழையப் படத்தின் ஒரு வரிக்கதையை மட்டும் எடுத்துக் கொண்டு, திரைக்கதையை மாற்றி ரசிக்க வைக்கின்றனர். சிவா சூரியின் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்ட பின்பும், ஏன் பிரகாஷ்ராஜிடம் போட்டுக் கொடுத்தார் எனத் தெரியவில்லை. ஆனால் இயக்குநர் பத்ரி எதையும்  யோசிக்கவிடாமல் படத்தை ஒப்பேற்றி சுபமாக முடித்து விடுகிறார். இயக்குநருக்கு ராதிகா சரத்குமார் மேல் என்னக் கோபமெனத் தெரியவில்லை. தொடர்ந்து மூன்று நாள், “வாணி ராணி” சீரியல் பார்த்துக் கொலை செய்யும் அளவுக்கு தான் கொடுமைக்காரியாக மாறி விட்டதாகச் சொல்கிறார். பாடல்கள் தான் இம்சையாக துரத்திக் கொண்டு வருகின்றன. ‘ராகங்கள் பதினாறு’ பாடல் ரசிக்க வைக்கிறது எனினும் மிகத் தாமதமாக கடைசிப் பாட்டாக படம் முடியும் தருவாயில் வருகிறது. காலம் கடந்தும் பாடல் வரிகளில் வாழ்கிறார் கண்ணதாசன். 

Leave a Reply