ஆறு, அருவி என முற்றிலும் நீர் வரப்பின் ஈரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களுடைய மலபார் பகுதியைச் சேர்ந்தவர் நேஹா ரத்னாகரன்.
இவர் VVR சினி மாஸ்க் தயாரிக்கும், ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சின்னத்திரைப் புகழ் தீபக் நாயகனாக நடிக்கிறார்.
“மாடல், விளம்பரப் படம் என நடித்துக் கொண்டிருந்தேன். எதையும் செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் எனக்கு அதிகம் உண்டு. அப்படியே சினிமாவிலும் நடித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
கேரளத்துப் பெண்கள் நடித்தால் பிரபலமாவது தமிழில் தானே!!
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.. என்னை விட்டு விடுமா என்ன? இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
இப்படத்தில் ‘தீபிகா’ என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் ஒரு துறுதுறு வாயாடி சென்னைப் பெண்ணாக வருகிறேன். ‘மிஸ் மலபார்’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும், தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிப்பதே என் குறிக்கோள்” என்று நம்பிக்கையோடு தனது முதல் பட அனுபவத்தை பற்றி சிலாகிக்கிறார் நேஹா.
“தீபக், நடிப்பில் சீனியராக இருந்தாலும், நான் முதல் படம் நடிக்கிறேன் என்று எனக்கு உதவி செய்தார். அனைவரிடமும் தன்மையாய்ப் பழகக் கூடியவர். நகைச்சுவைப் படம் என்பதாலோ என்னவோ நான் சீரியசான காட்சிகள் நடித்தாலும் சுற்றி இருப்பவர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். எனினும் இயக்குநர் எனக்கு அனைத்துக் காட்சிகளையும் சரிவர செய்ய உதவினார்.”
படத்தின் தலைப்பு போல் ஏதேனும் தண்ணில கண்டம் அனுபவம் உண்டா என்று கேட்டபொழுது, “எனது ஊர் சுற்றிலும் தண்ணீர் மட்டுமே காணப்படும். தண்ணீரில் பயம் என்றெல்லாம் இல்லை. எனினும் ‘தண்ணியடித்து சரமாரியாக வண்டி ஓட்டுபவர்களைப் பார்த்தால், எங்கே நம்மை மோதி விடுவார்கள் என்று எனக்கு மிகவும் பயமாக இருக்கும்“ என்றார்.