இயக்குநர் ஆகும் கனவில் இருக்கும் நண்பனுக்காக தயாரிப்பாளர்களாகப் பரிணாமிப்பவர்களின் எண்ணிக்கை கோலிவுட்டில் கணிசமான உயர்ந்து வருகிறது. சிநேகாவின் காதலர்கள், அமர காவியம், கப்பல் போன்ற படங்களைத் தொடர்ந்து இப்பொழுது அதில் பட்ற படமும் அடக்கமும்.
பட்ற இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஜெயந்தன் மற்றும் தயாரிப்பாளர் காந்தி குமாரின் நட்பைப் பற்றி சிலாகித்த இயக்குநர் பாக்கியராஜ் தன் அனுபவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.
“நான் சேலத்துக்கு குடி பெயரந்த போது, அங்க கேரம்போர்ட் விளையாடப் போவேன். நான் ஜெயிக்கப் போற சமயத்தில் எல்லாம், ‘இப்ப பார்த்து பழனிச்சாமி இல்லையே!’ எனச் சொல்வாங்க. சரி பழனிச்சாமி ரொம்ப நல்லா விளையாடுவார் போலன்னு புரிஞ்சது. நான் போன ரெண்டு மூனு ட்ரிப்பும் அவர் இல்லை. நீங்களே ஒரு டைம் சொல்லுங்க எனச் சொல்லி, அன்னிக்கு பழனிச்சாமி கூட விளையாடினேன். நான் விளையாடத் தொடங்கும் முன், அவர் எப்படி விளையாடுறார்னு முதலில் கவனிச்சேன். சிங்கிள்ஸ் எல்லாம் கச்சிதமாகப் போட்டுடுறார். சரி நாம விளையாடலாம்னு ரெண்டு காய்களாக பாயிண்ட் பண்றேன். ஆரம்பத்திலேயே இப்படி ரெண்டு காய்களை பாயிண்ட் பண்றேனே என அவர் பயந்துட்டார்.
அப்புறம் நான் யோசிச்சேன். இங்க இருக்க அத்தனைப் பேரும் பழனிச்சாமி ஜெயிக்கணும்னு நினைக்கிறார்ங்க. அதை மீறி இன்னிக்கு ஜெயிச்சு என்னாகப் போகுதுன்னு லூசா ஆட ஆரம்பிச்சேன். அவர் ஜெயிச்சுட்டார். டீ குடிக்க வந்தப்ப, நன்றின்னு சொன்னார். எதுக்குங்கன்னு கேட்டேன். இல்ல நீங்க விட்டுக் கொடுத்தீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்னார். அப்படித் தொடங்கியது எங்க ஃப்ரெண்ட்ஷிப். நான் சென்னை படமெடுத்தப்புறம் அவர் பார்த்துட்டு இருந்த 1500 ரூபா வேலையை விட்டு சென்னைக்கு வரச் சொன்னேன். அவரும் என்னை நம்பி வந்தார். என் கூட இருந்தார். அப்புறம் சொந்தமாக படமும் தயாரிக்க ஆரம்பிசுட்டார். எதுக்குச் சொல்றன்னா.. நட்புங்கிறது இன்னிக்கு முடியுற காரியமில்லை. காலத்துக்கும் தொடரும். இந்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்றார் பாக்கியராஜ்.