Shadow

தொட்டால் தொடரும் விமர்சனம்

Thottal thodarum Tamil review

நாயகி எதைத் தொட்டதால் என்ன தொடர்கிறது என்பதே படத்தின் கதை.

காதல், அதனால் எழும் ஊடல், மெகா சீரியலில் காட்டப்படும் குடும்பப் பிரச்சனை, தமிழ்த் திரைப்படங்களின் ஆதிகாலம் தொட்டே வரும் சித்தி கொடுமை, மொக்கை போட்டே சாகடிக்கும் நாயகனின் நண்பன், கொல்லத் துரத்தும் வில்லன் என அக்மார்க் தமிழ்ப்படத்துக்குரிய சகல விஷயங்களையும் ஒன்று விடாமல் காட்சிப்படுத்தியுள்ளார் கேபிள் சங்கர். இதில் புதுமை எனப் பார்த்தால், வில்லனாக வரும் வின்சென்ட் அசோகன் ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மிரட்டியுள்ளார்.

படத்தின் தொடக்கத்திலேயே பாத்திரங்களைச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஹீரோக்கு அநாவசியமான அறிமுகப் பாடல் கிடையாது; நாயகியும் லூசு போலவோ, கவர்ச்சி உடையிலோ அறிமுகமாகவில்லை. நாயகனைக் காதலிக்க மட்டுமே அவர் படத்தில் இல்லை. துக்கம், மகிழ்ச்சி, பொறுப்புணர்ச்சி, குறும்புத்தனம், கோபதாபமுள்ள பெண்ணாக உள்ளார் நாயகி. ஆனால் படத்தின் முதல் பாதி வரைதான் அப்படியுள்ளார். பின் வழக்கமான நாயகியாகி, நாயகன் எவ்வழியோ தானும் அவ்வழி என தமிழ் சினிமா வழக்கத்திற்கு மாறி விடுகிறார். ஆனால் இந்தளவுக்கு நாயகியை தமிழ்ப்படங்களில் உபயோகித்ததே மெடிக்கல் மிராக்கிள்தான்.!

படத்தில் சட்டென ஈர்க்கும் காட்சிகள் ஏதுமில்லை என்றாலும் சலிப்பு ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் அனைத்தும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. மூச்சு முட்ட முட்ட அதீத ஹீரோயிசங்களையும், ஒரே மாதிரியான யூகிக்க முடிந்த காட்சிகளையும் பார்த்துச் சலித்துப் போன பார்வையாளர்களுக்கு, இந்தப் படம் மிகப் பெரிய ஆசுவாசத்தைத் தரும். தேவையில்லாத இடத்தில் பாடல்கள் தோன்றிக் கடுப்பேற்றாமல், கச்சிதமாக கதையோடு பொருந்தி வருகிறது. பாடல்கள், பின்னணி இசை ஆகிய இரண்டாலுமே திரைக்கதையின் போக்கிற்கு மிகவும் உதவியுள்ளார் அறிமுக இசையமைப்பாளர் பி.சி.ஷிவன்.

படத்தின் மிக முக்கியமான காட்சியில் ஏரியல் ஷாட் (Aerial shot) உபயோகித்து மலைக்க வைக்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங். இரண்டாம் பாதியில் த்ரில்லராக ஓடும் திரைக்கதைக்கு அவரது ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம். அதே போல், நாயகன் தமண் குமாரையும் நாயகி அருந்ததியும் மிக அழகாகக் காட்டியுள்ளார். இருவரின் உடையில் இருந்து பாவனைகள் வரை அனைத்து விஷயங்களுமே மிகையாகத் துருத்திக் கொண்டிராமல் மிக இயல்பாக உள்ளது. பிரம்மாண்ட அரங்க அமைப்புகள் செய்யாத மேஜிக்கை கலை இயக்குநர் மூர்த்தியின் பல்புகளும், தோரணங்களும் செய்கின்றன.

படத்தின் மையக் கதையோடு கிளைக் கதையாக ஒன்றும் திரைக்கதையில் வருகிறது. இரண்டையும் முடிவில் கச்சிதமாக இணைத்துள்ளார் இயக்குநர். அடுத்து என்னவென்று என்பதை யூகிக்க முடியாத திரைக்கதை என்பதால் படம் நல்லதொரு என்டர்டெயினராக உள்ளது.