Shadow

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

NSM

கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை.

29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, தன் குறைபாடுகளை மீறி சிகப்பு மனிதனாக மாறி, தன் சொந்த வெறுப்பினை மட்டும் தீர்த்துக் கொள்கிறார். அதோடு அவரது பத்தாவது ஆசையும் பூர்த்தியாகிறது.

இந்திரனாக விஷால். மிக மிகத் தெளிவாக இருக்கார். மிகை ஹீரோயிசம், காமெடிக் காட்சிகளில் விஜய்யை இமிடேட் செய்வது போன்றவற்றைலாம் முற்றிலுமாக தவிர்த்து விட்டு, கதைக்குத் தகுந்தாற்போல் மட்டுமே அடக்கி வாசிக்கிறார். தயாரிப்பாளரும் அவரே என்பதால் கூடுதல் பொறுப்பை அவர் சுமப்பது படம் முழுவதும் தெரிகிறது. படத்தின் பலமுமாகக் கூட அது உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ‘பாண்டிய நாடு’ போலவே சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டுள்ளார்.

தண்ணீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சி வலிந்து எடுக்கப்பட்ட காட்சியாக இல்லாமல், இயக்குநரும் நாயகனும் சொன்னதுபோல் கதையின் போக்கைத் தீர்மானிக்கும் முக்கியமான காட்சியாக உள்ளது. ஆனால் லட்சுமி மேனனின் கதாபாத்திரமும் காதலும் வலு பெறுவதே அந்தக் காட்சியில்தான். காதலிக்கப்பட என்று மட்டுமில்லாமல், மீராவாக நடிக்கும் லட்சுமி மேனன் கவர்கிறார். வழக்கமான நாயகி போல் அறிமுகமானாலும், அதன் பிறகு யோசிக்கும் திறனுள்ளவராக ஆச்சரியம் தரும் வகையில் மாறுகிறார். நிஜமாகவே பதினொன்றாம் வகுப்பு மாணவிதானா என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது அவரது முதிர்ச்சியான முகபாவங்களும் நடிப்பும்.

‘கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எது நடந்தாலும்.. சேரியில் இருப்பவர்கள்தான் பண்ணியிருப்பாங்க என நினைப்பா?’ என்ற மிக முக்கியமான கேள்வியைக் கோபமாகவும் அழுத்தமாகவும் கேட்கிறார் ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். கதாபாத்திரத் தேர்வினில், இயக்குநர் திரு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார் என்பதற்கு கவிஞரே சான்று. நிறைய பேசும் ஜெகனே, நாயகனின் நண்பன் பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். ‘நண்பனால் துரோகம் இழைக்கப் பட்டேன்’ என அழுகுணி ஆட்டம் ஆடுபவராக சுந்தர் ராமு. காதலின் அதீத உச்சத்தைக் காட்டிப் பயமுறுத்தும் கதாபாத்திரத்தில் அழகாய்த் தோன்றி பிரமிக்க வைக்கிறார் இனியா. அவரது கதாபாத்திரம் கொச்சையாகப் பார்க்கப்படும் வாய்ப்புகள் அதிகமெனினும், இறக்கும் முன் வில்லன் நாயகிக்கும் இனியாவுக்கும் செய்யும் ஒப்பீடு மிக முக்கியமானது. இனியா மிக அற்புதமாக நடித்துள்ளார். இனியாவின் கதாபாத்திரத்தைப் பார்க்கும் பொழுது, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ போன்ற ஒரு படத்தை இயக்கியா திரு தான் இப்படத்தின் இயக்குநரா என வியக்க வைக்கிறார். மீண்டும் நாயகனின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன்; நாயகியின் அப்பாவாக ஜெயபிரகாஷ்.

காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கரும், கலை இயக்குநர் ஜாக்கியும், ஒளிப்பதிவாளர் ரிச்சார்ட் M.நாதனின் ஒளிப்பதிவை அழகாக்க, அற்புதமாக உழைத்துள்ளனர். டிசம்பர் 2013 இல் தொடங்கி, ஏப்ரல் 2014 இல் திரைக்குக் கொண்டு வந்துவிட்டனர். படக்குழுவினரின் அசாத்திய உழைப்பு ஆச்சரியமூட்டுகிறது. நீண்ட பிளாஷ் பேக், மீண்மொரு பழி வாங்கும் கதை என்ற குறைகளை மீறியும் படம் சுபமாக முடிவது ஆறுதல்.